நாங்கள் தனித்து வாழ விரும்பியிருந்தால், போராட்டத்திற்கே இடமில்லை. ஆதிக்க சாதிக்காரர்களோடு நாங்கள் வாழ வேண்டும்; அதனால்தான் அவர்களுடன் போராடுகின்றோம். அவர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்கிற முடிவு எடுத்துவிட்டால் சண்டைக்கே இடமில்லை.
- சரண்குமார் லிம்பாலே

வாழ்க ஜனநாயக முரண்!

Dalit labours
"எங்களுக்கெல்லாம் தனி டம்ளரில்தான் டீ கொடுக்கின்றனர். புலிமேடு, கீழ்கொத்தூர், ஏப்புதூர் போன்ற இடங்களில் எல்லாம் இது சர்வசாதாரணமாக நடக்கிறது. அதுவும் கீழ் கொத்தூர் கிராமத்தில், அ.தி.மு.க.காரரான டி.கே. முருகேசன் செய்யும் தொல்லைதான் ரொம்ப அதிகம். அந்தப் பகுதியில் அவருக்கு நிறைய நிலம் இருக்கிறது. தன் நிலத்தில் வேலை செய்யும் தலித்துகள் செருப்புப் போடக்கூடாது; பெண்கள் ஜாக்கெட் போடக்கூடாது; கிளாசில் தண்ணீர் குடிக்கக்கூடாது என்றெல்லாம் அவர் கட்டுப்பாடு போட்டு வைத்துள்ளார். செருப்புக்கூட போட முடியாத நாங்க, எதுக்கு ஓட்டுப் போடணும்'' வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, அப்புக்கல் கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த அருந்ததியர்கள்தான் இக்கேள்வியை எழுப்பியுள்ளனர் ("குமுதம் ரிப்போர்ட்டர்' 9.3.2006). "நீலப்புலிகள் விடுதலைக் கட்சி'யின் ஆர். சண்முகம், இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடி வருகிறார். இக்கொடுமைகளைக் கண்டித்து, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் தலித் மக்கள் அறிவித்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட "ஜனநாயகவாதி'கள் குரலெழுப்பி வருகின்றனர். ஆனால், இந்தத் "தேர்தல் ஜனநாயக'த்தைப் புறக்கணித்தால்தான் இழந்த தங்களுடைய மனித மாண்புகளையும், உரிமைகளையும் மீட்டெடுக்க முடியும்; பொது மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று ஜனநாயகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுகின்றனர். இந்த முரண்பாடுகளுக்கிடையே ஜாதி மட்டும் நிம்மதியாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

சாணியாகிப்போன கனவுகள்!

பஞ்சாபில் மூர்த்தி கவுர் என்ற சீக்கிய தலித் பெண், தமது முன்னோர் பண்ணையார்களிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதற்காக கடந்த அய்ந்து தலைமுறைகளாக கொத்தடிமைத் தொழிலாளியாக தமது பேத்திகளுடன் சாணியள்ளி வருகிறார். "உள்ளூரில் உள்ள பண்ணையாரிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட, அய்ந்து தலைமுறைகளாக எங்கள் குடும்பம் கொத்தடிமையாக இருந்து வருகிறது. அதில் நான் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்தவள். நாங்கள் தினம் காலை 4 மணியிலிருந்து மதியம் வரை மாட்டுச் சாணியைத் தலையில் சுமந்து கொண்டு, எங்களுடைய வட்டிக் கடனைக் கழித்து வருகிறோம். என்னுடைய மாமியார் இறந்த பிறகு, எனது திருமணம் முடிந்த ஆறாவது நாளிலிருந்து நான் இந்த வேலையை செய்து வருகிறேன். ராத்தி நேரத்தில் எனக்கு சாணிக் கனவுகளாக வருகின்றன. யாரோ ஒருவர் என் தலையில் சாணியை வைக்கச் சொல்லி கத்துகிறார். யாராவது என் தலையில் சாணியைத் தூக்கி வையுங்களேன் என்று நான் கெஞ்சுகிறேன். ஆனால், யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை...'' என்கிறார் கவுர்.

நங்கல் குர்த் என்ற கிராமத்தில் மூர்த்தி கவுன் மகள் கரம்ஜித் கவுர், ஏழு பண்ணையார்களின் வீடுகளில் சாணி அள்ளி வருகிறார். இவர் 31 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். சாணியள்ளுவதன் மூலம் கடனுக்கான வட்டித் தொகையை மட்டும் கழித்து வருகிறார். தாம்காட் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தோவின் விரல்கள், மாட்டுக்குத் தீனி அறுக்கும்போது துண்டாகி விட்டன. ஆனால், பண்ணையாரிடமிருந்து வாங்கிய 7 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். வெட்டப்பட்ட விரல்களுடன் சாணியள்ளும் அவர், தனது வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்: "சாணி அள்ளும் எங்களைப் போன்ற பெண்களுக்கு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. எங்களுக்கு கண் பார்வை மங்கி விடுகிறது. எங்களின் வயிறும் ஊதிவிடுகிறது.'' இப்படியாக இன்னும் பல வாக்குமூலங்களை "தெகல்கா' (4.3.06) ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளது.

சட்டம், பண்ணையார்களை ஒன்றும் செய்வதில்லையாம்! பண்ணையார் முறை, மன்னராட்சி முறை, சர்வாதிகார ஆட்சி முறை, ஆங்கிலேய ஆட்சி முறை என எல்லா முறைகளையும் ஒழித்ததாகச் சொன்னாலும், ஜாதி முறை மட்டும் எல்லா வகையான ஆட்சிகளையும் செரித்துக் கொண்டு, தலித்துகளை நிரந்தரக் கொத்தடிமைகளாக்கி வருகிறது. இனிவரும் காலங்களிலும், எளியோரை அடக்கியாளும் பண்ணையார்களை சட்டம் ஒன்றும் செய்யாது. தலித்துகள் ஏதாவது செய்தால்தான் உண்டு.

மாதமொரு வன்கொடுமை!

மாதவிலக்கு என்பது ஒரு பெண்ணின் மிக அந்தரங்கமான பிரச்சினைகளில் ஒன்று. ஆனால், அதில்கூட தலித் மாணவிகள் தங்கள் அந்தரங்கத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்றொரு கொடுமையை இதுவரை உலகம் கேள்விப்பட்டிருக்காது. மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற ஊரில் உள்ள ஆதிதிராவிட மாணவிகள் விடுதியின் பதிவேட்டில், இவ்விடுதியில் தங்கும் மாணவிகள் தங்களின் மாதவிலக்கு விவரத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இதை "இந்தியன் எக்ஸ்பிரஸ்' (24.3.06) ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. ஓரு நாள்கள் மாதவிலக்கு தள்ளிப்போனால்கூட, விடுதியின் சமையல்காரப் பெண், இவர்களை ஒழுக்கக்கேடானவர்களாகச் சித்தரித்து, அவர்களைக் கடுமையாகத் திட்டுவாராம். இதை நியாயப்படுத்தும் விடுதியின் காப்பாளர் செல்வராணி, இப்பதிவேட்டை தினம் பார்வையிட்டு வருகிறார். இந்த விடுதியில் கழிவறை, குளியலறை உள்ளிட்ட வேறு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. குழந்தைகளின் / பெண்களின் அடிப்படை மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் இத்தகைய செயல்களை, அரசு தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்துமா?

"படிப்பு உன் ஜாதியை ஒசத்தி விடுமா?'

ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் மகன், சைக்கிளில் சவாரி செய்ய அனுமதிக்க முடியாது என்று கரூர் மாவட்டம் கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கவுண்டர்கள் மறுத்து, அவ்வாறு சைக்கிளில் சவாரி செய்த தேவராஜ் என்பவரை ஊர் நீக்கம் செய்து ஊரைவிட்டே விரட்டியுள்ளனர் ("நக்கீரன்' 22.03.06). "சைக்கிள்ல போனதுக்காக மன்னிப்புக் கேட்டு, இனிமே சைக்கிளைத் தள்ளிட்டுப் போறதா சொன்னா, ஊர்ல சேர்த்துக்கிறதா சொன்னாங்க. இதைத் தட்டிக் கேட்ட பன்னீர் செல்வம் என்கிற கவுண்டர் சாதி வக்கீலைக்கூட ஊரைவிட்டு விலக்கிட்டாங்க'' என்கிறார் தேவராஜ். இத்தீண்டாமைக் கொடுமை குறித்து ஊர்த் தலைவர் தங்கவேலு இப்படிச் சொல்கிறார்: "ஊருக்குனு சில நியாயம் இருக்கு. அதைக் கடைப்பிடிச்சாதான் மத்தவங்க மதிப்பாங்க. படிச்சிப்புட்டா மட்டும் மதிப்பு வந்திடுமா?'' வேறு எப்படிதான் ஒரு மனிதனுக்கு, மதிப்பும் மரியாதையும் வரும்? இந்த நாட்டில் பிறப்பால் ஏற்படும் ஜாதி அடிப்படையில்தான் ஒரு மனிதனின் சமூக நிலை தீர்மானிக்கப்படுகிறது. "இப்பிறவிக் குற்றத்தை' படிப்பும் மாற்றாது; பொருளாதாரம் மாற்றாது; அரசியலும் மாற்றாது; இந்த நாட்டின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் பதவியையே ஒரு தலித் வகித்தாலும் ஜாதியை மட்டும் அது ஒருபோதும் மாற்றாது. வேறு என்னதான் செய்வது? அம்பேத்கர் தன் வாழ்நாளில் இறுதியாகத் தேர்வு செய்த ஆயுதத்தால் மட்டுமே, ஜாதியை அழித்தொழிக்க முடியும். ஆனால், அண்ணலின் தீர்வு குறித்து இன்றளவும் சந்தேகத்தை எழுப்புகின்றவர்கள், சாதியை ஆராதிப்பவர்களாகவே புரிந்து கொள்ளப்படுவர்.

ஒரேயொரு இ(ஜ)ந்து இருந்தால்கூட...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது டி. சண்முகாபுரம் என்ற குக்கிராமம். இங்கு 633 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இதில் 150 ரெட்டியார் குடும்பங்கள் மற்றும் அருந்ததியர்களும் உள்ளனர். ஒரேயொரு இந்து இருந்தால்கூட, அங்கு ஜாதி கண்டிப்பாக இருக்குமே! இங்குள்ள அருந்ததியர்கள் மீது பல தலைமுறைகளாக கையால் மலமள்ளும் வேலை திணிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, சாதி இந்துக்களின் வீடுகளிலும் இவர்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்த வேலைகளை செய்ய மறுத்தால், தலித்துகள் கடுமையாகத் தாக்கப்படுவர். முத்தையன் என்பவர், வெள்ளைச் சாமி என்பவருக்கு இப்படியான வேலைகளைச் செய்ய மறுத்ததால் அவர் ஏற்கனவே செய்த வேலைகளுக்குப் பணம் தர மறுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சனவரி 17 அன்று, முத்தையனை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். எனவே த்தையன், கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெறும் பணிகளில் அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தையன் வழக்கைத் திரும்பப் பெறவில்லை எனில், அனைத்து தலித்துகளுக்கும் கையால் மலமள்ளும் வேலை மறுக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர் (ரொம்ப நல்லது. இதைத் தானே நாம் எதிர்பார்க்கிறோம். இனி, தலித் "பீ'யையும் சேர்த்து அவர்களே அள்ளட்டும்). தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி பிப்ரவரி 27 அன்று, முத்தையன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். அப்போதுதான் உலகத்தின் பார்வைக்கு இச்செய்தி தெரிய வந்தது. இக்கிராமத்திற்குச் சென்று விசாரித்தபோது, அங்கு தலித்துகளுக்கு தனி கோயில் இருப்பதையும், பொதுக் கழிவறைகளில், பொதுக் குழாய்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதையும் காண முடிந்தது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 10.3.06).

"விஷ்வ இந்து பரிஷத்' என்ற இந்து மதவாத அமைப்பு, "ஹிந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை அண்மையில் நடத்தியது. அதற்குப் பல நாளேடுகளிலும் 12.3.06 அன்று பெருமளவில் விளம்பரம் அளித்தது. அதில், "ஹிந்து சமுதாய அடித்தளத்தின் மீதுதான் அனைத்து ஜாதிகளுமே நின்று கொண்டிருக்கின்றன. ஹிந்து அடையாளம் அழிந்து விட்டால், நமது ஜாதி அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்'' என்று குறிப்பிட்டுள்ளது மிகத் தெளிவாக! இந்து அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டிய எந்தத் தேவையும் தலித்துகளுக்கு இல்லாதபோது, ஏன் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? காரித் துப்பிவிட்டு வெளியேற வேண்டியதுதானே!

 

-சரண்குமார் லிம்பாலே
Pin It