தருமபுரி ‘புத்தா வழிகாட்டிமய்யம், மூன்று நாள் முகாம் ஒன்றினை ஒருமுறை சித்தூரில் நடத்தியது. அந்த முகாமில்தான் Lesser Humans என்கிற கண்களில் நீரையும், நெஞ்சில் ரத்தத்தையும் கசியச் செய்கிற படத்தைப் பார்த்ததாக ஞாபகம். அன்றிலிருந்தே அப்படத்தைத் தயாரித்த மார்ட்டின் மெக்வானைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எண்ணம் என்னுள் பெருகியிருந்தது. கிரிக்கெட்டிலோ, டென்னிசிலோ, திரைப்படத்திலோ திடீரென புகழ் பெற்றுவிடும் மனிதர்களைப் பற்றி உடனடியாக நமக்குக் கிடைத்துவிடும் ஊடகச் செய்திகளைப் போலவோ, நூல்களைப் போலவோ, எல்லா மனிதர்களைப் பற்றியும் நமக்குச் செய்திகள் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் அம்மனிதர்கள் சமூகப் புரட்சியாளர்களாக இருந்துவிடுவார்களேயானால், நிலைமை இன்னும் மோசம்தான்!

Womanஅண்மையில் படிக்கக் கிடைத்த ஒரு நூலின் வழியே மார்ட்டின் மெக்வானைப் பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. (Endless Flith Books for Change, Bangalore - 2002). ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் ஜீடித் ஹைய்யரை அண்மையில் சென்னையிலே சந்தித்தபோது, இந்த நூலைப் படிக்கத் தந்தார். காந்திய சிந்தனையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. இந்த நூலை எழுதியுள்ள மேரி மார்ச்சல் தீகேகரா, குஜராத்தை மய்யமாகக் கொண்டு தூய்மைத் தொழிலாளர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

‘பங்கி' என்றும், ‘பக்கி' என்றும், அருந்ததியர் என்றும் இந்தியா முழுமைக்குமாக நூற்றுக்கும் மேற்பட்டப் பெயர்களோடு அழைக்கப்படும் தூய்மைத் தொழிலாளர்களை அக்கறையோடு அணுகுகிறது இந்த நூல்.

கையால் மனிதக் கழிவுகளை அள்ளுகிற, மனித மாண்பையே இழிவுக்குள்ளாக்கும், இத்தொழிலை ஒழிப்பதற்கு உழைத்தவர்களான பசவலிங்கப்பா, ஈஸ்வர்பாய் படேல், பெசவாடா வில்சன் போன்றோரின் வசையில் மிகவும் முக்கியமானவராக மார்ட்டின் மெக்வான் கருதப்படுகிறார்.

ஒரு தலித் சிறுவனுக்குரிய அத்தனை இழிவுகளையும், கொடுமைகளையும் அனுபவித்து வளர்ந்த மெக்வான், அம்மக்களுக்காகப் பணியாற்ற விரும்பி சட்டம் படித்திருக்கிறார். கொலையுண்ட தலித் மக்களுக்குச் சரியான நீதி கிடைக்க உதவ வேண்டும் என்கிற விருப்பத்தில், தடய அறிவியல் பற்றி படிப்பது வரை அவரின் ஆர்வம் நீண்டிருக்கிறது.

1986 இல் மார்ட்டினின் கண்ன் நடந்த கொலைகள் அவரின் வேகத்தை மேலும் விசையூட்டியிருக்கின்றன. கோலானாவில் நான்கு தலித் இளைஞர்கள் தர்பார் இனப் பண்ணையார்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. காயங்களோடு தப்பிய மார்ட்டின், சுடப்பட்ட தன் நண்பர்களின் உடல் மீது விழுந்து கதறியிருக்கிறார். ‘உங்களின் மரணம் ஒருபோதும் வீணாய்ப் போகாது'' அவர் மனம் சூளுரைத்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் கழித்து அவரின் முயற்சியால் குஜராத்திலிருக்கும் ரான்பூல் நிவசார்ஜன் அறக்கட்டளை உருவாகிறது. இன்று அது அகமதாபாத்தை மய்யமாகக் கொண்டு இயங்கி வருகிறது. குஜராத்தின் தந்தூகா வட்டத்தில் உள்ள ரான்பூர் நகராட்சியில், தலையிலே மனிதக் கழிவுகளை சுமந்து செல்லும் நிலை ஒழியாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் மார்ட்டின். ஓராண்டுக்கு பதிமூன்று லட்சம் ரூபாய் அளவில் வருவாய் வருகின்ற அந்த நகராட்சியில், தேய்ந்துபோன துடைப்பத்தை மாற்றித்தர வேண்டி தூய்மைப் பணியாளார்கள் ஒரு போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நிதி ஒதுக்கீடு இல்லை என்று நகராட்சி நிர்வாகம் அதைக்கூட மறுத்துவிட்டிருக்கிறது.

தூய்மைத் தொழிலாளர்கள் பற்றிய அவலங்களை ஏற்கனவே செய்தித்தாள்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருந்தும், வருகின்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘அந்த மக்களுக்கு கையுறைகளையும், துடைப்பங்களையும், தள்ளுவண்டிகளையும் வழங்கலாம்' என்று சொல்கிறார்களே ஒழிய, இந்த இழிதொழிலை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதில்லை என்பதில் எரிச்சலோடு இருந்த மார்ட்டினுக்கு உள்ளூர கோபம் புகையும்.

‘துப்புரவுத் தொழிலை ஒழி. தலையில் மலம் சுமக்க முடியாது. உலர் கழிப்பறைகளை ஒழி. அங்கிருப்பது பணக்காரர்களின் மலம். நாற்றம் தாங்க முடியாதபடி ஆகிறபோதுதான் அரசு ஏதாவது செய்ய வருகிறது. ‘பங்கி'களின் மீதுள்ள கருணையினால் அல்ல'' என்று சொல்லிக் கொண்டிருந்த மார்ட்டின், துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு, 1995 இல் ஒரு வழக்கினைத் தொடர்ந்தார். அதுவரை அங்கிருந்த தூய்மைத் தொழிலாளர்களுக்கு, உலர் கழிப்பறைகள் கட்டுவதும், மலத்தைத் தலையில் சுமப்பதும் அரசால் 1993 சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இப்படி ஒரு கொடுமை இன்னம் நீடிக்கிறது என்பது பொது சமூகத்துக்கும் தெரியவில்லை.

Martin Mekwanவழக்குத் தொடர்ந்த பிறகு எல்லாம் வழக்கம் போலவே நடந்தேறின. உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம் 1993 அய் ஏற்றுக் கொள்ளாமல் இருந்த குஜராத் அரசு, குற்றச் சாட்டை மறுத்தது. ரான்பூர் நகராட்சி தனது வழக்கறிஞர் மூலம் ‘தலையில் மலம் சுமக்கிற நடைமுறை இங்கில்லை. நிவசார்ஜன்ஆட்கள் துப்புரவுப் பெண்களுக்கு காசு கொடுத்து, அவர்களைத் தலையில் மலம் சுமப்பது போல் படம் எடுத்து ஏமாற்றுகிறார்கள்' என்று வாதிட்டது.

பொய் வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கிறார் மார்ட்டின் என்று நீதிபதிகள் கருதும் சூழல் வந்தபோது, தமது வழக்கறிஞரான ஷில்பா ஷாவைக் கொண்டு நீதிமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் மார்ட்டின். ‘இந்த நீதிமன்றத்தில் இருக்கிற யாராவது ஒருவர் ஒரு கூடை மனித மலத்தை சுமந்து கொண்டு புகைப்படத்துக்கு நின்றால், அவருக்கு நிவசார்ஜன் அறக்கட்டளை ஒரு லட்சம் ரூபாயை வெகுமதியாக வழங்க முன்வருகிறது.''

நீதிமன்றம் அப்படி ஒரு அறிவிப்பை எதிர்பார்த்திருக்காது. அங்கு யாரும் வாய் திறக்கவில்லை.

அதன் பிறகு மார்ட்டினின் குழு வேகமாகச் செயல்பட்டு, துப்புரவுப் பணியாளர்களின் சம்பளப் பதிவேடு, கழிப்பறைகளை சுத்தப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட கூலிச்சான்றுகள், ரான்பூர் நகராட்சியில் இப்பணியாளர்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசிய கூட்டக்குறிப்புகள் என்று முடிந்ததையெல்லாம் ஆதாரமாகச் சேர்த்து நீதிமன்றத்தில் அளித்தது. இன்னும் ஒருபடி மேலேபோய், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராய் இருந்த ஈஸ்வர்பாய் படேலை தனது சாட்சியாகக் கொண்டுவந்து நிறுத்தியது. இறுதியில் நீதிமன்றம், ரான்பூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் நிலையை ஆராய ஒரு குழுவினை அமைத்தது. அரசு கையால் மலம் அள்ளும் தொழிலை குஜராத்தில் தடை செய்வதாக அறிவித்து, அவர்களின் மறுவாழ்வுக்கென நிதியை ஒதுக்கியது.

இந்த நீண்ட போராட்டத்தில் மார்ட்டின் மெக்வான் எதிர்கொண்ட தடைகளைக் காட்டிலும், இந்த அவலத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கையாண்ட முறைகள் கவனத்துக்குரியவையாகும்.

துப்புரவுப் பணியாளர்களைப் பற்றிய உண்மைச் செய்திகளை பத்திரிகைகளில் கொண்டுவந்தது; Lesser Humans போன்ற படங்களைத் தயாரித்தது. இத்தொழிலில் உழன்று கொண்டிருக்கிறவர்களைத் திரட்டி பொது விசாரணையை நடத்தியது; இம்மக்களைப் பற்றிய மனதைப் பிழியும் கதைகளை துண்டறிக்கைகளாகவும், கையேடுகளாகவும் தயாரித்துப் பரப்பியது; இந்த இழிதொழிலை ஒழிப்பதற்கு குஜராத்தில் உள்ள அத்தனை அரசு சாரா நிறுவனங்களையும் ஒன்றாக தமது வழக்குக்கு ஆதரவாகத் திரட்டியது என்று பலவற்றைப் பட்டியலிடலாம். இந்த நடைமுறைகள் இன்றும் இந்த இழிதொழில் நீடித்திருக்கும் பகுதிகளில் செயல்படுத்த உகந்தவை. தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்களுக்கு மாற்றுத் தொழிலை பயிற்றுவிப்பதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்திவரும் மார்ட்டின் மெக்வான், தூய்மைத் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கற்பிப்பதில் இன்று அதிக அக்கறை செலுத்துகிறார்.

அக்குழந்தைகளுக்கு அம்பேத்கர், ஜோதிபா புலே, சாவித்தி புலே, பெரியார், நாராயண குரு ஆகியோர்களைப் பற்றிய நூல்களைப் படிக்க வழங்குவதாகச் சொல்கிறார். இளம் வயதிலேயே சுயமரியாதையை வளர்ப்பது, அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் என்பது அவர் நம்பிக்கை. அது உண்மைதான்.

இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள ‘பங்கி' இன மக்களின் வாழ்க்கை அதிர்ச்சி தரக்கூடியது. அம்மக்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு கழிப்பறைகளை சுத்தப்படுத்துவதோடன்றி, தமது உணவுக்கென இரவிலோ காலையிலோ சாதி இந்துக்களின் வீடுகளுக்கு இரக்கச் செல்வார்கள். பெரும்பாலும் பெண்களும், சிறுவர்களும் சேர்ந்து போவது வழக்கம். இப்படிப் போகும் போது ஒரு ‘பங்கி' இனத்தாயின் மிக முக்கிய கடமை, தன் பிள்ளைக்கு ஆதிக்க சாதி ஆட்களிடம் எவ்வளவு தொலைவில் நின்று பேச வேண்டும், எப்படி இரக்க வேண்டும், எப்படி அவர்களைத் தீண்டாமல் இருக்க வேண்டும் என்று கற்பிப்பதே, அவர்கள் இரக்கப் போகும் வீடுகளில் நாய்களுக்கும், அவர்களுக்குமாக அருகருகே ‘ராமபாத்திரா' என்ற தட்டுகளை வைத்திருப்பார்கள். நொந்து நாறும் உணவை வழங்கினாலும் அம்மக்கள் முகம் சுளிக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அம்மாதிரியான உணவினை வழங்குகிறபோது முகம் சுளிக்கவும், மறுக்கவும் செய்கிற ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கும் உரிமைகூட அம்மக்களுக்குக் கிடையாது.

கோதுமையை மிதிக்கடிக்கிறபோது, கதிர்களைத் தின்று மாடுகள் கழியும் சாணத்தை எடுத்துவந்து, அதை நீரில் கரைத்து, செக்காத கோதுமை மணிகளைப் பித்தெடுத்துப் பயன்படுத்துகிற கொடூரமான நிலையும்கூட, அம்மக்களிடையே அங்கு நீடிக்கிறது.

Endless Filthஆதிச் சமூகத்திலிருந்து நவீனச் சமூகம் வரையிலாக, மனிதர்கள் எப்படி மனிதக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகளை மேற்கொண்டனர் என்பதில் சிலவற்றையும் இந்த நூல் பட்டியலிடுகிறது.

பழைய இந்து புராணங்களான ‘நிரதிய சம்ஹித்தா'விலும், ‘வாஜசனேயி சம்ஹித்தா'விலும் அடிமைகளின் பதினைந்து பணிகளில் ஒன்றாகவும், சண்டாளர்களின் பணிகளில் ஒன்றாகவும் மனிதக் கழிவை அகற்றும் கடமை குறிப்பிடப்பட்டுள்ளது. போல் சிறைபிடிக்கப்பட்ட அடிமைகள் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பவுத்தம் மேலோங்கி இருந்த மவுயர்களின் காலத்தில், துப்புரவுப் பணியாளர்களைக் கண்காணிப்பது நகரத் தலைவர்களின் பணிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, சமஸ்கிருதப் பண்டிதர்களின் ஆலோசனைக்கு ஏற்ப கழிவறைகளிலே காகிதத்திற்குப் பதிலாக துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தத் துணிகளைத் துவைப்பதற்கு தலித் இன மக்களான பங்கிகளே கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். படையெடுப்பின்போது வெள்ளை அதிகாரிகளின் மலம் கழிக்கும் பெட்டிகளை (கம்மோடுகள்) சுமந்து செல்ல பங்கி இன மக்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கல்லூரிக்குப் பேசப்போயிருந்தேன். பேச்சு முடிந்தவுடன் மாணவர்களிடம் இருந்து நிறைய கேள்விகள் வந்தன.

அதிகம் கேள்விகள் வந்தது மகிழ்ச்சியைத் தந்தது. கேள்விகள் எப்போதுமே வேர்க்கால்களின் கூரிய முனைகளைக் கொண்டிருக்கின்றன. குறுத்தெலும்பின் மென்மையைக் கொண்டிருந்தாலும், அவை பாறைகளையும் துளைக்கக்கூடியவை. இந்த வேர்க்கால்கள் படரும் இடத்தை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு மேலெழவோ, விழாமல் இருக்கவோ முயல்கின்றன. சில நேரங்களில், அவை நீர் ஆதாரத்தை நோக்கிப் பயணம் செய்கின்றன. வெகுசில நேரங்களில் மட்டும், முன்முடிவுகளைக் கொண்ட விடைகளின் முக முடியைப் பூண்டு கொண்டு வெளிப்படுகின்றன.

மாணவர்களின் கேள்விகளை எதிர்கொண்டபோது, அவர்களிடம் பேசத்தான் ஆட்களில்லை என்று தோன்றியது. மாணவர்களை ஒருங்கிணைக்கும் வலுவான அமைப்புகள் எதுவும் இல்லை. இருக்கின்ற சில அமைப்புகளில் மாணவர்கள் இணைவதைத் தடுக்க நெருக்கடிகளும் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. வகுப்பறைகளோ, அவற்றின் சுவர்களைப் போலவே வலுவான எல்லைகளைக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களை விதிகளும், கட்டுப்பாடுகளும் நெருக்குகின்றன. மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுடன் பேசி, விவாதிக்க பரந்த அளவிலான கல்விக் கழக அமைப்புகள் தேவைப்படுகின்றன.

1945 இல் மும்பையில், ‘மக்கள் கல்விக் கழகத்தை' அம்பேத்கர் தொடங்கிய போது, அவரின் திட்டம் கற்பிப்பதற்கானதொரு அமைப்பை உருவாக்குவதாகத்தான் இருந்தது. அதன் பலனாகவே சித்தார்த்தா கல்லூரி உருவானது. 1950 இல் அக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளிவந்த முதல் அணியினர்தான் மகாராட்டிரத்தின் இலக்கியத்திலும், சமூகத்திலும், அரசியலிலும் மாற்றங்களைச் செய்தனர்.

மாணவர்களிடமிருந்து வந்த கேள்விகளில் ஒன்று: ‘ஏன் தலித் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்?' நிறைவேறாத ஆசைகளுடன் உலவிக் கொண்டிருக்கும் ஆவிகளைப் போலத்தான் இப்படியான கேள்விகள் உலவிக் கொண்டிருக்கின்றன! இடஒதுக்கீடு பற்றியும் அதன் நியாயங்கள் பற்றியும் பலகாலமாக இங்கே பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாக கல்வி கற்கும் உரிமைகளும், அரசு மற்றும் அதிகாரத் துறைகளில் பங்கேற்கும் உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மறுக்கப்பட்ட தன் உரிமைகளைப் பெற்றிடும் வகையில்தான் மதிப்பெண் வரம்பைத் தளர்த்துதல், வயது வரம்பைத் தளர்த்துதல் போன்றவை வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த வகையான நடைமுறைகள் யாருடைய உரிமைகளையோ, பங்கையோ பறித்தும், மறுத்தும் செய்யப்படுவதல்ல.

சொல்லப்போனால், மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்படுமானால், தலித் மக்களுக்கு இருபத்தைந்து விழுக்காட்டு ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். ஆனால், அத்தனை விழுக்காடு அளிக்கப்படுவதில்லையே!

கல்வி கற்ற தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் எண்ணிக்கை இடைவெளி, எப்போதும் அதிகரித்தேதான் இருக்கிறது. தலித் மக்களில் படிக்காதவர்களின் சதவிகிதம் 63. இதுவே தலித் அல்லாதவர்களிடம் 42 சதவிகிதம். அதிலும் குறிப்பாக 19 சதவிகிதம் பெண்களே படித்திருக்கிறார்கள். ஆனால், இது பிற சமூகங்களில் 30.62 சதவிகிதமாக இருக்கிறது. பள்ளிகளை விட்டு இடையில் நின்றுவிடும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை கவலைக்குரிய ஒன்று. தொடக்கப்பள்ளி அளவில் 49.35 சதவிகிதம், நடுநிலைப் பள்ளி அளவில் 67.77 சதவிகிதம், உயர்நிலைப்பள்ளி அளவில் 77.65 சதவிகிதமாக இடைநிற்றல் எண்ணிக்கை இருக்கிறது. (தலித், பழங்குடியினர் குழந்தைகள் கல்விநிலை சாரதா பாலகோபாலன் மற்றும் ரம்யா சுப்ரமணியன் ஆய்வு, 2003. HRFDL கையேடு)

S.Ramakrishnan‘பெண் கவிஞர்கள் தமது அங்கங்களைச் சொல்லி பச்சை பச்சையாக எழுதுகிறார்கள். தங்கள் பிள்ளைகளிடம் தாங்கள் எழுதியதையோ, மஞ்சள் பத்திரிகையையோ கொடுத்துப் படிக்க வைப்பார்களா இவர்கள்? இப்படி இன்னொரு கேள்வி.

பெண்களின் கவிதைகளை ‘பச்சை பச்சையாக' என்று புரிந்து கொள்வது, கவிதையைப் புரிந்து கொள்வதின் இயலாமையைக் காட்டுவதாகும். மாணவர்கள் மட்டுமல்ல, பொது சமூகம், எழுத்தாளர்களும்கூட, பெருவாரியாக இப்படி நினைக்கிறார்கள். சாதிய அடையாளத்தை ஒழிப்பதற்காக தமது சாதியை விடுதலைக் கருத்தியல் நோக்கில் தலித் மக்கள் பயன்படுத்துவது போலத்தான் பெண்கள் தம் உடலை கவிதையில் பயன்படுத்துவதும் நேர்கிறது. சனாதனப் பார்வையில் தீட்டானதாகவும், அருவருப்பானதாகவும் (நுகர்வுப் பார்வையில் கவர்ச்சியானவைகளாக அவைகளே முன்வைக்கப்படுகின்றன) கருதப்படும் பெண் உடல்தான் இங்கே நிலவும் ஆண்மய்ய சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கிறது. இதை உடைக்க பெண் தனது உடலையே கருவியாகப் பயன்படுத்துவதில் எப்படித் தவறிருக்க முடியும்? இந்த அம்சம் கவிதைகளிலும் வருகிறது. தலித் படைப்பாளிகள் தமது படைப்புகளில் வெளிப்படையான தன்மையுடன் வசவுச் சொற்களையும், எழுத்தில் விலக்கி வைக்கப்பட்ட சொற்களையும் கையாளுவது போலத்தான் பெண் கவிஞர்களின் சில கவிதைகளில் வரும் சொற்களை நாம் அணுக வேண்டும்.

ஆனால், ஒரு ஆண்மனோபாவ வாசிப்புடன் அக்கவிதைகளை அணுகுகிற எல்லாருமே, மிக மலிவானதொரு குற்றச் சாட்டாக அசிங்கம், ஆபாசம் என்று குரல் எழுப்புகின்றனர். ஆண்கள் எழுதாத அசிங்கம் இல்லை; ஆண்கள் எழுதாத ஆபாசம் இல்லை. ஆனால், ஆண்களை நோக்கி யாரும் ஏன் ‘பச்சை பச்சை'யாக எழுதுகிறீர்கள் என்று கேட்பதில்லை. திரைப்படங்கள், ஊடகங்கள், அரசியல் மேடைகள், மக்கள் புழங்கும் வெளிகள் இப்படி எல்லாமே ஆபாசமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளிலேயே மூழ்கி உழன்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்தினுள்ளிருந்து ஒரு மெல்லிய சத்தமாக ஒலிக்கும் பெண் கவிஞர்களின் குரலை சகிக்கின்ற அளவு இங்கே யாருக்கும் மனம் இல்லை.

நடந்து முடிந்த ‘குட்டி ரேவதி' பெயர் பயன்பாட்டு சர்ச்சையில் ஆண் சமூகத்தின் மனநிலையை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். ‘உயிர்மை' (பிப்2006) இதழைப் படித்தால் இது மிகத் தெளிவாகப் புரிந்துவிடும். ‘உயிர்மை' (பிப்ரவ 2006) இதழில் மனுஷ்யப் புத்திரன் எழுதியுள்ள தலையங்கம், பெண் கவிஞர்கள் காட்டிய எதிர்ப்பைப் போல நூறு மடங்கானது. ஆண் வக்கிரம் பிடித்தது. அதில் அவர் பயன்படுத்தும் சொற்கள் கையாளப்பட்ட முறையும் தொனியும் மிகுந்த வன்மம் கொண்டவையாகக் கருதக்கூடியவை.

‘ஒருவர் தன்னுடைய துப்பட்டாவைக் கழற்றி வீசி ஆபாச சைகை காட்டுவது...'

‘இலக்கிய வெளியில் படைப்பாளியின் முகமுடி அணிந்த லும்பன்கள்'

‘பெண் ‘போராளி'களுக்குத்' துணையாக வந்திருந்த சில ஆண் ‘போராளி'கள்...'

‘சுகிர்தராணி என்பவர்...'

‘சுகிர்தராணியின் கவிதைகள் பெண் மொழி என்ற போர்வையில் எழுதப்படும் கலை உணர்வற்ற, பிளாட்பார பின் அடித்த புத்தகங்களின் மறுவடிவம்...'

ஒரு பெண் கவிஞரின் எதிர்ப்பு செயலை ‘தினத்தந்தி' மொழியைவிட கொச்சையாக ஆபாச சைகை என்று எழுதுவதும், பெண் கவிஞர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை லும்பன்கள், கோமாளிகள், நிலைப்பாடுகள் ஏதுமற்றவர்கள் என்று இழிவுபடுத்துவதும் மூர்க்கம் கொண்டு திருப்பித் தாக்கும் வெறி.

‘அவ மூஞ்சியும் அவ ஆளும், கையில் துப்பட்டாவ எடுத்து சுத்திக்கிட்டு இருக்கா?'

என்ற வசனத்துக்கு எதிர்ப்புக் காட்ட முனைந்தவர்கள் வேறெப்படி எதிர்ப்பு காட்ட முடியும்? போராட்ட வழிமுறைகளை எப்போதுமே நடந்து முடிந்த எதிர்ச்செயல்பாடுகள்தான் தீர்மானிக்கின்றன. இலக்கியவாதியான ராமகிருஷ்ணன், குட்டி ரேவதி என்ற பெயரை உள்நோக்கமின்றியோ, தவறுதலாகவே ஒரு பாத்திரத்தின் மதிப்பைக் குறைக்கும்படியான இடத்தில் எப்படிப் பயன்படுத்த முடியும்? அப்படியென்றால் ‘அரசியலில் மிகப் பிரபலமான பெயர்களை வில்லன் பெயராகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இவர் எழுதுவாரா? பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எஸ். ராமகிருஷ்ணனும், லிங்குசாமியும் உரிய பதிலைச் சொல்லவில்லை. இந்தப் பெண்களுக்குப் போய் என்ன சொல்வது என்ற நினைப்பின்றி, இதற்கு வேறு பொருளில்லை. இவற்றோடு மனுஷ்ய புத்திரனும் இணைந்து கொண்டு தனது பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் நடந்த எதிர்வினையை எவ்வளவு மோசமானதாகக் கருதுகிறாரோ அதே மோசமான தொனியில் ‘உயிர்மை'யில் எழுதியிருக்கிறார். பொது மனிதர்களிடம் மேலெழுந்தவாரியாக செயல்படும் ஆண்மைய்ய சிந்தனை வேறு வேறு வடிவங்களில், தம்மை உயர்ந்த படைப்பாளிகள் என்று கருதிக் கொள்கிறவர்களிடம் செயல்படுகிறது.

நேற்றுவரை தங்களைத் தாங்களே ‘நாயே' என்று திட்டிக் கொண்டும், எழுதிக் கொண்டும் திரிந்த தமிழின் ‘உயர்ந்த' படைப்பாளிகள் எல்லாரும் ஓரணியில் நின்று அறம், நுண்ணுணர்வு எனப் பேசுகிறார்கள். அருவருப்பாய் இருக்கிறது.

-அழகிய பெரியவன்
Pin It