தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, செங்கை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய 6 இடங்களில் அரசினர் கல்லூரிகளும், சேலத்தில் மட்டும் ஒரு தனியார் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. 6 கல்லூரிகளில், அய்ந்தாண்டு மாணவர்களிடம் நான்காயிரத்து இருநூற்று இருபத்தைந்து ரூபாயும், மூன்றாண்டு மாணவர்களிடம் நான்காயிரத்து நூற்று எழுபத்தைந்து ரூபாயும் கட்டணமாகப் பெறப்படுகிறது.

சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் அரசு வழி நிரப்ப 480 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு, அரசு மற்ற கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்துள்ள கட்டணத் தொகையே வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், சேலம் தனியார் சட்டக் கல்லூரியில் அரசு ஆணைப்படி வசூலிக்காமல் பதினேழாயிரத்து இருபத்தைந்து ரூபாய் வசூல் செய்கின்றனர்.

இந்தக் கல்லூரி 1984 ஆம் ஆண்டு முதல் (22 ஆண்டுகளாக) பாவை அம்மாள் வையாபுரி கல்வி அறக்கட்டளையின் கீழ் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசு அறிவித்தபடி கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை சட்டக்கல்லூரி முன்னாள் பேராசிரியரான தனபாலன், இக்கல்லூரியின் முதலாளியாக இயங்குகிறார். உயர் நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக 14,000 ரூபாய் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்க ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையால் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க, அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த பகற்கொள்ளையைத் தடுக்க, மாணவர்கள் ஜனநாயக முறையில் கோட்டையில் மனு அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு சட்ட அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். தவறு செய்பவர்களை உடனடியாக தண்டித்து, அரசு அறிவித்த கட்டணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டுமென்று அமைச்சர் ஆணையிடாமல், பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். மூன்று நாட்களில் முடித்துத் தரும்படி மாணவர்கள் கேட்டனர். அமைச்சர் ஒத்துக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மாணவர்களின் போராட்டம் தொடர் போராட்டமானது.

இச்சூழலில், சட்டமன்றத்தில் இது குறித்து பிரச்சனை எழுப்பிய பிறகும் இன்றைய முதல்வர், “அரசு நடத்தும் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மாணவர்கள் போராடவில்லை. தனியார் நடத்தும் சட்டக் கல்லூரியில் கட்டணத்தைக் குறைக்கத்தான் போராடுகிறார்கள்’ என்றும், “இருந்தாலும் தனியார் சட்டக்கல்லூரி நடத்துபவர்களிடம் பேசி ஒப்புக் கொள்ளச் செய்ய அரசு முயற்சி எடுக்கத் தயாராக உள்ளது. மாணவர்களில் பலர் போராட்டத்தில் ஈடுபடத்தயாராக இல்லை. இருந்தாலும் மாணவர்களை சிலர் தூண்டிவிடப் பார்க்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இன்றைய மாணவர்களின் போராட்டம் தற்போதைய அரசுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. ஏற்கனவே, முந்தைய அரசிடம் மாணவர்கள் இப்பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். சேலம் நகரிலேயே அரசின் கவனத்தை ஈர்க்க, சில போராட்டங்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.

அரசு ஆணைப்படி கட்டணத்தை வாங்காமல், தனியார் கல்லூரி நிர்வாகத்தின் விருப்பப்படி கல்வியை காசாக்கி கொள்ளையடிப்பதைக் கண்டிக்காமல், கட்டணத்தைக் குறைத்தால், கல்லூரிக்கு இழப்பு ஏற்படும் என்று கல்லூரி முதலாளி தனபால் (தி.மு.க. காரர்) கூறுவதை அரசு கேட்டு, அதனை மக்களிடம் கூறினால் என்ன அர்த்தம்? இந்த வியாபாரத்தில் நிர்வாகத்திற்கு இழப்பு வந்தால், கல்லூரியை அரசிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குப் போக வேண்டியதுதானே. எதற்கு இந்த விளக்கங்கள்?

பொறியியல் கல்லூரிக் கட்டணத்தை - 12,550 ரூபாயிலிருந்து 7,550 ரூபாயாக குறைத்த அரசின் ஆணையை, ஏறத்தாழ 255 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஏற்றபோது, சேலம் சட்டக்கல்லூரி நிர்வாகம் மட்டும் ஏற்காமல், தமிழக அரசுக்கு நாட்டாண்மை பாணியில் பதில் தந்தால் என்ன அர்த்தம்?

எனவே, தமிழக அரசு சேலம் சட்டக் கல்லூரிக்கு அரசு அறிவித்தபடி கட்டணத்தை வசூல் செய்ய ஆணையிட்டு, தனியார் வசம் உள்ள அக்கல்லூரியை அரசுடைமையாக்க வேண்டும். செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியிலும் அரசுக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

-பொ.ரத்தினம்
Pin It