கோழி முட்டைகளை வாங்கும் வசதியில்லை; காக்காய் இடும் முட்டைகளை திருடி, அப்படியே முட்டைபோல் விழுங்கலாம்; இது விலை இல்லாத முட்டை. இதேபோல் கோழி, ஆட்டுக்கறியை விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு, அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டுக்கறி. ஆனால், ‘மதவெறி’ ஆட்சியாளர்கள் மாட்டுக் கறிக்குத் தடைப் போட்டு, எளிய மக்களின் உணவு உரிமையைப் பறிக்கிறார்கள். நல்லவேளை, கருப்பு காக்காய் வணங்கப்படும் ‘புனித’ப் பறவையாக இல்லை. இல்லையேல், ‘காக்கா முட்டைக்கும்’, காவிக்காரர்கள் தடைகேட்டுப் போராடக் கிளம்பியிருப்பார்கள்.

‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை வந்து விட்டாலே, சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதிகள் அதிகரித்து, அதனால் இந்தியாவுக்குள் நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வந்து சேரும். ஜாதிய தீண்டாமைகள், பழமை வாதங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று கணித்தவர்கள் உண்டு. ஆனால், என்ன நடந்தது? ஜாதிய-சமூக இடைவெளியை மேலும் அகலப் படுத்தி, விளிம்பு நிலை மக்களை வேகமாக மய்ய நீரோட்டத்திலிருந்து விரட்டி அடித்து விட்டது. பார்ப்பனியம் மேலும் இறுக்கமாகி, அதன் சமூகச் சுரண்டல் பன்னாட்டு நிறுவனங்களின் வழியாக நவீன முகமூடியோடு வீறு நடைபோடுகிறது. வாழ்வாதாரங்களும் இயற்கை வளங்களும் சூறையாடப்படுகின்றன. பலித்தவரை லாபம் என்ற பார்ப்பனியமும், கிடைத்தவரை லாபம் என்ற பன்னாட்டு கம்பெனிகளும் ஒரே தத்துவத்தில் கைகோர்த்து நடைபோடத் தொடங்கி விட்டன.

மக்களின் உயிருக்கே உலை வைக்கும் மருத்துவக் கழிவுகளையும், அணுக் கழிவுகளையும் கொட்டும் குப்பைத் தொட்டிகளாக ‘இந்தியா’ மாற்றப்படுவதை எதிர்த்துப் போராடி தூக்குத் தண்டனைக்குள்ளாகிய ஒரு புரட்சியாளன் கதை ‘புறம்போக்கு எனும் பொதுவுடைமை’. தோழர் ஜனநாதன் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

‘உலகமயமாக்கல்’ கொள்கை தூண்டுதலில் வெளிநாடுகளுக்கு பறக்கத் துடிக்கும் கணவன், மகள் பேராசையால் அவமானத்துக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகும் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் பிரச்சினையை மய்யமாகக் கொண்டு வெளிவந்த படம் ‘36 வயதினிலே’. இப்போது மற்றொரு திரைப்படம் ‘காக்கா முட்டை’.

சென்னை நகரத்தின் மய்யப் பகுதியிலேயே சமூக நீரோட்டத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு, ஊடகங்களின் வெளிச்சம் பரவாத விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் ‘உலகமயமாக்கல்’ உருவாக்கிடும் சமூக-பண்பாட்டுத் ‘தீண்டாமைகளை’ பேசுகிறது ‘காக்கா மூட்டை’. மக்களுக்காகவே கலை எனும் மானுடத் தத்துவத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் அற்புதப் படைப்பு என்று துணிந்து கூற முடியும். இளம் மனைவியின் கணவன் சிறையில். அவரைப் பிணையில் வெளியில் எடுப்பதற்கு வழக்கறிஞர் கேட்கும் தொகையைத் தர முடியாத கவலை; மன அழுத்தம். பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற அடையாளப் பெயர்களைக் கொண்ட பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத இரண்டு மகன்கள். அவர்கள் மீது பாசமழை பொழியும் அப்பத்தா.

காக்கைக்கும் ‘குப்பத்து’ சிறுவர்களுக்கும் சுதந்திரமான வெளியை தந்த அந்த பரந்த மைதானம், பன்னாட்டுக் கம்பெனியால் அரசியல் தலைவர்களின் தரகுகளோடு விலை பேசப்பட்டு விற்கப்படுகிறது. காக்கைகள் பறப்பதும்; அவர்களுக்கு அடைக்கலம் தந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதும்; வெறுமையும் சோகமும் கலந்த உணர்வுகளோடு சிறுவர்கள் அதைக் கண்டு வேதனைப்படுவதும் - அங்கே நிறுவப்பட்ட ‘பீட்சா’உணவகத்தினால் தூண்டப்பட்டு, அதை வாங்கிச் சாப்பிடும் ஆசை வெறியில், அதற்காக காசு சேர்க்கத் துடிப்பதும், அதில் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமாக - கதை நகருகிறது.

படத்தின் கதை மாந்தர்கள் அனைவருமே இயல்பாகப் பேசுகிறார்கள். எவருக்கும் பெயர் இல்லை. ‘கதாநாயகர்கள்’ என்ற பிம்பங்களை தகர்த்து, படம் முழுதும் இந்த சிறுவர்களே நாயகர்களாக வலம் வருகிறார்கள் - பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற அடையாளப் பெயர்களுடன். இவர்களின் தோழராக வரும் ‘பழரசம்’ என்பவருக்கும் அடையாளப் பெயர்தான். கதை பாத்திரங்கள் வெளிப்படுத்தும் தனித்துவமான பண்புகளும் குணங்களுமே அவர்களுக்கான அடையாளங்களாக்கப்பட்டிருக்கிறது. பணக்கார சிறுவனை அவன் வீட்டுக் கம்பிக்கு வெளியே எப்போதும் சந்திக்கும் ‘காக்கா முட்டை’ சகோதரர்களுக்கு - பணக்கார சிறுவன் அணிந்திருக்கும் உண்மை கடிகாரம்; அவர்கள் வீட்டு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாய்; சொகுசு வாழ்க்கை எல்லாம் வியப்பைத் தருகிறது; ஏங்குகிறார்கள். பணக்கார சிறுவனின் வீட்டு நாயின் விலை ரூ.25 ஆயிரம். ஆனால், இந்த சிறுவர்களின் அப்பா, பிணையில் வெளிவர ரூ.30,000 இருந்தாலே போதும்.

ஒரு பீட்சாவின் விலை ரூ.300. அதை வாங்கிச் சாப்பிட, ஒரு மாதம் முழுதும் கரித்துண்டுகளைப் பொறுக்கி விற்கிறார்கள். பணத்தைச் சேர்ந்து கடைக்குப் பேகும்போது உள்ளே நுழைய அனுமதி கிடைக்க வில்லை. காவலாளியால் விரட்டப்படுகிறார்கள். கால் சட்டைப் பையோடு எப்போதும் இணைந்திருந்த ‘பீட்சா’ படம் போட்ட விளம்பர நோட்டீசு, அப்பத்தா மரணத்திற்காக முழுக்குப் போடும் தண்ணீரில் அப்படியே அடித்துச் சென்று, சாக்கடைக்குள் போய்விடுகிறது. பேரப் பிள்ளைகளின் ‘பீட்சா’ ஆசையை நிறைவேற்ற அப்பாத்தா முயற்சிக்கிறார். ‘பீட்சா’ விளம்பரப் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, தோசையை சுட்டு, அதன் மீது பழங்களை காய்கறிகளை அடுக்கி, பீட்சாவாக்கி சாப்பிடச் சொல்கிறார். அந்த பீட்சா, அவர்களின் வாயில் இறங்க மறுக்கிறது.

படத்தின் இறுதிக் காட்சியில், ‘பீட்சா’ நிறுவனம் மேள தாளத்துடன் சிறுவர்களை வரவேற்று, பீட்சாவை சாப்பிடக் கொடுக்கிறது. வாயில் வைத்து சாப்பிடத் தொடங்குகிறார்கள். “என்னடா இது? கொழ கொழன்னு நல்லவா இருக்குது... இதுக்கு, பாட்டி சுட்ட தோசையே நல்லா இருக்குடா” - அத்துடன் படம் முடிகிறது.

ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமான செய்தி களைக் கூறுகிறது. ‘பீட்சா கார்ப்பரேட்’ நிறுவன முதலாளிக்கு ஆலோசகர்களாக வரும் அவரது வகுப்புத் தோழர், ஆர்வக்கோளாறில் முன் வைக்கும் கருத்துகள் நகைச்சுவை வெடிகளாகின்றன. கார்ப்பரேட் முதலாளியின் ஆலோசகர் குழுவில் பார்ப்பனர் ஒருவரையும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். நிலக்கரித் துண்டுகளை எடைக்கு வாங்கும் கடை உரிமையாளர், குடிபோதையில் சத்ரபதி சிவாஜி வீரனாகப் போராடி நாட்டைப் பிடித்தாலும், அவன் ஆட்சியைப் பிடிக்க முடியாமல், ‘வர்ணாஸ்ரமம்’ தடுப்பதை வசனங்களாக பேச வைத்திருக்கிறார், இயக்குனர் மணிகண்டன். ‘குப்பங்’ களிலும், ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் ‘குற்றவாளி’களாக தள்ளப்படுவதற்கான சமூகக் காரணங்களை நுட்பமாக படம் சித்தரிக்கிறது.

மிகையற்ற நடிப்பு; ஒப்பனை இல்லாத கதாபாத்திரங்கள், தெளிவான திரைக்கதை, தேசிய விருது பெற்றுள்ள இந்தப் படம், இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடுகிறது. குழந்தைகள் வழியாக, ‘உலகமயம்’ உருவாக்கிடும் - சமூகச் சீரழிவுகளை கூறும் இத்திரைப்படத்துக்கு குழந்தைகளுக்கான சிறந்த படமாக மட்டும் தேர்வு செய்தது நியாயம் தானா? சிறந்த திரைப்படத்துக்கான விருதை வழங்கியிருக்க வேண்டும். இயக்குனர் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். படத்தைப் பார்ப்பவர்கள் மனத் திரையிலிருந்து படத்தின் காட்சிகளும் பேச்சுகளும் நீங்க மறுக்கின்றன என்பதே இப்படத்தின் வெற்றி.

- கண்டு வந்தவன்

(பெரியார் முழக்கம் ஜூன் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Pin It