மருத்துவமனையின் கழிவுகள் உயிருக்கும் சூழலுக்கும் ஆபத்துகளை உருவாக்கக்கூடியவை. இவற்றை பொது இடங்களில் கொட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருக்கிறது. இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்து வதற்காக விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் கழிவுகளை ஒரு பொது மய்யத்துக்கு கொண்டு வந்து அவற்றை ‘சுத்திகரிப்பு செய்து’ அந்த மய்யத்தின் வழியாகவே வெளியேற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு மய்யம்- தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

ஆனால், சென்னையில் பல இடங்களில் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும் ஒரு நிறுவனம், இந்த விதி   முறைகளை அப்பட்டமாக மீறி  மக்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனம் காஞ்சி காமகோடி சங்கரமடம்தான், காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை. சென்னையில் நடத்திவரும் குழந்தைகள் மருத்துவமனைகளின் கழிவுகள், தனியார் வணிக நிறுவனம் ஒன்றுக்கு கிலோ ரூ.49 என்ற விலையில் நீண்டகாலமாக விற்றுக் கொண்டிருக்கும் அதிர்ச்சியான தகவல் இப்போது வெளி வந்துள்ளது. திருவான்மியூரைச் சார்ந்த ஜவகர் சண்முகம், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந் திருக்கிறார்.

தீர்ப்பாயம் இது குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.அய்.டி.க்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அவர் தனது வழக்கு மனுவுடன் இணைத்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வந்த அதிகாரி, காஞ்சி காமகோடி அறக் கட்டளையிடம் இதைக் கைவிடக் கோரிய பிறகும், நிர்வாகம்  மறுத்ததால் அவர் பதவி விலகி விட்டார். இந்த வழக்கில் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

வழக்கு தொடுத்த ஜவகர் சண்முகமும் இந்த மேலாளரும் இணைந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தீர்ப்பாயத்தில் நீதிபதி ஜோதிமணி, மருத்துவ நிபுணர் பி.எஸ்.ராவ் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த செய்தியை வெளியிட்ட தமிழ் ஆங்கில ஏடுகள், காஞ்சி சங்கராச்சாரி மடம் நடத்தும் மருத்துவமனைகளில் தான் இவை நடக்கின்றன என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்துவிட்டன.

ஒரு தனியார் மருத்துவமனை என்றே குறிப்பிட்டன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு மட்டும் உண்மையை மறைக்காமல் வெளியிட்டிருக்கிறது. உலக ‘ஷேமத்து’க்காக யாகங்கள் நடத்தும் பார்ப்பன சங்கராச்சாரி மடம்தான், இப்படி உள்ளூர் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.

Pin It