சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாஹேல் சொந்த அப்பாவையே கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். அவருக்கு வயது 86. அவர் செய்த குற்றம் பார்ப்பனரை எதிர்த்து பேசினார் என்பது தான். தந்தையின் பெயர் 'நந்த குமார் பாஹேல்'. டெல்லியிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் 'நான் பிணையில் வர மாட்டேன் என்னுடைய கருத்தை திரும்பப் பெற மாட்டேன்' என்று 86 வயது தந்தை மகனை எதிர்த்து அறிவித்திருப்பது தான்.

ஜாதி தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்தகுமார் பாஹேல் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் உரிமைக்காக போராடி வருபவர். 1970இல் புத்த மார்க்கத்தை தழுவினார். தசரா பண்டிகையில் இராவணன் உருவம் எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதற்காக இராவணன் பெருமையை பேசுகிற நூல் ஒன்றையே எழுதினார். நூலின் பெயர், ' பிரம்மன் குமார் இராவண் கோ மாட் மர்ரோ' இந்த நூல் அப்போதே கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியது.

பார்ப்பனர்களிடமிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக அப்போது காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த 'அஜித் ஜோஹி' தலைமையிலான ஆட்சி இந்த நூலுக்கு தடை போட்டது. தடையை எதிர்த்து 17 ஆண்டுகாலம் சட்டப் போராட்டம் நடத்தினார். வெற்றி பெற முடியவில்லை; ஆனாலும், பார்ப்பனர்களுக்கு எதிரான அவரது போராட்டக் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக 80% பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வேட்பாளர்களையே நிறுத்துங்கள் பார்ப்பனர், பனியா, தாக்கூர்களை விட்டு காங்கிரஸ் கட்சி விலக வேண்டும் என்று 2018ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். கட்சிக்குள் அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்த மகன் பூபேஷ் பாஹேல் அது அவருடைய கருத்து என்னுடைய கருத்து அல்ல என்று மறுக்க வேண்டி இருந்தது.

நந்தகுமார் பாஹேல், மனைவி இறந்த போது இந்து மத சடங்குகளை அவர் செய்ய மறுத்தார். பவுத்த முறைப்படிதான் இறுதிச்சடங்குகள் நடக்க வேண்டும் என்று அவர் கூறினார். மனைவி இறந்த நேரத்தில் கொள்கைக்காக மகனுடன் போராடினார். ஆனால் மகன் இந்து முறைப்படியே சடங்கு நடத்தினார். அதை தந்தை நந்தகுமார் பாஹேல் ஏற்க மறுத்துவிட்டார். கொள்கையில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று மகனுடன் தொடர்ந்து போராடி வரும் அவர் இப்போது மகன் முதலமைச்சராக இருந்தும் பிணை கேட்க மாட்டேன் என்று சிறைக்கே சென்று விட்டார்.

தந்தையை கைது செய்த பூபேஷ் வாஹேல் இப்போது மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பெரும் செல்வாக்குள்ள முதல்வராக வலம் வருகிறார். தன்னை அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார் என்று இன்றைய இந்து ஆங்கில நாளேடு (10.09.2021) விரிவான செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இவரை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 'டி.எஸ் சிங் தியோ' என்பவரை முதல்வராக்க ஏற்கெனவே இராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் முடிவெடுத்து இருந்தனர். ஆனால் பூபேஷ் பாஹேல் ஆட்சியில் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் திட்டங்கள், சட்டங்களால் அவர் செல்வாக்கு மிகவும் பெருகி அகற்ற முடியாத நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்தும் முடிவை செயல்படுத்த முடியாத நிலைக்கு பிரியங்காவும், இராகுலும் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அந்த செய்தி கூறுகிறது.

கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதியில் நந்தகுமார் வாஹேல் உ.பி யில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ஆசிரியர் நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நிராகரித்ததை எதிர்த்து நடைபெற்ற போராட் டத்தில் பங்கேற்றார். அடுத்த நாள் இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “பிராமணர்களை புறக்கணியுங்கள்; அவர்களை மீண்டும் வால்கா நதிப் பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். உங்கள் கிராமங்களில் அவர்களை நுழைய விடாதீர்கள்” என்று அவர் வெளிப்படையாக அளித்த பேட்டி தான் இப்போது அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இப்போதும், வேதங்களும், மனுசாஸ்திரங்களும், இந்து புராணங்களும், சூத்திர இழிவையும், தீண்டாமையையும் புனிதப் படுத்துகிற புனித நூலாக கருதுகிற நிலையில், எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் மட்டும் மகன் முதலமைச்சராகவே இருந்தாலும் கூட சிறைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பார்ப்பன ஆதிக்கம் அந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It