வடநாட்டில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. பெரியாரியல்வாதிகளான  நமக்கு  எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் மட்டுமே தெரிகிறார்.

இந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தார். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப் பதவி ஏற்று 10.11.1990-ல் பதவி இழந்தார்) இரவு வரை ஓட்டெடுப்பு நீண்டு, நள்ளிரவுச் செய்தியில் ‘தூர்தர்ஷன்’ ஆங்கிலச் செய்தியின் பெண் செய்தி அறிவிப்பாளர் ஒருவர் அந்தச் செய்தியை ‘VP Singh voted out of Power என்று கூறியபோது அவரின் நா தழுதழுத்து, துயரத்தோடு, அடுத்த வரி செய்தியைத் தொடர முடியாமல் தவித்ததை நாடு முழுதும் லட்சோபலட்சம் மக்கள் பார்த்தனர். வி.பி.சிங் ஒழிந்தார் என்று பார்ப்பன வட்டாரங்களும், இந்துத்துவ சக்திகளும் மகிழ்ச்சிக் கூத்தாடின. அப்போது, ஒரு செய்தியாளர் வி.பி.சிங் கிடம் கேட்டார். “பதவியை இழந்து விட்டீர்கள்; பிரதமர் பதவியை இழக்கப் போவது உங்களுக்குத் தெரியும். அந்த பதவியிலிருந்த கடைசி நாளில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று விஷமத்தோடு அந்தக் கேள்வி இருந்தது. அதற்கு வி.பி.சிங் பதில் சொன்னார்:  Gentleman, “There is no last date in the Political Calender” (நண்பரே, அரசியல் நாட் காட்டியில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது).

மற்றொரு முறை - ஒரு பார்ப்பன செய்தியாளர் விரக்தியின் உச்சிக்குப் போய், அவரிடம் கேட்டார், “நீங்கள் எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் - சமூக நீதி - சமூக நீதி என்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறீர்களே; வேறு எந்தப் பிரச்சினையுமே உங்களுக்கு தெரியவில்லையா?” என்று கேட்டார். வி.பி.சிங் பதில் சொன்னார், “நண்பரே, நான் பயணிக்கும் இடங்களுக் கெல்லாம் நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லையே” என்றார். தங்களுக்கு சாதகமான கருத்துக் களை கேள்வியாக்கி, தலைவர்களிடமிருந்து சாதகமான பதிலைப் பெறுவது பார்ப்பன செய்தியாளர்களின் வழக்கமான தந்திரம். அற்பப் பிரச்சினையில்கூட ‘அவாள் நலன்’ அடங்கி இருந் தால், அதை ஏதோ சர்வதேசப் பிரச்சினைபோல கேள்வி கேட்பது உண்டு.  அத்தகைய தருணங்களில் வி.பி.சிங் தெளிவாக சொல்லியிருக்கிறார், “உங்கள் கருத்துக்களை எனது வாய்க்குள் திணித்து பதில் பெற முயலாதீர்கள்.”

ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் ஈழத்திலே தமிழினப் படுகொலைகளை நடத்திய போது, சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் இந்திய ராணுவம் திருப்பி அழைக்கப் பட்டது. செய்தியாளர்கள் கேட்டனர், “விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீங்கள் பயங்கரவாத இயக்கமாகக் கருதவில்லையா?” என்று. வி.பி.சிங் சொன்னார், “எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரைக் குத்துவதற்கான ‘ரப்பர் ஸ்டாம்ப்’ எதுவும் எனது சட்டைப் பைக்குள் இல்லை”. இலக்கிய மொழியிலேயே பதில்கள் தெறித்து வந்தன.

அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது மதவெறிக்கு எதிராக பம்பாயில் அவர் உண்ணாவிரதம் இருந்ததால்தான். மதவெறிக்கு பலியானதுதான் வி.பி.சிங் உயிர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை, ‘இந்துத்துவா’ சக்திகள் திட்ட மிட்டுத் தொடங்கின. அப்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஆட்சியின் ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நடந்தன. சிவ சேனைத் தலைவர் பால்தாக்கரே தனது வீட்டிலிருந்து கலவரங்களுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்ததையும், சாட்சி சொல்வதற்கு ஒரு முஸ்லீம் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டதையும் கலவரங்கள் பற்றி விசாரித்த ‘ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை’ ஆணையத்தின் பரிந்துரை கூறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் வி.பி.சிங்.

1993 ஜனவரி முதல் வாரத்தில் கலவரம் தீவிரமானவுடன் சென்னையிலிருந்து  பெங்களூர் போய் அங்கே தமது கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசிவிட்டு, கலவரத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற பதைப்பில் நேராக பம்பாய் போகிறார். கலவரத்தை ஆட்சியாளர்களும், மதவெறி வன்முறையாளர்களும் நிறுத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். பா.ஜ.க. - சிவசேனா ஆட்சி வி.பி.சிங் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது. வி.பி.சிங் உண்ணா விரதமும் தொடர்ந்தது.

வி.பி.சிங் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘இந்துத்துவா’ சக்திகள் வி.பி.சிங் உண்ணா விரதத்தைக் கேலி செய்யும் நோக்கத் தோடு, அவரது போராட்ட இடத்துக்கு அருகே ஒரு பந்தலைப் போட்டுக் கொண்டு ‘உண்ணும் விரதம்’ என்று கூறி சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு அரசும் அனுமதித்தது. இந்த நிலையில்தான் வி.பி.சிங், ‘இதற்கு என்னுடைய பதில் - இனி தண்ணீரும் நான் குடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து, தண்ணீரும் குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடந்தார். தண்ணீர் குடிக்காமலே வி.பி.சிங் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவரது உடல் நிலை மிக மோசமாகி விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை தந்த நிலையிலும், பா.ஜ.க. ஆட்சி, வி.பி.சிங் அப்படியே மரணத்தை சந்திக்கட்டும் என்று முடிவு செய்து விட்டது.

அப்போதுதான் வி.பி.சிங்கின் நம்பிக்கைக் குரிய நண்பராக எப்போதும் அவருடன் இருக்கும் சுதர்சன் லோயல்கா என்பவர் பதைபதைத்து, மகாராஷ்டிரா அரசு - வி.பி. சிங்கை கைது செய்து, மருத்துவ மனையில் உடனே அனுமதிக்காவிட்டால், ஆட்சியின் மீது கொலை முயற்சி வழக்கு தொடருவேன் என்று அறிக்கை விடுத்தார். அதைக் கண்டு பயந்த நிலையில் தான், ஆட்சி யாளர்கள், வி.பி.சிங்கை கைது செய்தனர். அவரது சிறுநீரகம், அப் போதிருந்து செயலிழக்கத் தொடங்கியது தான். அவர் வாழ்நாள் முழுதும் சிறுநீரகத்துடன் போராட வேண்டியிருந்தது. மதவெறிக் குண்டுகள் காந்தியார் மீது நேரடியாகவே பாய்ந்தது என்றால், அதே இந்துத்துவா மதவெறி வேறு வகையில் வி.பி.சிங், உயிரைப் பறித்தது.

அவர் வாழ்க்கை முழுதும் இலட்சிய உறுதி கொண்டவராகவே திகழ்ந்தார். பதவி அதிகாரங்களை கொள்கைக்காக உதறி எறிவதே அவரது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. பதவிக்காக - எல்லாவற்றையும் துறக்கக்கூடிய இன்றைய அரசியல் பொது வாழ்க்கையில் வி.பி.சிங் ஒரு மாறுபட்ட அதிசயமாகவே விளங்கினார். “அரசியலில் எல்லாம் கெட்டு விட்டது; நேர்மையில்லை; லஞ்சம் தலை விரித்தாடுகிறது; ஒழுக்கம் போய்விட்டது” என்றெல்லாம் கூக்குரல் போடும் பார்ப்பனர்களும், பார்ப்பன தலைவர்களும் இந்த நேர்மையான மனிதரை எப்போதாவது பாராட்டியிருக்கிறார்களா? இல்லை. இழிவு செய்தார்கள்; ஏளனம் செய்தார்கள்.

கல்லூரி பருவத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டவர் வி.பி.சிங். 1969 ஆம் ஆண்டு உ.பி.யில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் அவரது பொது வாழ்க்கை தொடங்குகிறது. 1971 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். அப்போது அவருக்கு வயது 38. அவரது திறமை, நேர்மை, ஆழமான பார்வை, அவரது தனிப் பண்புகளை வெளிச்சப்படுத்தின. 1980 ஆம் ஆண்டில் 49ஆம் வயதில் - உ.பி. முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். உ.பி. மக்களை அச்சுறுத்தி வந்த சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக மக்களிடம் உறுதி தந்தார். பதவிக்கு வந்தவுடன் கொள்ளையர்களை சமாதான வழியில் சரணடையச் செய்யும் முயற்சிகளில் ஜெயப் பிரகாஷ் நாராயணன் மூலம் இறங்கினார். ஜெயப் பிரகாஷ் நாராயணன் வழியாக கொள்ளையர்கள் ஆயுதங்களைக் கீழே போட முன் வந்தனர். அவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால் சரணடைய மறுத்த ஒரு பிரிவினர், முதல்வர் வி.பி.சிங்கை பழி வாங்கிட அவரது சொந்த சகோதரனையே படுகொலை செய்து, வி.பி.சிங் வீட்டின் முன் கொண்டு வந்து பிணமாக வீசிப் போட்டனர். மக்களிடம் தந்த உறுதி மொழியைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறி, 1983 இல் முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்தார் வி.பி.சிங்.

1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, அவரது மகன் என்ற ஒரே தகுதியில் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு, பிரதமர் பதவி  ஏற்றார்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு பெற்றனர். காங்கிரஸ் சரித்திரத்திலேயே இவ்வளவு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்ற வரலாறு அப்போது தான். மிகப் பெரும்பான்மையோடு ராஜீவ் ஆட்சி அமைத்த போது, அவரது அமைச்சரவையிலே முதலில் தொழில் துறை அமைச்சர் வி.பி.சிங். பிறகு அவரது திறமையினால் நிதித்துறை அமைச்சரா கிறார். நிதித் துறையை திறம்பட நிர்வகிக்க முயற்சிகளை மேற்கொண்டார். நிதிநிலை அறிக்கையில் வரி வருவாய்க்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், இலக்குகள் எப்போதும் எட்டப்படுவது இல்லை. வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகளே உடந்தையாக செயல்படும்.

ஆனால், வி.பி.சிங் நிர்ணயித்த இலக்கை எட்டிக் காட்டினார். பெரும் தொழில் நிறுவனங் களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார், வி.பி.சிங்கின் இந்த நடவடிக்கைகளுக்கு வருவாய்த் துறை செயலாளராக இருந்த நேர்மையான அதிகாரி பூரேலால் என்பவர் மிகவும் துணையாக நின்றார். அம்பானி - கிரிலோஸ்கர் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடந்தன. பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டபோது, தொழிலதிபர்கள் கலங்கிப் போனார்கள். பார்ப்பன தேசிய ஊடகங்கள், வி.பி.சிங் ‘சோதனை ராஜ்யம்’ (Raid Raj) நடத்துவதாக அலறின.

பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய வரியை (Corporate Tax) முறையாக வசூலித்தாலே போதும் என்று கூறிய வி.பி.சிங், வருமான வரித்துறை என்ற துறையே தேவை இல்லை. அது நடுத்தர மக்களை வதைப்பதாகும் என்று கூறினார். இந்தத் துறையிலிருந்து பெறப்படும் வருவாய் - அந்தத் துறையின் நிர்வாகத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. எனவே அத்துறையை இழுத்து மூடிவிட்டு, அதன் ஊழியர் அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்றலாம் என்பதே வி.பி.சிங்கின் கருத்தாக இருந்தது. ஆனால், பணத் திமிலங்களை பகைத்துக் கொண்டு பதவியில் நீடிக்க முடியுமா? பெரும் தொழிலதிபர்கள் தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தி, ராஜீவ்காந்தியுடன் பேரம் பேசி, வி.பி.சிங் துறையை மாற்றச் செய்து விட்டனர்.

அதன் பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்ச ரானார் வி.பி.சிங். அப்போதும் அவரது நேர்மையை முடக்கிட முடியவில்லை.  இந்தியாவின் ராணுவ செலவுகளை தணிக்கை செய்வதற்கு அன்னிய நாட்டு நிறுவனமான ‘ஃபேர்பாக்ஸ்’  (Fairfax) என்ற நிறுவனத்தை பிரதமர் ராஜீவ் நியமித்தபோது, வி.பி.சிங் எதிர்த்தார். இந்தியாவின் ராணுவ ரகசி யங்கள்  - வெளிநாட்டு நிறுவனங்களின் தணிக்கைக்கு உட்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்கக் கூடாது என்றார். அதைத் தொடர்ந்து போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக தரமில்லாத பீரங்கி வாங்கிய பிரச்சினை எழுந்தது.  போஃபோர்ஸ் நிறுவன பீரங்கியைவிட ‘சோஃமா’ பீரங்கி தரமானவை என்று பாதுகாப்புத் துறை முடிவு செய்ததற்கு

மாறாக, சுவீடன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கும் முடிவை ராஜீவ் காந்தி எடுத்தார். இந்த முடிவுக்கு வருவதில் முக்கிய நபராக செயல்பட்டவர் இத்தாலியைச் சார்ந்த குத்ரோச்சி. ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கும்போது, கமிஷன் பெறக் கூடாது. இடைத் தரகர்கள் தலையிடக் கூடாது என்பது அரசின் கொள்கை. இந்தக் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டு இடைத்தரகர் மூலம் இந்த பீரங்கி வாங்குவதில் கமிஷன் பெறப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட பெரும் தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கமிஷன் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் 3 பெயர்களில் போட்டனர். கமிஷனாகப் பெற்ற பணம் ரூ.64 கோடி (1990களில் இதன் மதிப்பு மிக அதிகம்).

இதில் 40 கோடி ரூபாய் லோட்டஸ் என்ற பெயரில் போடப்பட்டது. ராஜீவ்காந்திக்குரியது தான் என்பது ஆவணங்களுடன் நிரூபணமானது. சுவீடன் நாட்டு பிரதமர் ஓலஃப் பாம் என்பவர் மிகவும் நேர்மையானவர். தமது நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் முறைகேடாக நடத்திய பேரத்தை அவர் ஏற்க மறுத்தார். முறையான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்று கூறிய அவர், அது தொடர்பான ஆவணங்களை வழங்கவும் முன் வந்தார். இந்த நிலையில் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த சுவீடன் பிரதமர், ஒரு நாள் விடியற் காலை சுட்டுக் கொல்லப் பட்டார். போபோர்ஸ் ஊழல் பற்றி விசாரித்த மத்திய புலனாய்வுத் துறை, குற்றவாளிகளைக் காப்பாற்ற முறைகேடாக முயற்சித்தது.

சுவிடன் அரசு போபோர்ஸ் நிறுவனம் நடத்திய பேரங்கள் - விற்பனை தொடர்பான மூல ஆவணங்களை தருவதற்கு முன்வந்தபோது, நகல் பிரதியே போதும் என்று சி.பி.அய். கூறியது.காரணம், நகல் பிரதியை நீதிமன்றம் ஆவணமாக ஏற்காது. தப்பித்துக் கொள்ளலாம் என்பதால்தான். நாட்டையே உலுக்கி எடுத்த ஊழல் இது. இந்த ஊழல் பேரத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங், உடன்பட மறுத்தார். ராஜீவும், வி.பி.சிங்கும் சந்திக்காமலே இருந்தனர்.

1987 ஆம் ஆண்டு ஏப். 4 ஆம் தேதி ராஜீவ் - வி.பி.சிங்கை சந்தித்து, நமக்குள் இடைவெளி வந்துவிட்டது, இனி இணைந்து செயல்பட இயலாது என்று கூறியவுடன் வி.பி.சிங், அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். “நாட்டின் பாதுகாப்பையும், கவுர வத்தையும் ஒரு குடும்பம், தனது விருப்பத்துக்கேற்ப ஆட்டிப் படைப்பதை ஏற்க முடியாது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காங்கிரசிலிருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். நாடாளுமன்ற பதவியிலிருந்தும் விலகிய வி.பி.சிங், தனது நியாயத்தை மக்கள் மன்றத்தில் கேட்கப் போகிறேன் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து, தனது அலகாபாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியை வேட்பாளராக நிறுத்தியது. தனக்காக சுவரொட்டிகூட அச்சடிக்காமல், தலையில், ஒரு கைக் குட்டையைக் கட்டிக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து தொகுதி முழுதும் மக்களை சந்தித்துப் பேசினார். 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

போபோர்ஸ் பேரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று முதலில் கூறிய ராஜீவ், பிறகு கமிஷன் வாங்கப்பட்டது உண்மைதான் என்றார். அதன் பிறகு, கமிஷன் வாங்கப்பட் டிருந்தாலும், வாங்கியது நான் அல்ல என்றார். வி.பி.சிங் முன் வைத்த வாதங்களும், ஆவணங் களும் ராஜீவ் காந்திக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கின.

தொடர்ந்து, 1988 இல் ஊழல் ஒழிப்பை முன் வைத்து ‘ஜன்மோர்ச்சா’ இயக்கத்தை வி.பி.சிங் தொடங்கினார்.

ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எஸ்) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘ஜனதா தளம்’ என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11).

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ‘தேசிய முன்னணி’ என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான். மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும் கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே முன் னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதியாகக் கூற முடியும். முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார். ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதம ரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர். 1977க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது. இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது.

‘ஜன்மோர்ச்சா’ தொடங்கிய காலத்தில் கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து ‘ஜன்மோர்ச்சாவுக்குள்’ நுழைக்கப் பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங் கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடி வெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்து விடக் கூடாது. அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப் பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது.

வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அன்றுதான் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள். ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங்களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான். இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; அதுதான் காரணம்.

ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட வில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது. அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது.

ஆணையை எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ரகசியமாகக் கூடிப் பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா?

பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, “இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது” என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர். அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி,  போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள். பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும்,  முஸ்லிம் மாணவர்கள் தான். மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள்.  

வி.பி.சிங் ‘சமூக இழிவைக்’ கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு ‘இந்தியா டுடே’ எழுதியது. அதே ஏடு தான், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே ‘இந்தியா டுடே’ தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோஸ்வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோஸ் வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப் படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990). இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க  செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே. புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான ‘குருசேத்திரப் போரையே’ நடத்தினார். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. ‘இந்து’ வெளியிட்டவை 151. ‘இந்து’ சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

“மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்” என்று ‘எக்ஸ்பிரஸ்’ எழுதியது. “40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பார்ப்பன நாளேடு எழுதியது. இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியின் கடுமையான எதிர்ப்புகள். இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங்.  அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிரஸ் ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Pin It