periyyar 350ராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அவர்கள் சீமைக்குப் போய்விட்டு வந்து வெளியிட்ட அரசியல் அறிக்கையை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் ஒப்புக்கொண்டு பாராட்டி இருப்பதோடு, பலர் அதற்காக தங்களுடைய நன்றியறிதலையும் காட்டிவிட்டார்கள்; காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து முக்கியமாக இரண்டு காரியங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்பது உறுதியான செய்தியாகும்.

அதாவது 1929 வது வருஷம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒரு மணிக்கு திரு.காந்தியார் மறுபடியும் துவக்கப்படத் “தயாராயிருந்திருக்கும்” ஒத்துழையாமையையும் அதற்கொரு மூன்று நாளைக்கு முன் அதாவது டிசம்பர் 28-ந் தேதி லாகூர் காங்கிரசில் திரு.ஜவகரிலால் நேருவால் வெளிப்படுத்த இருக்கும் பூரண சுயேச்சை விளம்பரமும் நிறுத்தப்பட்டு போகும் என்பதேயாகும்.

எனவே, வைசிராய் அறிக்கை அவ்விரு கனவான்களுக்கும் பெரிய விடுதலையையும் வெற்றியையும் கொடுத்தது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மற்றபடி அவ்வறிக்கையில் உள்ள விஷயம் என்னவென்று நிதானமாய் நடுநிலையிலிருந்து பார்ப்போமானால், எவ்வளவு சிறுகண் உள்ள சல்லடை யைப் போட்டு சலித்துத் தேடிப் பார்த்தாலும் சத்துள்ள வார்த்தை ஒன்றுகூட அதில் இருப்பதாக நமக்குப் புலப்படவில்லை.

அதாவது, அதிலுள்ள விஷயங்கள் என்னவென்று பார்ப்போமானால் “எந்தவித நெருக்கடி ஏற்பட்டாலும், யார் என்ன கூப்பாடு போட்டாலும், இந்தியாவில் ராஜிய நோக்கமில்லாத ராஜவிசுவாசிகள் எல்லா வகுப்பிலும், எல்லா மதத்திலும், எல்லா கட்சியிலும் தாராளமாய் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாய் தெரியும். சைமன் கமிஷன் நியமனத்தைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் இனி பேசுவதில் யாதொன்றும் பயன்படாது.

சைமன் விசாரணையும் முடிந்து போயிற்று. இந்திய கமிட்டி விசாரணையும் முடிந்து போயிற்று. எவ்விதத்திலும் அவர்களுடைய ரிபோர்ட்டு பார்லி மெண்டுக்கு வந்துதான் தீரும். அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப்பற்றி இப்போது சொல்லுவது சாத்தியமல்ல.

சாத்தியமானாலும் நாங்கள் இப்போது சொல்ல மாட்டோம். பார்லிமெண்டார் தங்கள் இஷ்டப்படிதான் செய்வார்கள். மற்றும் தக்க ஆதாரத்துடனும் அதிகாரத்துடனும் இந்தியாவின் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல யோக்கியதையுடையவர்களின் ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம்.

இதைப்பற்றி இந்திய சட்டசபையில் 8- மாதத்திற்கு முந்தியே பேசியதைத்தான் இப்போதும் பேசுகின்றேன். இந்தியாவுக்கு சுயராஜ்யம் கொடுப்பதைப் பற்றி பார்லிமெண்ட்டுக்கு இருக்கும் சுயேச்சை அதிகாரத்தை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். அதை மறுப்பது பயனற்றதாகும்.

ஆனால், இந்தியாவின் அதிகாரம் பெற்ற தலைவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிய பார்லிமெண்டு முயற்சி செய்யும். படிப்படியாக இந்திய சீர்திருத்தம் பெற்று பொறுப்பாட்சி பெற வேண்டுமென்பதே 1917 வருஷத்திய அறிக்கையின் கருத்தாகும்.

1919 - ம் வருஷத்திய சீர்திருத்தத்தின் கொள்கையே குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சி பெறுவதற்கு ஏற்றதாகும். சைமன் கமிஷன் வகுக்கும் திட்டம் தான் குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சிக்கு ஏற்றதாகும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.

சைமன் அறிக்கையும் இந்திய தலைமைக் கமிட்டி அறிக்கையும் கிடைத்த பிறகு இந்திய சர்க்காரை ஆலோசித்துக் கொண்டு இந்திய பிரதிநிதிகளை அழைத்து தனியாகவோ சேர்ந்தோ விவாதிக்க ஒரு மகாநாடு கூட்டுவார்கள். அந்த முடிவையும் பார்லிமெண்டுக்கு அனுப்புவார்கள்” என்பது போன்று ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாட்பாள்’ என்கின்ற பழமொழிப்படி முன் சொன்னவைகளையே சற்று மெருகு கொடுத்த பாஷையில் பேசி இருக்கிறார்.

எனவே, இந்த அறிக்கையிலிருந்து இந்திய அரசியல் தலைவர்களும் ஒத்துழையாதாரும் பூரண சுயேச்சைக்காரரும் ஆனந்தக்கூத்தாட என்ன அற்புதம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

நன்றாக கவனித்து பார்த்தால், லார்ட் இர்வின் முன்னைவிட இப்போது மிக்க நிமிர்ந்து பேசி இருக்கின்றார் என்றுதான் கொள்ளவேண்டுமே ஒழியவேறில்லை. என்ன வென்றால், இந்தியாவின் பெரும்பாகம் மக்கள் அரசியல் நோக்கமென்பதே இல்லாமல் சர்க்காரையே நம்பிக் கொண்டிருப்பவர்கள் என்றும் நிபந்தனை இல்லாத ராஜ விசுவாசிகள் என்றும் கூப்பாடு போடுபவர்கள் மிக்க சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்கள் என்றும் சொல்லி, எடுத்த எடுப்பில் எல்லா அரசியல் வாதிகளையும் ஒரே அடியாய் மண்டையில் அடித்து அவமானப் படுத்தி இருக்கிறார்.

இரண்டாவதாக, சைமன் கமிஷன் நியமனத்தைப்பற்றி ஒன்றும் பேசக்கூடாது; அதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.

மூன்றவது, இந்தியாவுக்கு சீர்திருத்தமோ சுயராஜ்யமோ வழங்க பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரமுண்டு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.

நான்காவதாக, சைமன் கமிஷன் ரிப்போர்ட்டின் மீதுதான் பார்லி மெண்டு யோசனை செய்யும் என்றும் சொல்லிவிட்டார். வேண்டுமானால் இந்திய தலைவர்களைக் கூட்டி அவர்கள் அபிப்பிராயம் கேட்கப்படும் என்றும் ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார். ஆனால், அதுவும் நிபந்தனை மீதே சொல்லுகின்றார். அதாவது, இந்தியாவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாகவும் தக்க ஆதாரத்துடன் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதில் தான் ஜீவ நாடி இருக்கின்றது.

இந்தியாவின் அதிகாரம் பெற்றவர்கள் யார் என்பது நமது கேள்வி. இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி மகமதியர்களும் தீண்டப்படாதவர் களும் ஆவார்கள். இவர்களுக்குப் பிரதிநிதியாக யார் போகக்கூடும்? காங்கிரஸ்காரர்களும் மிதவாதிகளும் இவர்களுடைய பிரதிநிதிகளாகி விடுவார்களா? நேரு திட்டமானது காங்கிரசு மிதவாதி, ஒத்துழையாவாதி, சுயேச்சைவாதி, தேசியவாதி ஆகிய எல்லாவாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று எவ்வளவோ பறையடித்தும் அதை மறுத்த இயக்கம் எத்தனை? வகுப்பு எத்தனை? மனிதர் எத்தனை? என்பது உலகம் அறியாததா? அல்லது சர்க்கார் தெரியாததா? என்று கேட்கின்றோம்.

நிற்க, சைமன் கமிஷனை பகிஷ்காரம் பண்ணினதாக மேற்கண்ட இத்தனை கட்சியின் பேராலும், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகமே இருட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது போல் ஒரேயடியாய் ‘பகிஷ்காரம்’, ‘பகிஷ்காரம்’ என்று கத்தினார்களே, அதற்கு இந்திய மக்கள் எவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள் என்பது உலகமறியாததா? அல்லது சர்க்கார் தெரியாததா? என்று கேட்கின்றோம்.

அன்றியும் காங்கிரசு தனது யோக்கியதையை இழந்து விட்டதென்றும், அது விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், காங்கிரசு இந்திய பொதுஜனப் பிரதிநிதித்துவ முடையதல்லவென்றும், அது தனக்கே குழிவெட்டிக் கொண்டதென்றும் திரு.காந்தி உள்பட, திரு.பெசண்டம்மை உள்பட, தலைவர்கள் என்பவர்கள் எல்லோரும் சொன்னதை இதற்குள் உலகம் மறந்திருக்குமா? என்று கேட்கின்றோம்.

இந்தியாவின் அதிகாரம் பெற்றது என்பது ஒரு பக்கமிருந்தாலும் தக்க ஆதாரத்துடன் வரவேண்டும் என்பதற்கு இந்தியத் தலைவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

உதாரணமாக, சைமன் கமிஷன் ராஜாங்க சபை பிரதிநிதிகளுடனும் இந்திய சட்டசபை பிரதிநிதிகளுடனும், மாகாண சட்டசபை பிரதிநிதிகளுடனும் இந்தியாவெல்லாம் சுற்றித் திரிந்து இந்திய பிரமுகர்கள், பிரதிநிதிகள் என்பவர்களை எல்லாம் விசாரித்து வைத்து இருப்பதோடு அந்தந்த மாகாண அரசாங்கத்தார் மூலமும் மாகாண மக்களின் பிரதிநிதி சபையாகிய சட்டசபைகளின் மூலமும் நிறைவேற்றியதும் தனித்து எழுதிக் கொடுத்திருப்பதுமான ஆதாரங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதா? அல்லது நாங்கள் தான் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் காலைத் தாங்களே தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு என்னைக் கூப்பிடு! உன்னைக் கூப்பிடு! என்று கெஞ்சி உள்போகும் யாரோ நான்கு பெயருடைய வார்த்தைகளை தக்க ஆதாரம் என்று ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று கேட்கின்றோம்.

தவிரவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி என்றும், சைமன் கமிஷன் மூலமும், சட்டசபை பிரதி நிதிகள் மூலமும், சர்க்கார் ஸ்தாபனங்கள் மூலமும், சேகரித்து வைத்திருக்கும் உண்மைகளுக்கு விரோதமாய் இப்போது ஒரு புதிய “இந்தியப் பிரதிநிதிகள்” வந்து ஏதாவது ஒன்றைச் சொல்லி, இதுதான் இந்தியாவின் அபிப்பிராயம் என்று திரு.காந்தியே சொல்வதானாலும், சர்க்கார் எதை நம்புவார்கள் என்று பொது ஜனங்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

அன்றியும் ஒரு சமயம் இதே சர்க்காரே தாங்கள் விசாரித்து அறிந்த உண்மைகளுக்கு விரோதமாகவும் சட்டசபைப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட உண்மைகளுக்கு விரோதமாகவும் ஏதோ தங்களால் அழைக்கப்படுகின்றவர்களுடையவோ அல்லது தாங்களாகவே தலைவர்கள் என்று வருகின்றவர்களுடையவோ வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்களேயானால், இந்த சர்க்காரிடத்தில் நாளைய தினம், பொது ஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடும் என்பதையும் நாளையும், பின்னையும் இந்த சர்க்காருக்கோ, சட்டசபை பிரதிநிதிகளுக்கோ மதிப்பு இருக்க முடியுமா என்பதையும் யோசித்தால் எந்த அபிப்பிராயம் மதிக்கப்படும் என்பது இப்பொழுதே விளங்கிவிடும்.

பொதுவாக சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பதன் மூலமாகவும், நேரு அறிக்கை என்பதன் மூலமாகவும், இந்திய அரசியல் ஸ்தாபனங்களுடையவும் அவற்றின் தலைவர்களுடையவும் யோக்கியதையும் செல்வாக்கும் நன்றாய் விளங்கிவிட்டது.

ஏதோ தலைவர்களுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று சொல்லிக் கொள்ளும் வஸ்தாதிபோல் லார்ட் இர்வினின் அறிக்கையை இந்தத் தலைவர்கள் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர, மற்றபடி அதனால் அவர்களுக்கு எவ்வித யோக்கியதையும் வந்துவிடவில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

தவிர இந்த அறிக்கையின் மீது தலைவர்கள் அறிக்கை என்று திரு.காந்தி அவர்களால் சில நிபந்தனைகள் குறிப்பிட்டு ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு அதில் “தலைவர்கள்” கையொப்பம் வாங்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கேலிக்கூத்தேயாகும். அவைகளில் 1. சமரச நோக்கத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது. 2. அரசியல் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது 3. முற்போக்கான ராஜீய ஸ்தாபனங்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும்.

குறிப்பாக காங்கிரசுக்கு அதிக ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்பவைகளாகும். இவற்றுள் முதலாவது நிபந்தனையானது அர்த்தமற்றதாகும். இரண்டாவது நிபந்தனை பிரமாதமான நிபந்தனை அல்ல. இதை சர்க்காரே ஏற்றுக் கொள்ளவும் கூடும் அல்லது “தலைவர்”களே தள்ளிவிடவும் கூடும். இதனால் இலாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.

ஏனென்றால் இதை எதிர்பார்த்து எந்த தேசபக்தரும் ஜெயிலுக்குப் போகவில்லை. எனவே, இவற்றுள் மூன்றாவது நிபந்தனைதான் சற்று விஷமத்தனமான நிபந்தனையாகும். அதாவது, முற்போக்கான ராஜீயஸ்தாபனம் என்றால் என்ன என்பதும், காங்கிரசுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டுமென்பது எதற்காக என்பதுவும் சூழ்ச்சியை உள்ளடக்கிக் கொண்டிருப்பவைகளாகும்.

நமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்த்தாலுமே காங்கிரசின் யோக்கியதை என்ன என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

அதாவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ் திருவாளர்கள் முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, குழந்தை, பஷீர் அகமது, ஏ.ரங்கசாமி அய்யங்கார், ஜயவேலு, எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்களுக்குள் அடங்கிவிட்டதாகும். இவர்களுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை அறிந்தவர்களுக்கு இந்திய மக்களிடம் எந்தவிதமான கவலை இவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதும், இவர்கள் எப்படி தமிழ்நாட்டு இரண்டரைகோடி மக்களுக்கு பிரதிநிதிகளாவார்கள் என்பதையும் நாம் எடுத்துக் காட்டாமலே தெரிந்து கொள்வார்கள்.

ஆகவே, இதைக் கவனித்தால் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது. மற்றபடி “தேசம் முதல்” கட்சி, “தேசியம் முதல்” கட்சி முதலாகிய உத்தியோகம் முதல் என்கின்ற தத்துவம் கொண்ட கட்சிகளின் யோக்கியதையைப் பற்றி நாம் சிறிதும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கின்றோம்.

இன்னிலையில் இவைகளிலிருந்தே எந்தக்கட்சி உண்மையான இந்தியப் பிரதிநிதிக் கட்சியாக இருக்க முடியும் என்பதையும் எந்தத் தலைவர் உண்மையான இந்தியத் தலைவராக இருக்க முடியும் என்பதையும் யோசித்தால் விளங்காமல் போகாது.

பொதுவாகப் பார்க்கப் போனால் லார்ட் இர்வின் அறிக்கையானது திரு.காந்திக்கும், திரு.ஜவகர்லால் நேருக்கும் ஆபத்தின் நெருக்கடியான சமயத்தில் எதிர்பாராத ஒரு பெரிய உதவி செய்ததாக மாத்திரம் ஏற்பட்டதே அல்லாமல் மற்றபடி இந்தியா அரசியல் தன்மையின் தாழ்மையை விளைக்க ஏற்பட்டது என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.

ஏனெனில் எந்த விதத்திலும் தலைவர் மகாநாடு உண்மையான பிரதிநிதித்துவம் பெற்ற ஸ்தாபனமோ தலைவர்களையோ கொண்டதாக ஏற்படப் போவதில்லை என்பதும் அப்படியாவது ஏற்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதை இந்திய பொதுமக்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்பதும் உறுதியான விஷயமாகும்.

நம்மைப் பொறுத்தவரை திரு.காந்திக்குக் கூட இந்தியாவின் பிரநிதியாக இருக்க யோக்கியதை இல்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில், திரு.காந்தி அவர்கள், பிறவியிலேயே “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன்”என்பதான ஜாதிகள் உண்டு என்கின்ற வருணாசிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளுவதோடு, அந்தந்த வருணக்காரன் அவனவனுக்கு சாஸ்திரத்தில் ஏற்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்லி பிரசாரமும் செய்து கொண்டிருப்பவர்.

அது மாத்திரமல்லாமல் “இந்த ஜன்மத்தில் சூத்திரனாய் பிறந்தவன் அவனது ஜாதிக் கேற்றதான பிராமண பணிவிடை செய்வதாலேயே அடுத்த ஜன்மத்தில் படிப்படியாய் மேலாகி கடைசியாக பிராமணனாகப் பிறப்பான்” என்று சொல்லுபவர். அன்றியும் ராமாயணமும பாரதமும் நடந்ததாகவும், அதுவே மேலான தர்ம சாஸ்திரமென்றும், அந்த ஆட்சியே, அதாவது இராம ராஜ்ஜியமே வேண்டுமென்றும் சொல்லுபவர்.

எனவே இப்படிப்பட்டவர் நமக்கு நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதிநிதியாய் இருக்க முடியுமா என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம். தவிர இந்திய தேசம் விவசாயிகளுடையவும், தொழிலாளிகளுடையவும், கூலிக்காரர்களுடையவும் தேசமாகும்.

ஏனெனில், நூற்றுக்கு 95-மக்கள் இந்த இனங்களைச் சேர்ந்தவர்களேயாவார்கள். அன்றியும் ஜாதியினாலும் மதத்தினாலும் கொடுமை அனுபவிக்கும் மக்களாவார்கள். ஆகவே, இவர்களுக்கேற்ற பிரதிநிதிகள் இப்போது வெளிவந்திருக்கும் தலைவர்களில் யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.

திரு.மோதிலால் நேருவுக்கும், திரு.ஜவகர்லால் நேருவுக்கும், திரு. முகமதபாத் ராஜாவுக்கும், திரு.ஜின்னாவுக்கும் இவர்கள் போன்ற மற்றவர்களுக்கும் விவசாயிகள் என்றால் என்ன? ஏழைகள் என்றால் என்ன? தொழிலாளிகள் என்றால் என்ன? என்பது தெரியுமா என்று கேட்கின்றோம்.

இவர்களுக்குள் பொதுமக்கள் கஷ்டம் இன்னது என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும்?

பொதுவாக, இந்தத் தலைவர்கள் எல்லாம் சர்க்காரிடமிருந்து என்ன உத்தியோகம் பெறலாம்? என்ன அதிகாரத்தை பிடுங்கி நாம் அனுபவிக்கலாம்? என்கின்ற கருத்தல்லாமல் இந்த ஏழை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று கருதுகின்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும்? என்று கேட்கின்றோம்.

இப்போது சர்க்கார் கூட்டும் இந்திய தலைவர்கள் மகாநாடு என்பது உண்மையிலேயே பிரதிநிதித்துவம் பொருந்திய மகாநாடாய் இருக்க வேண்டும் என்று சர்க்கார் கண்ணியமாய் கருதுவார்களானால், விவசாயம், வியாபாரம், கைத் தொழில் ஆகிய மூன்று சமூகத்தின் பிரதிநிதிகளை மாத்திரம் அழைத்து அவர்களுடன் கலந்து யோசித்து, இவைகளுக்கேற்ற சீர்திருத்தத்தையும், சமூக விஷயத்தில் தாழ்த்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்களையும், பிறவி அடிமையாய் கருதும் பெண் மக்களையும், கல்வியில் பிற்பட்டிருக்கும் மக்களையும் கவனித்து, அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகளையும் அழைத்து அவர்கள் முறைகளையும் கேட்டு அதற்கேற்ற சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.

இரண்டும் இல்லாமல் ஏழைகள் என்றால் அது ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்பவர்களாகிய மாதம் ஆயிரம் பத்தாயிரம் ரூபா வீதம் வக்கீல் வேலையில் கொள்ளையடித்து அரசபோகம் அனுபவிப்பவர்களையும், சங்கராச்சாரி போல் ஊர் ஊருக்கு லட்சக்கணக்காய் ஏழைகளின் பேரால் ரூபாய் வசூலித்து மடாதிபதிகள் போல் சுகமனுபவித்துக் கொண்டிருப்பவர்களையும், பொதுமக்கள் பேரால், மாதம் நாலாயிரம், ஐயாயிரம் சம்பளம் பெற்று சுகவாழ்வு வாழ்ந்து கொண்டும் நெல்லு காய்க்கிற மரம் எது என்று கேட்டுக் கொண்டிருப்பவர்களையும், வேறு வேலையில் தினம் காலணா கூட சம்பாதிக்க யோக்கியதையில்லாமல் தேசம், தேசியம், சுயராஜ்யம் என்று கத்திக் கொண்டு மேற்கண்ட கூட்டத்தாரிடம் கூலி வாங்கியும் பாமர மக்களை ஏய்த்தும் வயிர் வளர்த்துக் கொண்டிருப்பவர்களையும் இந்தியாவின் 25 கோடி ஏழை மக்களின் பிரதிநிதியாக அழைத்துப் பேசுவதென்றால் இது உண்மையானதும் நாணயமானதுமான பிரதிநிதித்துவமாகுமா என்று கேட்பதுடன், இதனால் விளையும் சீர்திருத்தமோ சுதந்திரமோ குடியேற்ற நாட்டு அந்தஸ்தோ பொதுமக்களுக்கு பயன்படக் கூடியதாயிருக்குமா என்பதையும் நினைத்தால் சர்க்கார் புரட்டும் தலைவர்கள் புரட்டும் ஒன்றுக்கொன்று இளைத்ததல்லவென்றே கருத வேண்டியதாயிருக்கின்றது.

எந்தக் காரணத்தை முன்னிட்டாவது இங்கிலாந்து வெள்ளைக்கார அரசாங்கத்தைவிட இந்திய பார்ப்பன அரசாங்கமோ, ஜமீன்தார் அரசாங்கமோ, முதலாளி அரசாங்கமோ, ஆங்கிலப் படிப்பு அரசாங்கமோ எந்த விதத்திலாவது மேலானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்கு சிறிதுகூட இல்லை என்பதை மாத்திரம் தைரியமாய் சொல்லுகின்றோம்.

எனவே, எதற்கும் ஏழை மக்களும், கூலிக்காரர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்மக்களும் எதையும் தலைகீழாய்க் கவிழ்ப்பதற்கு தயாராயிருந்தா லொழிய அவர்கள் கஷ்டம் நீங்காது என்பதே நமது முடிவு.

(குடி அரசு - தலையங்கம் - 10.11.1929)

Pin It