சமீப காலமாக இந்து மத வெறியர்களின் பாசிச செயல்பாடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அவர்கள் வெளிப்படையாக தங்கள் சித்தாந்தத்திற்கு எதிர்க்கருத்து கொண்டவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும், மிரட்டுவதையும் செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எடப்பாடி அரசை அவர்கள் பிஜேபியின் அரசாகவே நினைத்தே இதைச் செய்து வருவது தெளிவாகி இருக்கின்றது. வட மாநிலங்களில் காலித்தனங்கள் செய்து வந்த பொறுக்கிக் கும்பல்களுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்து, மேலும் மேலும் வன்முறை வெறியாட்டங்கள் செய்ய பிஜேபி உதவுவதுபோல, எடப்பாடி அரசும் இது போன்ற வன்முறைக் கும்பல்கள் தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைப்பதை கைக்கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. அந்த தைரியத்தில்தான் பொறுக்கிகள் எல்லாம் இந்த மண்ணின் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த 9 ஆம் தேதி நாகப்பட்டிணம் மாவட்டம் பொரவைக்குறிச்சியைச் சேர்ந்த முகமது பைசான் என்பவர் மாட்டு சூப் வாங்கி சாப்பிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து மக்கள் கட்சி காலிகள், முகமது பைசான் கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்து வழிமறித்து, கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் அவரைக் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். இது சம்மந்தமாக பைசானின் பெற்றோர் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் செய்வோம் என சொன்னபிறகே அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினேஷ்குமார், மோகன்குமார், கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் வடமாநிலங்களைப் போல இங்கே பொறுக்கிக் கும்பல்கள் தங்களுடைய உணவு சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பதைக் காட்ட தமிழ் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக #Beef4life, #WeLoveBeef போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக வைத்தனர். இதனால் தமிழ்நாட்டில் தங்களின் அடிமைகள் ஆட்சி செய்யும்போதே தங்களுக்கு இந்த நிலைமையா என்று பேதியாகிப் போன காவி பொறுக்கிகளும் அவர்களின் சொம்புகளும் காவல்துறையில் இருக்கும் தங்களின் கைக்கூலிகள் மூலம் தற்போது பழிவாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.
அதனடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் அவர்களை கோவை காவல்துறையினர் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கும் அளவிற்கு அவர் அப்படி என்ன பேஸ்புக்கில் வன்முறையாகப் பதிவிட்டார் என்று பார்த்தாலே இந்தத் தொடை நடுங்கி கும்பல்களின் யோக்கியதை தெரிந்துவிடும். கடந்த 12-ந் தேதி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களே, எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கும் உன் திமிர் கோவையில் உன் பகுதியில் இருக்கின்றோம். மாட்டுகறி அடிக்கடி சாப்பிடுவதைப் பதிவிடுகிறோம். மீண்டும் உனக்காகப் பதிவிடுகிறோம். வா தில் இருந்தால் வா" என்று பதிவிட்டிருக்கின்றார். ஆனால் நிர்மல்குமாரின் சவாலுக்கு வரத் துப்பில்லாத கோழைக் கும்பல் காவிக்குப் பதிலாக காக்கியை அனுப்பி வைத்திருக்கின்றது. தனி நபர்களை ஆயுதங்களுடன் தாக்கும் கோழைகள் ஒரு பெரியாரிய அமைப்பைச் சேர்ந்த தோழரைத் தாக்கினால் தங்களது டவுசர்கள் கிழிக்கப்படும் என்று பயந்து காக்கிகளை ஏவிவிட்டு கைது செய்ய வைத்திருக்கின்றது.
யாராவது புகார் கொடுத்தால் காவல்துறை அப்படியே கைது செய்யும் என்றால் அது என்ன காவல்துறையா, இல்லை ஏவல்துறையா என்று தெரியவில்லை. எந்தவித மதக் கலவரமும் இன்றி அமைதியாக இருக்கும் பெரியார் மண்ணில் அதைச் சீர்குலைக்க வேண்டும் என்றே சில பொறுக்கி வன்முறைக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படியான செயல்பாடுகளை இங்கிருக்கும் முற்போக்கு அமைப்புகள்தான் தங்களது அயறாத களப்பணி மூலம் இந்த மக்களை மத வெறிபிடித்த பாசிசக் கும்பல்களின் செயல்பாடுகளுக்கு இரையாகாமல் தடுத்து நிறுத்தி வருகின்றார்களே ஒழிய, தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகளால் அல்ல. உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது எவனோ ஒரு பொறுக்கி புகார் கொடுத்தான் என்று எந்தவித முகாந்திரமும் இன்றி எதற்காக காவல்துறை கைது செய்ய வேண்டும்? கைது நடவடிக்கையைப் பார்த்தால் புகாரை காவல்துறையே கேட்டுப் பெற்றது போல்தான் உள்ளது.
கோவைப் பகுதியை காவி மண்டலமாக மாற்ற சங்கிகள் கடும் பிரயத்தனம் செய்து வருவது யாரும் அறியாத ஒன்றல்ல.அப்படியான செயல்பாடுகளுக்கு அங்கிருக்கும் சூத்திர இந்து முதலாளிகள் பொருளுதவி செய்து வருவதும் அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் சங்கிகளின் சதித்திட்டங்களுக்கு பெரும் தடையாக இருப்பது கோவை பகுதியில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்திருக்கும் பெரியாரிய இயக்கங்களும், கம்யூனிச இயக்கங்களுமே ஆகும். இந்தக் கைது நடவடிக்கை என்பது காவி பயங்கரவாதிகள், முற்போக்கு இயக்கங்களுக்கு வெளிப்படையாக விடும் எச்சரிக்கையாகும். இதன் மூலம் அவர்கள் ஒன்றை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள், அது தமிழகத்தில் அரசு உறுப்புகள் அனைத்திலும் தங்களது கூலிப்படைகள் செயல்பட்டு வருவதை.
தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு காவி பயங்கரவாதிகளின் வன்முறை செயல்களை கட்டுப்படுத்தாமல் அதற்கு துணைபோவதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கு என்ன சொல்ல வருகின்றது? சட்டத்தை நம்ப வேண்டாம் என சொல்ல வருகின்றதா? இதுவரை தமிழ்நாட்டில் எந்த இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டிருக்கின்றார்களா? இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே இங்கிருக்கும் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. அப்படித்தான் வருங்காலங்களிலும் செயல்பட விரும்புகின்றன. ஆனால் வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் காலித்தனங்கள் செய்யலாம், சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தலாம், தமிழ் மக்களின் உணவு சுதந்திரத்தில் தலையிடலாம், அதற்கு மாநிலத்தை ஆளும் அரசின் அனுமதியையும் பெறலாம் என்ற தைரியத்தில் வன்முறைக் கும்பல்கள் செயல்படும்போது முற்போக்கு இயங்கங்கள் என்ன செய்ய முடியும்?
எனவே மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தன்னுடைய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். வன்முறை வெறியாட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றக் காத்திருக்கும் வன்முறைக் கும்பல்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து ஜனநாயக சக்திகளின் கோரிக்கையாகும்.