2012 ஆகஸ்டு 12ஆம் தேதி ஈரோட்டில் உருவானது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. தடம் மாறாத பெரியாரியல் பயணத்தை முன்னெடுக்க உறுதி ஏற்று இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து களமாட முன் வந்தனர். மாறி வரும் அரசியல் சமூக சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம்.
பொய்யான வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பலவீனங் களையும் மூலதனமாக்கி இந்தியாவின் அதிகாரத்தைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரம் தங்களிடம் வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையுடன் ‘பார்ப்பனிய-மதவாதத்’ திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்கள் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்காக எத்தகைய ‘ஜனநாயக’ படுகொலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தியப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறை அரசியலுக்கும் நேர் முரணாக மக்கள் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கும் வலிமையான கருத்தியல் பெரியாரியம்; அம்பேத்கரியம். இந்த உண்மை, அண்மைக்காலமாக பார்ப்பன மதவாத அரசியலை தடுக்க விரும்பும் அனைத்துக் கட்சிகள் இயக்கங்களாலும் உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியாரியத்தின் சமூக நீதி அரசியலும் அதன் பண்பாடும் வேர் பிடித்து நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்தி விட்டால் இந்தியாவை பார்ப்பனிய பனியாக்கள் ஆதரவோடு காவி நாடாக்கி விட முடியும் என்று திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
இதற்கு பா.ஜ.க. வகுத்திருக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் இரண்டு. ஒன்று - ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரது கட்சியில் உருவாகியுள்ள தலைமைக்கான வெற்றிடத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று தங்களின் சுயநல அரசியலுக்காக சமூகத்தை சீர்குலைக்கும் ஜாதி அரசியலை நடத்தும் சில ஜாதி சங்கத் தலைவர்களை தங்கள் சூழ்ச்சி வலைப்பிடிக்குள் கொண்டு வரும் திட்டம். இந்தத் திட்டத்தில் சில ஜாதித் தலைவர்கள் வீழ்ந்து விட்டார்கள். இந்த ஜாதித் தலைவர்களின் ‘சுயநல’ அரசியலுக்கு எளிதில் பலியாகிவிடக் கூடியவர்கள் அல்ல, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம், மோடி ஆட்சியின் மறைமுக பார்ப்பனிய மதவாதத்தையும், நேரடியான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்தி, மக்கள் ஆதரவைத் திரட்ட திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்தது. அதனடிப்படையில் கருக் கொண்டதுதான் ‘இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித் தன்மைக் காப்போம்’ என்ற பரப்புரைப் பயணம்.
இந்தப் பயணத்தில் மக்களின் நாடித் துடிப்பை உணர முடிந்தது. மோடியின் மக்கள் விரோத கொள்கையின் மீது மக்கள் கடும் கோபத்திலும் எரிச்சலிலும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. நீட் தேர்வையும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பையும், தமிழகத்தின் மண் வளங்களை சுற்றுச் சூழலை அழிக்கும் திட்டங்களையும், இந்தித் திணிப்பையும் நியாயப்படுத்தி எந்த ஊரிலும் பா.ஜ.க.வின் பார்ப்பனிய சக்திகள் மேடை போட்டு பேச முடியாது. கழகம் நடத்தியதுபோல் அவர்களின் திட்டங்களை நியாயப்படுத்தும் இயக்கங் களையும் நடத்த முடியாது. இதுவே கள நிலை.
இந்தியாவை ‘இராமராஜ்ய’மாக்கிடும் ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான சமூக அரசியல் விடுதலையை தீவிரமாக முன்னெடுப்பதின் அவசியத்தை உணர்ந்து, திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நிறைவேற்றி யிருக்கும் தீர்மானங்களே இன்றைய காலத்தின் தேவை என்று கருதுகிறோம்.
இந்த திசை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்லும் களப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி ஏற்போம். திருச்செங்கோடு தீர்மானங்கள் தமிழ் நாட்டுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைய வேண்டும்.