கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

வாரணாசியில் காசி விசுவநாதன் கோயில் வாசலில் பங்கேற்றுப் பேசிய மோடியின் பேச்சை ஈரோடு கொடுமுடி கோவிலுக்குள் திரையிட்டுக் காட்ட வற்புறுத்திய பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத பிரிவுகளின் கோரிக்கைக்கு இடம் கொடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் பா.ஜ.க.வினர் தடுத்து வந்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் செயல் அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோயில் அலுவலரை பாஜகவினர் மிரட்டுவதாகக் கூறி அவருக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது.

இது தொடர்பாக கழகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்:

“ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோவில் ஊழியர்கள் மீதும், அலுவலகர்களின் மீதும் தொடர்ச்சியாகப் போலியான புகார்களைத் தந்தும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் மேல் சுமத்தியும் ஓர் இழிவான அரசியலைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக /இந்து மக்கள் கட்சி /இந்து முன்னணி மற்றும் அதன் துணை அமைப்புகள்.

இவர்களின் இந்த இழிவான அரசியலின் தொடர் நிகழ்வாக, நாளை கொடுமுடி மகுடேசுவரர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாஜக கூடாரம் அறிவித்திருக்கிறது.

இவர்களின் இந்த தொடர்ச்சியான பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதும், கோவில் பணியாளர்களும் அப்பகுதியைச் சார்ந்த மக்களும் ஒரு சுமூகமானச் சூழலுக்குள் வாழ்வதைத் தொடரச் செய்வதும் பெரியார் தொண்டர்களின் கடமையாகும்.

எனவே, பாஜக கூடாரத்தின் உண்ணாவிரத நாடகத்தை முறியடிக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் முற்போக்குக் கட்சிகள் – அமைப்புகளின் ஆதரவைத் திரட்டி, 26.12.2021 ஞாயிறு காலை பத்து மணியளவில் கொடுமுடியில் உண்ணும்விரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு என்றென்றும் மத துவேசத்தை ஆதரிக்காத…சகோதர மனப்பான்மை கொண்ட பெரியார் மண் என்பதை காவிகளுக்கு மீண்டும் காத்திரமாக உணர்த்திடவும் இப்போராட்டத்திற்கு அனைவரும் கரம் கோர்க்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாஜகவின் போராட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்போராட்டம் அறிவித்தவுடன் பாஜகவினர் பின்வாங்கிவிட்டனர். அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இரத்து செய்தனர்.

ஏற்கனவே திருவரங்கம் கோயிலுக்குள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது கட்சித் தொண்டர்களுடன் மோடி நிகழ்ச்சியை திரையிடச் செய்து பார்த்தார். கோயில் ஆகமவிதிகளுக்குள் இது வருமா என்பதை பார்ப்பனர்கள் தான் விளக்க வேண்டும்.