கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சாதியம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அறிவுலகம் எவ்வாறு எதிர்கொள்கிறது? அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் அதற்கு எவ்வாறு வினையாற்றினார்கள் என்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளில் நிறைய பிரிவினர் இருப்பினும், அவர்கள் அனைவரையும் பொதுவாக இம்மூன்று பிரிவுகளில் அடக்கி விடலாம்: 1. இந்திய தேசியம் பேசும் மார்க்சியர்கள் 2. இந்திய தேசியம் பேசும் நக்சல்கள் 3. தமிழ்த் தேசியம் பேசும் மார்க்சியர்கள்.

Ambedkar and Dalit boyஇவர்களுள் தமிழ்த் தேசிய மார்க்சியர்களுள் ஒருவரின் கருத்துக்களை முதலில் பார்க்கலாம். “தமிழ்த் தேசத் தன்னுரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் உள்ள மக்கள் தாங்கள் தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தால் ஒன்றுபடவேண்டும். இப்படி ஒன்றுபடும் தமிழர்கள் பன்னாட்டு ஏகபோக எதிர்ப்பு, பெரு முதலாளி எதிர்ப்பு, பெரு முதலாளிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க, இந்தி ஆதிக்க எதிர்ப்பு கொண்ட அணிசேர்க்கையாக இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட அடிப்படையில் அல்லாமல், சாதியின் பேரால், மதத்தின் பேரால் மக்களை அணிதிரட்ட முயல்கிறது தலித் அரசியல்.'' ("தலித்தியம்', ராசேந்திர சோழன், பக் : 36)

“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதில் தாங்கள் மட்டுமே தனித்து நின்று போராடி வெற்றி பெற முடியாது என்பதையும், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்களில் உள்ள சனநாயக, சமத்துவ நோக்குடைய சக்திகளையும், தங்களோடு அரவணைத்துக் கொண்டே சொல்ல வேண்டும்.'' ("தலித் மக்களும், தனித் தொகுதிகளும்', ராசேந்திரச் சோழன், பக் : 17) இது குறித்து அம்பேத்கர் சொல்வது என்ன?

“சமூக மற்றும் மத ரீதியான உரிமைகள் பல்வேறு சாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிற விதம் எப்படியெனில், சிலவற்றுக்கு அதிகமான உரிமைகளும், சிலவற்றுக்குக் குறைவான உரிமைகளும் என்கிற விதத்தில் வழங்கப்பட்டிருப்பதால், சாதி அமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தூண்டுவதற்கு-இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறு எதுவுமில்லை என்கிற காரல் மார்க்சின் முழக்கம் பயனற்ற தாகி விடுகிறது.

“சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்கிற வரிசைப்படி சில கீழாகவும், சில மேலாகவும் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு பேண எண்ணுகின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக இழக்க வேண்டி வரும். எனவே சாதி திரட்சி சாத்தியமில்லை.'' ("அம்பேத்கர் நூல் தொகுப்பு'-1, பக்கம் : 106)

தமிழ்த் தேசியவாதிகள் தலித் மக்களின் விடுதலைக்கு காட்டும் பாதை என்ன தெரியுமா? “டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல் முதலில் கல்வி. அதாவது விழிப்புணர்ச்சியை நோக்கிய கல்வி. சற்று விழிப்படைந்து தன் நிலையை உணர்ந்து ஒன்று சேர்தல் மற்றும் அதிகாரத்திற்கெதிராகப் போராடுதல். இதைத் தவிர வேறு வழி இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களது விடுதலை என்பது தங்களைப் போலவே தேசிய இன, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளான பிற பகுதி மக்களின் ஒன்றிணைவோடேயே சாத்தியம் என்பது தெளிவு. இவ்வொன்றிணைவு, மார்க்சிய தேசிய இனக் கருத்தாக்கங்களோடு தொடர்புடையது என்பதும் வெளிப்படை'' (தலித்தியம், ராசேந்திரச் சோழன், பக்: 75, 76).

கோ. கேசவன் எழுதிய "அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்' என்கிற நூலில், யூர்லோவா என்கிற ரஷ்ய அறிஞர் எழுதிய நூலின் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 1933 ஆம் ஆண்டு அம்பேத்கர் குறிப்பிட்டதாக ஒரு கருத்து இடம் பெறுகிறது. “நான் கற்றறிந்திருந்தாலும் சமூகத்தில் இன்னமும் தீண்டத்தகாதவராகவே இருக்கிறேன். தீண்டாமையிலிருந்து என்னைக் கல்வி விடுவித்து விடவில்லை.''

அம்பேத்கரையே விடுவிக்காத கல்வி. அரைகுறையாகப் படிக்கும் நம்மை விடுவித்து விடப்போகிறதா? ராசேந்திரச் சோழன் போன்ற தமிழ்த் தேசிய மார்க்சியர்கள் மறுப்பதற்கென்றாவது அம்பேத்கரைப் படிக்க வேண்டும். நிச்சயமாக, வேறெந்த சாதி இந்து படிப்பாளியை விடவும் அதிகம் படித்த அம்பேத்கரின் நூல்களைப் படிப்பது ஒருபோதும் வீணாகி விடாது. இந்திய தேசியம் பேசும் நக்சல்களைப் பொருத்த வரையிலும், அவர்களிடமும் கூட அம்பேத்கரைப்பரிசீலிக்கவோ, படிக்கவோ செய்யாமல் புறக்கணிக்கும் போக்கு ஒரு புறமென்றால், அரைகுறையாய் அவர்களுடைய வசதிக்கேற்ப படித்துப் பொருள் கொண்டு, அவரது ஆய்வுகளையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் போக்கு இன்னொருபுறம். கோ. கேசவன் எழுதிய "அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்' என்ற நூலில் சி.பி.அய். எம். (செங்கொடி) அமைப்பின் "ரெட் ஸ்டார்' இதழில் சூன்-சூலை 1995இல் வெளிவந்த "அம்பேத்கரியம் : புதிய ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தம்?' என்ற கட்டுரையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். அக்கட்டுரையை எழுதிய கே.என். ராமச்சந்திரன் என்பவர் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் :

1. சாதியத்துக்கு எதிராக சட்டப்பூர்வமான வழிகளிலேயே அம்பேத்கர் போராடினார்.

2. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர் போராடவில்லை.

3. அரசியல் சட்டம் குறித்த ஒரு மாயையைத் தான் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உருவாக்கினார்.

4. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உரிய கருவிகளாகவே மதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் அவர் புத்த மதத்துக்கு மாறினார். அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்துப் பார்க்க அவர் தயாராக இல்லை.

5. புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தவாதத்தையே அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார்.

இக்கருத்துக்களை அல்லது குற்றச்சாட்டுகளை கோ. கேசவன் விரிவாக மறுத்து அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நோக்கிலிருந்தும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலிருந்தும் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட பிரச்சனைகளை அணுகினார். அன்று அவர் எடுக்க நேர்ந்த சில நடவடிக்கைகளுக்கும் உத்திகளுக்கும் அன்றைக்கு இருந்த டாங்கேயிஸ்டுகளின் வறட்டுத்தனமான பார்வையே பெருமளவுக்குக் காரணமாக இருந்தது. அம்பேத்கர் சட்ட ரீதியான போராட்டங்களை மட்டுமின்றி, அதற்கு வெளியேயும் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி யிருக்கிறார். அவரை அரசியல் சட்டவாதத்தின் வரம்புக்குள் மட்டுமே சுருக்கி காணும் போக்கை ஆளும் வர்க்கச் சிந்தனையாளர்கள் திட்டமிட்டு உருவாக்கி வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

புத்த மதத்தை வெறுமனே மற்றுமொரு மதமென்று சொல்லிவிட முடியாது. புத்த சமய நிறுவனங்களின் தனியுடைமை ஒழிப்புச் சிந்தனை, புத்த சமயத்தின் வன்முறை மறுப்பு, அளவியல் மதிப்பு ஆகியன அவரைக் கவர்ந்ததாலேயே அம்பேத்கர் புத்த மதத்தை தேர்ந்தெடுத்தார். அம்பேத்கர் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொண்டவர் எனினும் அவரை ஒரு சீர்த்திருத்தவாதி என்று அடையாளப்படுத்திவிட முடியாது. அவரது செயல்பாடுகளை முற்போக்கு சனநாயகம் (கீச்ஞீடிஞிச்டூடிண்ட்) என்று வரையறுக்கலாம் என்று கோ. கேசவன் குறிப்பிடுகிறார்.

அண்மையில் வெளிவந்துள்ள ஆனந்த் டெல்டும்டேயின் "ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி ஒழிப்பும்' என்ற நூல், அம்பேத்கர் மீது வைக்கப்படும் இவ்வாறான விமர்சனங்களுக்கு மிக விரிவாகவும் விளக்கமாகவும் பதிலளிப்பதாக உள்ளது. “உலகின் வேறு எந்த இடத்திலும் வேறு யாராலும் உருவாக்க முடியாத ஆற்றல் கொண்ட ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த சுரண்டல் அமைப்புதான் சாதி அமைப்பு'' (ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், பக் : 20)

“ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் அந்நியர்களின் ஏகாதிபத்தியத்தை மட்டும்தான் கருத்தில் கொள்ள வேண்டுமா? அப்படியெனில், அந்நியர்களைவிட மிக அதிகமாக உள்நாட்டவர்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதும் மக்கள், இத்தகைய போராட்டங்களில் ஏன் சேர வேண்டும்?''

“கருத்து நிலை அளவில் ஏகாதிபத்தியமும் பார்ப்பனியமும் ஒன்றே. உண்மையில் பார்ப்பனியம் என்பது ஏகாதிபத்தியம் என்பதற்கான அத்தனை அர்த்தங்களுக்கும் முற்றிலும் பொருத்தமானதே. சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்தும் நீடித்த ஒடுக்குமுறையே ஏகாதிபத்தியம் என்னும் லெனினின் வரையறைக்குள் பார்ப்பனியம் அடங்குவது மட்டுமின்றி, தேசியம் என்பதை வரையறை செய்வதில் கூட பார்ப்பனியம் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது.'' (மேலது, பக் : 21)

இந்நூலுக்கு முன்பு வந்த "அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்' என்ற நூலிலேயே இத்தகைய கருத்துக்களுக்கு ஏற்கனவே அவர் பதில் சொல்லியிருந்தார் என்றாலும், இந்த நூலில் மிக விளக்கமாக அவை பரிசீலிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அம்பேத்கரையே பொருட்படுத்தாதவர்கள் ஆனந்த் டெல்டும்டேவையா பொருட்படுத்திவிடப் போகிறார்கள்? மீண்டும் கோ. கேசவனின் நூலுக்குத் திரும்பலாம். நக்சல்களிடமிருந்து அம்பேத்கருக்கு எதிராக வந்த கருத்துக்களை அவர் எதிர் கொண்டு பதில் அளித்திருக்கிறார் என்றாலும், கோ. கேசவனின் அம்பேத்கர் வாசிப்பும் அவ்வளவு சரியானது என்று சொல்லிவிட முடியவில்லை.

ஒரே குழுவுக்குள் இருக்கும் திருமண வயதுடைய இருபாலருக்குமிடையே உள்ள சமமின்மையை ஒழுங்குபடுத்துவதாக அகமணமுறை அமைகிறது என்பது அம்பேத்கர் கருத்து என கோ. கேசவன் குறிப் பிடுகிறார். இது, அம்பேத்கரைத் தலைகீழாகப் புரட்டிப் புரிந்து கொள்ளும் முயற்சி என்றே தோன்றுகிறது. அம்பேத்கர் சொல்வது என்னவெனில், புறமணத்தின் மீது அகமணத்தை வைப்பதன் விளைவாகவே இந்தியாவிலுள்ள சாதிகள் தோன்றின. ஆனால் புறமணமுறையிலிருந்து அகமணமுறைக்கு மாற விரும்பும் ஒரு சமூகக் குழுவினரிடையே பாலின சம எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்த சக எண்ணிக்கைகளைப் பாதுகாக்கும் வழிமுறையாகவே சாதி, விதவை முறை, சிறுமிகள் திருமணம் என்பன தோன்றின. இதுதான் அம்பேத்கர் தரும் விளக்கம். இதற்கும் கோ. கேசவன் சொல்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Ambedkar's chairஅதேபோன்று, சாதிய ஒழிப்புக்குரிய பிரதான அம்சமாகக் கலப்புத் திருமணத்தை அம்பேத்கர் குறிப்பிடுகிறார் என்று கோ. கேசவன் (பக் : 48) முன்வைக்கிறார். அம்பேத்கர் கலப்பு மணத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்கான முதன்மை அம்சமாக அதை முன்னிறுத்தவில்லை. "சாதி ஒழிப்பு' நூலில் “சாதி மறுப்புத் திருமணமே சாதியை ஒழிக்கும் உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பே சகோதர உணர்வு ஏற்படக் காரணமாயிருக்கும். அந்நியர் என்ற உணர்வு மாறி, இச்சகோதர உணர்வு ஏற்படாவிட்டால் சாதி ஒழியாது. இந்துக்கள் அல்லாதவரை விடவும் இந்துக்களிடம்தான் சாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் நடக்க வேண்டியிருக்கிறது'' என்று குறிப்பிடவே செய்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்த வரிகளில் அம்பேத்கர் சொல்வது என்ன?

“சாதி மறுப்புத் திருமணங்களும், சமபந்தி விருந்துகளும் மிகப் பரவலாக நடந்தால்தான் சாதி என்னும் கேலிக்கூத்து முடிவடையும் என்ற உங்கள் நிலைப்பாடு (ஜாட்–பட்–தோடக்–மண்டலின் நிலைப்பாடு) சரியானதுதான். நீங்கள் நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள். ஆனால் நீங்கள் அளிக்கும் மருந்து சரிதானா? ஏன் பெரும்பான்மையான மக்கள் கலந்துண்ணுவதையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் விரும்புவதில்லை? உங்கள் நடைமுறைகள் ஏன் பிரபலமாகவில்லை? இந்துக்கள் இவற்றைத் தங்கள் மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமானவை என எண்ணுகின்றனர் என்பதால்தான். உண்மையான தீர்வு சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை அழிப்பதுதான். செயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக உணவைப் புகட்டுவதைப் போன்றது-சமபந்தி விருந்து, சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் மற்றும் அவற்றுக்காகப் போராடும் உங்கள் நடவடிக்கைகள். (அம்பேத்கர் நூல் தொகுப்பு, பக் : 99, 100)

“சாஸ்திரங்களை நீங்கள் தூக்கி எறிவது மட்டுமின்றி அவற்றின் அதிகாரத்தை புத்தரைப் போல், குருநானக்கைப் போல் நீங்கள் மறுக்க வேண்டும். அதைச் செய்யாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதி மறுப்புத் திருமணங்கள் நடத்துவதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியாது. இந்து மதத்தை ஒழித்துவிட்டால் சாதி மறுப்புத் திருமணங்கள் தானாகவே பரவலாக நடைபெறும். சாதி ஒழியும்''-இதுதான் அம்பேத்கர் சொன்னது. சமூகத்தில் தொழில் பிரிவினை செயல்படும் வடிவத்தைக் காரல் மார்க்ஸ் கண்டறிந்து விளக்கினார். இத்தகைய ஆய்வின் உலகளாவிய நிலையை அம்பேத்கர் ஒப்புக் கொண்டாலும் கூட, தொழில் பிரிவினை என்பதுடன் தொழிலாளர் பிரிவினை (Division of Laboures) என்ற இன்னொன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்.

“அம்பேத்கரின் இத்தகைய நிலைப்பாடு பொது உடைமையரின் நிலைப்பாட்டிற்கு மாற்றீடாகவும் எதிர்வினையாகவும் அமைந்திருந்தது.''

“இந்த மாற்றீடும் எதிர்வினையும் பொது உடைமையரின் நடைமுறை இடைவெளியை இட்டு நிரப்பவல்ல தத்துவவலிமையையும், நடைமுறை விளைவையும் கொண்டிருந்தனவா என்பதையும் காண வேண்டும்.'' ("அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்', பக்: 50, 51, 52, 53) கேசவனின் மேற்கண்ட விளக்கங்களைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது. அம்பேத்கர் உழைப்பாளிகளின் பிரிவினை என்று சொல்வதன் சூழ்நிலைப் பொருத்தம் (இணிணtஞுதுt) என்ன?

சாதிக்கு இன்றும் பாதுகாப்பாளர்கள் இருப்பது ஓர் அவலம். உழைப்புப் பிரிவினைக்கு இன்னொரு பெயர் சாதி என்றும், ஒவ்வொரு நாகரிகச் சமூகத்திலும் உழைப்புப் பிரிவினை அவசியம் என்பதால், சாதியில் ஒரு தவறும் இல்லை என வாதிடப்படுகிறது. சாதி அமைப்பு முறை வெறுமனே உழைப்புப் பிரிவினை மட்டுமல்ல; அது உழைப்பாளிகளின் பிரிவினையும் ஆகும். உழைப்புப் பிரிவினை நாகரிகச் சமூகத்தின் அவசியம்தான். ஆனால் எந்த நாகரிகச் சமூகத்திலும் உழைப்பாளிகளை இறுக்கமான தனித்தனி அறைகளாகப் பிரித்து உழைப்பைப் பிரிவினை செய்வதில்லை.'' (அம்பேத்கர் நூல் தொகுப்பு, பக் : 67)

இங்கு காரல் மார்க்ஸ் எங்கு வந்தார்? மாற்றீடு எங்கிருந்து வந்தது? எதிர் வினை எங்கிருந்து வந்தது? காற்றில் சிலம்பம் வீசுவது என்பது இதுதானா? இந்தியத் தேசியம் பேசும் மார்க்சியர்களும் அம்பேத்கரை வேறுவிதமாகப் பார்த்து விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். “அவ்வப்போது, அங்கங்கே நடந்து வரும் நிகழ்வுகளுக்கு எதிர் வினையாற்றுவதன் வழியாக மட்டுமே தலித் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிட முடியுமென்று எதிர்பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. அது போலவே நடைமுறை சாத்தியமில்லாத, சந்தேகத்திற்கு இடமின்றி பயனளிக்கும் வல்லமை இல்லாத, நீண்டகால அரசியல் கனவுப் பாதையில் அப்பாவி தலித் மக்களை அழைத்துச் சொல்ல முற்படுவதும் உடனடிப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதிலேயே போய் முடியும்.'' ("தலித் இலக்கியம் இன்று', சசிகுமார், பக் : 4, 5)

இச்சிறு நூல் முழுவதும் இது போன்ற புகார்களும் புத்திமதிகளும்தான் நிறைந்திருக்கின்றனவே ஒழிய, சாதி ஒழிப்பு குறித்த தங்கள் பார்வை என்ன என்பதும், சாதி ஒழிப்பு குறித்து ஒன்றும் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. இனியாவது இவர்கள் முன்வைக்க வேண்டும். பவுத்தம், இஸ்லாம் போன்று இந்து மதமும் ஒரு மதம் என்று பார்ப்பதும், அவற்றிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று கூறுவதோடும் நின்று விடாமல், சாதியின் மூல ஊற்றாக உள்ள இந்து மதம் தூர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து தங்கள் பார்வை என்ன என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வேண்டுகோளோடு இக்கட்டுரையை முடிக்கும் தருணத்தில் என் முதுகைத் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு குறித்த இக்கருத்தை தலித் இயக்கங்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கின்றன? ஏற்றுக் கொண்டாலும் எந்தளவுக்கு அதை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி, கண்ணுக்கு முன் நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.