கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தலித் மக்களை இந்து மதத்துக்குள்ளும், ‘இந்துத்துவா’ எனும் கோட்பாடுக் குள்ளும் அடக்க முயலும் சங்பரிவாரங்களின் வாதங்களை உடைத்து நொறுக்கு கிறார், டாக்டர் அம்பேத்கர்!

டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்விகள் என்ன?

• இந்துஸ்தானத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ‘இந்து’ தான் என்று வாதிட்டால், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகளும் இந்துக்களா?

• ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால், அதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று இந்து மதம் வலியுறுத்தும் விதிகளான சூத்திரங்கள். இந்த சூத்திரங்களைக் கூறும் சாஸ்திரங்கள், இவைகள் ஜாதியையும் தீண்டாமையையும் வலியுறுத்துவதால், தீண்டப்படாத மக்கள் ஏற்க முடியாது; மற்றொன்று - வழிபாட்டு முறைகளைப் பற்றியது. ஏனைய இந்துக்களைப் போலவே - தீண்டப்படாத மக்களும் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை வணங்கும்போது, அவர்களும் இந்துக்களாகி விடுகிறார்களே என்று வாதிடப்படுகிறது. இரு பிரிவினரின் வழிபாட்டு முறை ஒன்றாக இருப்பதாலேயே இருபிரிவினரின் மதமும் ஒரே மதம் - பொது மதம் என்று கூற முடியாது; ஒரே மாதிரியான மதம் என்று வேண்டுமானால் கூறலாம்.

• இரு பிரிவினருக்கும் ‘பொது மதம்’ என்ற ஒரு மதம் இருக்குமானால், வழிபாட்டு முறைகளில் பொதுவான பங்கேற்பு இருக்க வேண்டுமல்லவா? அப்படி வழிபாட்டில் தீண்டப்படாத மக்களுக்கு பொதுவான பங்கேற்பு இல்லையே; தீண்டப்படாதவர்கள் ஒதுக்கப்படுகிறார்களே! அன்னியர்களைப்போல அவர்கள் வேறுபட்டுத் தானே நிற்கிறார்கள்?

• இந்துக்களிலே - தீண்டப்படாதவர்களைத் தவிர ஏனைய பிரிவினர் ‘வர்ணஸ்தர்கள்’ என்றும் - தீண்டப்படாதவர்கள் இதற்கு நேர் எதிராக ‘அவர்ணஸ்தர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்துக்கள் சதுர்வனிகர் என்றும், தீண்டப்படாதவர்கள் நேர்மாறாக பஞ்சமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இப்படி வேறுபாடுகளை கவனிப்பதற்கு ‘சொற்களே’ வழக்கத்தில் வந்துவிட்ட நிலையில், தீண்டப்படாதவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும்?

• ஒரே கடவுளை கும்பிடுகிறவர்கள்; ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள் எல்லாம் ஒரே சமுதாயம் என்றால், ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், இத்தாலியர் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் ஆகிவிடுவார்களா? இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்; ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்கள்தானே?

• ஒரே நாட்டுக்குள்ளே - ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்கூட ஒரே சமுதாயமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே! அமெரிக்காவில் வெள்ளையர்களும் கிறிஸ்தவர்கள்தான்; கறுப்பர்களும் கிறிஸ்தவர்கள்தான்; அவர்களை ஒரே சமூகம் என்று கூறிவிட முடியுமா?

• இந்துவத்தின் அடிநாதமாக இருக்கும் இந்துமதம் ஜாதியையும் - தீண்டாமையையும், மதத்தின் கட்டளைகளாகப் பிரகடனப்படுத்துகிறது; ஜாதியும், தீண்டாமையும் பிரிவினையின் மறுவடிவங்கள் அல்லவா? ஒற்றுமைக்குப் பதிலாக  வேற்றுமையை வலியுறுத்தும் ஒரு கலாச்சாரம் எப்படி - அனைத்து மக்களுக்குமான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?  

• இந்தியாவில் ஜாதிகளில் சிறப்பு அம்சம் ஒதுக்கி வைத்தலும், ஒதுங்கி இருத்தலுமே; இந்தக் கோட்பாடு மத நம்பிக்கையோடு இணைக்கப்பட்டு, வாழ்க்கை நெறியாகவும் வலியுறுத்தப்படுகிறது; இத்தகைய கொடூரமான ஒரு மதம் - உலகில் வேறு எங்கும் கிடையாது.

அம்பேத்கர் எழுப்பியுள்ள தர்க்க ரீதியிலான இந்த விவாதங்களுக்கு சங்பரிவாரங்களிடமிருந்த எந்த பதிலும் வரவில்லை. 

ஆதாரம்: அம்பேத்கர் எழுதிய “காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்கு செய்தது என்ன?” நூல்