தீபாவளி என்ற பண்டிகை நடந்து முடிந்துவிட்டது. நரகாசூரன் என்ற அசுரனை, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சூழ்ச்சியாகக் கொன்ற நாள். அசுரர்கள் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக, புராணக் கற்பனைக் கதையிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தீபாவளிக் கதை. அந்த தீபாவளி பண்டிகையாக மக்கள் மீது திணிக்கப் பட்டது. அந்த விழா கொண்டாட்டத்தைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுங்கள் என்று ஒரு வழக்கமும் சமூகத்தில் திணிக்கப்பட்டது.

அசுரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் உழைக்கின்ற மக்கள். தேவர்கள் என்பவர்கள் வேதங்களை ஓதி, மந்திரங்களை ஓதி, யாகங்களை நடத்தி உழைக்கின்ற மக்களை சுரண்டிக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு இந்த உழைக்கின்ற மக்கள் மிகப் பெரிய சவாலாக இருந்தார்கள். வேதங்களை கேள்வி கேட்டார்கள். அதன் காரணமாக இந்த அசுரர்கள் என்கிற உழைக்கும் மக்களை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதற்காக பல அவதாரங்களை எடுத்து வந்து, கடவுள்கள் அழித்தார்கள் என்று ஆரிய, பார்ப்பனியப் புராணங்கள் பல கட்டுக்கதைகளை உருவாக்கியது. அந்த அடிப்படையில் கொண்டாடப் பட்டது தான் நேற்று நடந்த தீபாவளி. அதனுடைய விளைவு என்ன ?

இன்றைக்கு சென்னை நகரத்தில் மட்டும் 48 டன் குப்பைகள் அகற்றப் பட்டு இருக்கின்றன. குப்பையை எடுக்கின்ற அந்த விளிம்பு நிலையில் இருக்கின்ற தொழிலாளிகள், எவ்வளவு அல்லலுக்கு, எவ்வளவு மாசுக்கு உட்பட்டிருப்பார்கள் என்பதை மனித நேயத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். AQI (Air Quality index) என்று மாசு பற்றிய ஒரு கண்ணோட்டம், 50 AQ இருந்தால் நல்ல காற்று, 100 வரை இருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். என்று கூறுகிறது Air Quality index.. ஆனால், நேற்று சென்னையில் 500யும் தாண்டி இருக்கிறது AQ. இரண்டு மணி நேரத்தில் 45 சிகரெட் புகையினை ஒருவர் சுவாசித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அத்தகைய பாதிப்புகளை சென்னை நகரவாசிகளுக்கு தீபாவளி கொண்டாட்டம் உருவாக்கியிருக்கிறது.

நுரையீரல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அடுத்த சில வாரங்களில் மருத்துவமனையை நோக்கி வரப் போகிறார்கள் என்ற செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி மனிதன் சுவாசிக்கும் காற்றைக் கெடுக்கின்ற ஒரு விழாவாக ஒரு மதத்தினுடைய விழா இருக்க வேண்டுமா? இது அறிவியலுக்கு உகந்தது தானா? இத்தகைய விழாக்களை இன்னும் எத்தனை ஆண்டுகாலம் கட்டி அழுது கொண்டிருக்கப் போகிறோம்? என்ற சிந்தனைகளை நோக்கி சமூகம் நகர்ந்தாக வேண்டும்.

திராவிட கட்சியினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? வைகோ விளக்கம்

இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கு பா.ஜ.க. உள்பட சில அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தன.

இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்பட திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறீர்களே? என்று கேட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

“புராணப் பொய், மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிட இயக்கம் போராடி வந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பது அப்படியொரு புராணப் பொய்யின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதனால் நாங்கள் தீபாவளியை கொண்டாடுவது இல்லை.

தீபாவளி என்பது வட நாட்டினருக்கே உரித்தான, அவர்கள் கொண்டாடும் பண்டிகை. அது தமிழர்களுக்கான பண்டிகை அல்ல. பண்டைய தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதற்கான எந்த வரலாற்று சான்றுகளும் இல்லை.

இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார். கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார். இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள். அதனால் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கும், இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கும் நாங்கள் வாழ்த்து சொல்கிறோம்.

பொங்கல் பண்டிகை என்பது உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை. மேலும் அது உழவர் மற்றும் தமிழர்களின் திருநாள் ஆகும். ஏனெனில் அது தமிழருக்கே உரித்தான பண்டிகை. பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து நீண்ட நெடுங்காலமாக இன்று வரை கொண்டாடி வரும் பண்டிகையாகும். அதனால் தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். அதனால்தான் பொங்கல் பண்டிகைக்கு நாங்கள் வாழ்த்து கூறுகிறோம்” என்றார்.

Pin It