வர இருக்கிறது தீபாவளி. பட்டாசுகளும், கொண்டாட்டங்களும் வழக்கம் போல கொரானா காலத்திலும் இருக்கதான் போகின்றன. மனிதர்களுக்குக் கொண்டாட்டங்கள் உற்சாகத்தைத் தரும். ஆக எல்லாக் கொண்டாட்டங்கள் மீதும் மனிதர்கள் நாட்டம் கொள்வது இயல்புதான். ஆனால் நாம் எதைச் செய்தாலும், ஏன் செய்கிறோம் என்று சிந்தித்துச் செயற்படுவதும் மனிதனின் இயல்புதான். அதுவே அறிவுடைமை ஆகும். அந்த வழியில் தீபாவளி பற்றி பார்ப்போம்.

vishnu varaka avatarதீபாவளி என்னும் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது என்று யாரையாவது கேட்டால், அது கிருஷ்ணன் நரகாசூரனைக் கொன்றதால் கொண்டாடப்படுவதாகக் கூறுகின்றார்கள். யார் இந்த நரகாசூரன் என்றால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. ஹிரண்யன் என்ற அசுரன், பூமா தேவியை அதாவது பூமியைப் பாயாய்ச் சுருட்டி, கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். உருண்டையானப் பூமியை எப்படிச் சுருட்டுவாய் என்று கேட்கக் கூடாது. ஏனெனில், பூமி உருண்டை என்று அறிவியல் கூறுவதற்கு முன் விடப்பட்ட கதை அல்லவா! பெரியார்தான் கேட்டார், ‘ஒரு டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்றால், அதே தண்ணீரில் எப்படி அந்த டம்ளரை ஒளித்து வைக்க முடியும்; இந்த உலகத்தில்தான் கடல் இருக்கிறது, அப்படியானால் கடலில் எப்படி உலகத்தை மறைத்து வைக்க முடியும்?’ என்று. இதுவரை பதில் இல்லை.

போகட்டும். கதைக்கு வருவோம். பூமியைக் காப்பாற்ற விஷ்ணு மூன்றாவது அவதாரமாக வராக (பன்றி) அவதாரம் எடுத்து, தலை தூக்கும் அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, ஹிரண்யனைக் கொன்று, பூமா தேவியைக் காப்பாற்றினாராம். அப்படிக் காப்பாற்றப்படும் பொழுது பூமா தேவி கற்பம் ஆகிவிட்டார். ஹிரண்யன் கடத்தி வைத்திருந்தப் பொழுது பத்திரமாக இருந்த பூமா தேவி, காப்பாற்றப்படும் பொழுது கற்பமானது முரண். இது தான் தருமத்தைக் காப்பாற்றும் இலட்சணமா? மேலும், பூமியைக் கற்பமாக்க முடியுமா? பூமிக்குப் பிள்ளைப் பிறக்குமா என்று யோசித்துப் பாருங்கள்! இப்படிப் பிறந்தப் பிள்ளைதான் நரகாசூரனாம்.

இப்படிப்பட்ட நரகாசூரனைக் கொல்ல, விஷ்ணு தனது எட்டாவது அவதாரத்தை எடுத்தாராம். நிற்க. மூன்றாவது அவதாரத்திற்கும், எட்டாவது அவதாரத்திற்கும் இடையில் எவ்வளவு ஆண்டு வேறுபாடு என்று கேட்டால், தலையே சுற்றும் அளவிற்குக் கோடானக் கோடி ஆண்டு வேறுபாடு என்று ஒரு கணக்கைக் கூறுவார்கள். உலகமே தோன்றி இருக்காது என்று அறிவியல் கூறும் காலத்திற்கு அப்பால் கூறுவார்கள். அப்பொழுது இவர் பெத்துப் போட்டுப் போனக் குழந்தையை, பிறகு தர்மத்தைக் காக்க இவரே வந்து கொல்வதற்கு எடுத்த அவதாரம்தான் கிருஷ்ண அவதாரம். அவ்வாறு தர்மத்தைக் காக்க வந்த கிருஷ்ணர், இராதை மற்றும் கோப்பியர் பெண்களுடன் கூடிப் பழகிக் கூத்தடித்து, தர்மம் காக்கும் லீலைகள் பல புரிந்து, பிறகு நரகாசூரனைக் கொன்றாராம். இதைத்தான் தீபாவளி என்று கொண்டாடுகிறோம் என்கின்றனர். அதற்கு ஏன் நீங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்? உறவினர் இறந்தால்தான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்.

ஒருவர் கொல்லப்படுவதைக் கொண்டாடுவது சரியா என்று கேட்டால், ஒரு விளக்கம் வருகின்றது. தீமையை அழித்த நாளாகவே கொண்டாடுகின்றோம் என்று. அப்படியானால் மறு கேள்வி வருகின்றது. அதன் பிறகு தீமையே நடக்கவில்லையா? தர்மத்தைக் காக்கும் போர் என்று கூறப்படும் மகாபாரதமே அதன் பிறகுதானே நடந்ததாகக் கதையில் வருகின்றது. அதில்தான் தர்மத்தைப் பற்றி கீதை உபதேசம் வேறு வருகின்றது. இந்த கீதையின் படிதான், தான் வாழ்கின்றேன் என்று நரகாசூரனின் தந்தை வராக அவதாரத்தில் சொல்கிறார். மீண்டும் நிற்க. அது எப்படி எட்டாவது அவதாரத்தில் சொல்லப்பட்ட கீதையின் படிதான் மூன்றாவது அவதாரத்தில் வாழ்ந்தார். அது வேறொன்றும் அல்ல, அவதாரக் கதைகளை எழுதியவர்கள் வேறு வேறு ஆள்கள், அதை வரிசைப்படுத்தியவர் வேறு ஆள் போல. ஆனால் முழுமையாகப் படிக்காமல் வரிசைப்படுத்திவிட்டார், பாவம்!

ஆனால், அறிஞர்கள் இந்தத் தீபாவளிக் குறித்து கூறுகையில், இது சமண மதத்தின் பண்டிகையாகக் கூறுகின்றனர். சமண மதத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர் ஆன மகாவீர் முக்தி அடைந்த நாள் என்று கூறுகின்றார்கள். அதாவது இறந்த நாள். அதனை பரிநிர்வாண நாள் என்று கூறுகின்றனர். இந்த நாளில் அவர்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பார்கள்.

மற்ற மதங்களின் பண்டிகைகளை, அடையாளங்களை எடுத்து, இந்து மதம் தனதாக்கிக் கொள்வதற்காக, அதன் மீது அறிவுக்கு ஒவ்வாத, ஆபாசங்களுடனும், பல பிழைகளுடனும் கூடிய கதைகளை உருவாக்கிக் கொண்டது. சொல்லப்படும் கட்டுக் கதைகள் உயர் சாதியினரிடம் இருந்து வருவதால் மற்றவர்களும் மயங்கி ஏற்கின்றனர். மக்கள் அறிவு வழி சிந்தித்து, சிறந்த வழி வாழவேண்டாமா? இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் பொழுது எவ்வளவு காற்று மாசுப்படுகின்றது என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். காற்று மாசு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், பறவைகளின் அல்லல்கள் இவைகளை அறிவுடைய மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழர் இலக்கியங்களில் எங்கும் காணப்படாத இந்தப் பண்டிகை நம்முடையதுவும் அல்ல. ஆரியர்களின் கட்டுக்கதைகளுக்கு இனியும் மதி மயங்கக் கூடாது. கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கக் கூடியத் தீபாவளியைப் புறக்கணித்து ஆரோக்கியமான, அறிவுடன் கூடிய வாழ்க்கை முறைக்கு மக்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

- மதிவாணன்

Pin It