தீபாவளி பட்டாசு வெடிப்புகளால் இந்தியாவிலேயே அதிக காற்று மாசு ஏற்படும் நகரமாக கடந்த ஆண்டு சென்னை இருந்தது என்று கூறியுள்ள மாசு, கட்டுப்பாட்டு வாரியம் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல் பாதிப்புகளோடு புற்று நோய் ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது.

தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது மிகவும் அதிகமாக உள்ளது. இது மதம் மற்றும் திருவிழா சார்ந்த விஷயம் என்பதால், அரசானது விழிப்புணர்வை மட்டுமே நம்பியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது கை கொடுக்கவில்லை. கடந்தஆண்டில் தீபாவளி பண்டிகை யின்போது, சென்னை சவுக்கார் பேட்டையில் 777 மைக்ரோ கிராம் காற்று மாசு பதிவானது.

காற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப் படுகிறது. 10 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு மாசு அதிகரித்திருந்தது. இதனால் தீபாவளி தினத்தன்று காற்று மாசு கணக்கிடப்பட்ட நகரங்களில் சென்னை, தேசிய அள வில் முதலிடம் பிடித்தது. அன்று இரவு, சென்னையில் பலர் சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மாசு நுரையீரலில் தங்கி, புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக் கினறனர்.

கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் தீபாவளியின்போது முறையே 852 மைக்ரோ கிராம், 1000 மைக்ரோ கிராம் என காற்று மாசு பதிவானது. அதனைத் தொடர்ந்து மேற்குவங்க அரசு, பட்டாசில் கலக்கப்படும் ரசாயனங்களின் அடர்த்தியை குறைக்கவும், பட்டாசு வெடித்தால் ஏற்படும் ஒலியின் அளவைக் குறைக்கவும் உத்தர விட்டது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதையும் தடுத்தது. அதனால் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தீபாவளியின்போது முறையே 282, 61 மைக்ரோ கிராமாக காற்று மாசு குறைந்தது.

இந்நிலையில் சென்னையில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

வசிப்பிடங்களில் குழந்தைகள் மற்றும் இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்வாய்பட்ட முதியோர்கள், சுவாச நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவோர் உள்ளனர். வீடுகளில் நாய்களும் வளர்க்கப்படுகின்றன. இவர்களுக்கு வெடிச் சத்தம், புகை ஆகாது. அதனால் வீடுகளில் தனித்தனியாக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, பொதுமக்கள் ஆதரவுடன், அந்தந்த பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அங்கு வெடிக்கப்படும் பட்டாசுகளை விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதுதானா என பரிசோதிக்கவும் திட்டமிட்டிருக்கி றோம்.

அது தொடர்பாக சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தவுள்ளோம்.

பட்டாசால் ஏற்படும் குப்பைகள், வீட்டில் உருவாகும் குப்பைகளைப் போன்றதல்ல. அவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசு வெடிப்பது உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Pin It