தீபாவளி கொண்டாட்டங்களை ஒருவழியாக முடித்துக் கொண்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள். வருடம் முழுவதும் உழைத்து சேர்த்த ஒரு பெரும் தொகை சாலை முழுவதும் பட்டாசுக் குப்பைகளாக மாறி, துப்புரவுத் தொழிலாளர்களை சித்திரவதை செய்துகொண்டு இருக்கின்றது. பட்டாசு ஆலை அதிபர்களும், துணிக்கடை அதிபர்களும், சாராய ஆலை அதிபர்களும் தங்களுக்குக் கிடைத்த கொழுத்த லாபத்தில் கிறங்கிப் போய் கிடக்கின்றார்கள். உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிக்க விதித்த நேரக்கட்டுப்பாட்டை மயிரளவுக்குக் கூட யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பட்டாசுகளை வெடித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட்டார்கள் இளைஞர்கள். இருப்பினும் நீதிமன்றக் குட்டுக்கு அஞ்சி, தமிழகம் முழுக்க 2372 பேர் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

diwali pollutionதீபாவளி கொண்டாடிய பல பேரிடம் பேசிப் பார்த்ததில் இருந்து அது எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பதே பல பேருக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதுவும் இன்றைய ஹைடெக் இளைஞர்களிடம் சென்று தீபாவளி கொண்டாடுவது தமிழர்களுக்கு அவமானம், அது தமிழர்களை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்கள் உருவாக்கிய புராண கட்டுக்கதை, புராணங்களிலும் இதிகாசங்களிலும் அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்று இழிவுபடுத்தி இருப்பதெல்லாம் தமிழர்களைத் தான், அதனால் மானமுள்ள தமிழர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடக்கூடாது என்று தொண்டைத் தண்ணீர் வற்ற வகுப்பெடுத்தாலும் ஒரு பயலுக்கும் நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதே தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை அது ஒரு மகிழ்ச்சி அவ்வளவுதான். அதைத் தாண்டி அவர்கள் எதையும் தெரிந்துகொள்ள முற்படுவதில்லை. அரசியல் உணர்வோடு பிரச்சினையை அணுகிப் பார்க்கும் திராணியற்ற தக்கை மனிதர்களாகவே இன்றைய இளைஞர்கள் இருகின்றார்கள். சரி , தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லை என்றாலும், தன்மானம், சுயமரியாதை போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படும், குழந்தைகளும், இதய நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் அதைச் செய்வது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உலக சுகாதாரம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காற்று மாசு தொடர்பாக அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மாசடைந்த காற்றால் 2016ம் ஆண்டு உலகம் முழுவதும் 15 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள 93% குழந்தைகள் தினமும் மாசடைந்த காற்றையே சுவாசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நடுத்தர மற்றும் ஏழை நாடுகளில் 98% குழந்தைகள் காற்று மாசால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல காற்றில் ஏற்பட்டுள்ள மாசால் உயிரிழப்போர் பட்டியலில், உலகளவில் டில்லி மூன்றாம் இடம் பிடித்துள்ளது . சீனாவின் ஷாங்காய் நகரம் காற்று மாசில் முதலிடம் பிடித்திருக்கின்றது . இங்கு 2016ல் 18 ஆயிரத்து 200 பேர் மோசமான காற்றை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் சீனாவில் உள்ள பீஜிங் நகரத்தில் 17 ஆயிரத்து 600 பேர் காற்று மாசால் 2016ல் உயிரிழந்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டில்லியில் 2016ல் 15 ஆயிரம் பேர் மோசமான காற்றை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 10 ஆயிரத்து 500 பேரும் சென்னை மற்றும் பெங்களூரில் தலா 4800 பேரும் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர். மோசமான காற்றை சுவாசிப்பவர்கள் இதய நோய், நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டும் தீபாவளியால் டெல்லியின் காற்றுமாசு பல இடங்களில் 999 மைக்ரோ கிராம் வரை அதிகரித்துள்ளது. ஒரு கன மீட்டருக்கு அனுமதிக்கப்பட்ட மாசு 100 மைக்ரோ கிராம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் தீவிர விளைவுகளை நாம் புரிந்துகொள்ள முடியும். சென்னையில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றுமாசு பெரிய அளவில் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

pollution delhiஉலகம் முழுவதும் பெரும் அளவில் சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. முதலாளித்துவத்தின் கொடுங்கரங்களில் சிக்கி இந்த உலகம் சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையாலும், இன்னும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையாலும் காற்று மண்டலம் திணறிக் கொண்டு இருக்கின்றது. உலகம் முழுவதும் காற்றுமாசு என்பது பெரும் பிரச்சினையாக உருவாகி வருகின்ற சூழ்நிலையில், அதைத் தடுக்கும் தார்மீகக் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. வருங்கால தலைமுறை இந்த பூமியில் வாழ வேண்டும் என்றால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்திற்கு எதிராகவும் நாம் போராட வேண்டி தேவை இருக்கின்றது. ஒரு பக்கம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிக் கொண்டே, இன்னொரு பக்கம் பட்டாசு வெடிப்பது எவ்வளவு அபத்தமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தவரின் குற்றத்தை சுட்டிக்காட்டும் தார்மீக தகுதி என்பது அந்தக் குற்றத்தை நாம் செய்யாமல் இருப்பதே.

ஒரு சமூகமே ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இல்லாமல் கூட்டாக சேர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது என்பது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்வது போன்றது. இத்தனை லட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசால் இறக்கின்றார்கள் என்பதற்காக மனித விழுமியங்கள் உள்ள ஒவ்வொருவரும் துயரப்பட வேண்டும். பெரும் கார்ப்ரேட்கள் தங்களின் லாப வெறிக்காக செய்யும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், ஒரு தனிமனிதன் சில பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசையும் நாம் சமப்படுத்த வேண்டியதில்லை என்றாலும், ஒரு பெரும் மக்கள் திரள் அதை கூட்டாக செய்கின்ற போது நிச்சயமாக அதை நாம் எதிர்த்துதான் ஆக வேண்டும். கார்ப்ரேட்டுகள் செய்யும் சூற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக உரத்து குரல் எழுப்பும் நாம், அதே போல சுற்றுச்சூழலை நாசம் செய்யும் செயலில் ஈடுபடுவது வெட்கமற்ற பிற்போக்கு செயலாகும்.

தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்ன பிற்போக்கு பார்ப்பன அடிமைகள் யாருக்குமே இதைப் பற்றி கவலை இல்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. காரணம் அவர்கள் பார்ப்பன அடிமைகளாகவும், கார்ப்ரேட்டுகளின் கைக்கூலிகளாகவுமே எப்போதும் இருப்பவர்கள். ஆனால் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் கூட தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதாரத்தை நாசமாக்கும் இந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்னது அவர்கள் பொறுக்கித் தின்பதற்கு ஏற்ப சித்தாந்தத்தை வளைக்கும் பிழைப்புவாதிகள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இது போன்றவர்களுக்கு ஒருநாளும் மக்களின் உண்மையான நலனில் அக்கறை இருந்தது கிடையாது. தன்மானத்தையும், சுயமரியாதையையும் தொலைத்துவிட்டு அரசியல் செய்யும் புல்லுருவிக் கூட்டத்தால் ஒருநாளும் எந்த சமூக மாற்றத்தையும் இந்த மண்ணில் ஏற்படுத்திவிட முடியாது.

ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அது பார்ப்பன ஊடகங்களாக இருந்தாலும் சரி, சூத்திர ஊடகங்களாக இருந்தாலும் சரி அவை அடிப்படையில் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு சேவகம் செய்வதாகவே உள்ளன. ஒவ்வொரு மனித உயிரும் இந்த மண்ணில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. அதை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் அனைத்தையும் அழித்து ஒழிப்பதுதான் ஒரு உண்மையான முற்போக்குவாதியின் அதுவும் மார்க்சிய , பெரியாரிய அரசியலை ஏற்றுக்கொண்டவர்களின் பணியாகும். அதை செய்யத் தவறும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே, மக்கள் விரோதிகளே.

- செ.கார்கி