அய்.அய்.டி. நிறுவனங்களில் நடந்தேறி வரும் பார்ப்பனியக் கொடூரங்கள் குறித்து திராவிடர் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தொடர்ச்சியாகப் பேசியும், போராடியும் வந்துள்ளனர். ஆனால், அவற்றின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் துணிந்ததில்லை. அய்.அய்.டி. என்றில்லை, நடுவண் அரசு நிறுவனங்கள், கோயில்கள், நீதிமன்றங்களில் பார்ப்பனிய மேலாண்மையை மறைமுகமாக அங்கீகரித்தே நடுவண் அரசுகள் சுதந்திர காலம் தொட்டு இயங்கி வந்திருக்கின்றன. பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனியம் தொடுக்கும் கொடுமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தான் ஃபாத்திமாவின் தற்கொலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நந்தன், வள்ளலாரைக் கொன்றுவிட்டு, ‘ஜோதியில் அய்க்கியமானார்கள்’ என்று பொய்யுரைத்த பார்ப்பனியம்தான், இன்று மாணவர்களின் தற்கொலையை ‘பாடத் திட்டங்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என நாக்கூசாமல் கூறுகிறது.
கடந்த 2019, நவம்பர் 9ஆம் தேதி சென்னை அய்.அய்.டி.யில் விடுதியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர்தான் காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதியிருக்கிறார்.
அத்தனை தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் வாங்கும் திறன் பெற்ற மாணவியாக ஃபாத்திமா திகழ்ந்திருக்கிறார். ஒரு பார்ப்பனரல்லாத பெண் இவ்வளவு திறமையுடன் விளங்குவதை சகித்துக் கொள்ள முடியாத அய்.அய்.டி. பேராசிரியர் மேற்கொண்ட பாரபட்சமான நடவடிக்கைகள், தொந்தரவுகள் காரணமாகவே ஃபாத்திமா தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஃபாத்திமா தனது தற்கொலைக் குறிப்பில் சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், 2017ஆம் ஆண்டு ஓர் இந்துத்துவ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ‘Modern Hindu Phobia - Decolonizing The Tamil Mind’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பித்து இருக்கிறார்.
சுதர்சன் பத்மநாபன் ஒரு சங்கி என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பார்ப்பனர்கள் சங்கிகளாக இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, பாஜக இவையெல்லாம் பார்ப்பனர் நலனுக்காக உருவாக்கப்பட்ட வெவ்வேறு பெயர்கள், அமைப்புகள் தானே!
அய்.அய்.டி.யில் காலங்காலமாக பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் நிலவி வருகிறது. பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், இயக்குனர், மாணவர் சேர்க்கை என அனைத்திலும் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் தான். பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை இன மக்கள் உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதைத்தான் பேராசிரியை வசந்தா கந்தசாமி முதல் ஃபாத்திமா வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மதவெறிக்குப் பலியானாரா ஃபாத்திமா?
பேஸ்புக்கில் தோழர்கள் சிலர், ‘மதவெறிக்குப் பலியான ஃபாத்திமா' என்று பதிவிட்டிருக்கிறார்கள். இது பிரச்சினையின் மூலகாரணத்திலிருந்து விலகிச் செல்வதாகும். பார்ப்பனர்கள் விரும்புவதும் இதைத்தான்.
மதம் என்று சொல்லிவிட்டால், ஆண்ட சாதிப் பெருமை பேசும் இந்து சாதியவாதிகளும் பார்ப்பனக் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்; பிரச்சினை இந்து எதிர் முஸ்லிம் என மாறும்; பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.
ஃபாத்திமாவுக்குப் பதில் பாண்டியம்மாள் இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். பார்ப்பனர்களுக்கு ஃபாத்திமாவும் ஒன்றுதான், பாண்டியம்மாளும் ஒன்றுதான்.
எப்போது, யாருக்கு, எந்த அடையாளம் கொடுக்க வேண்டும் என்பது பார்ப்பனியத்திற்குக் கைவந்த கலை.
பிற மதத்தினரை ஒடுக்க ‘இந்து மத' அடையாளம்.
தலித் மக்களை ஒடுக்க ‘ஆண்ட சாதி' அடையாளம்.
பார்ப்பனரல்லாதாரை ஒடுக்க ‘சூத்திர' அடையாளம்.
இந்த அடையாளங்களுக்குள் சிக்கிக் கொண்டால், நாம் தப்பிப் பிழைக்கவே முடியாது.
அய்.அய்.டி.யில் ‘பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்' என்பதுதான் மூலப்பிரச்சினை. அதில் ‘அவாள்’ தெளிவாக இருக்கிறார்கள். நாமும் தெளிவாக இருந்தால்தான், பார்ப்பனரல்லாதார் ஒற்றுமையைக் கட்டி எழுப்ப முடியும்.
அய்.அய்.டிக்கு தமிழ்நாட்டில் இடம் எதற்கு?
மேற்பார்வைக்கு இக்கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் அது நியாயம்தானா என்பதை யோசிக்க வேண்டும்.
இந்திய அரசிற்கு அதிக வரி செலுத்தும் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக எப்போதும் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய அரசின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிகப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
அய்.அய்.டி. என்பது தன்னாட்சி (Autonomous) அதிகாரம் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், அது நிர்வாகத்தில் மட்டுமே தன்னாட்சி கொண்டும், நிதிக்கு நடுவண் அரசைச் சார்ந்தும்தான் இருக்கிறது. அந்நிறுவனத்தில் பார்ப்பனர்களின் நலனுக்காகத் தொழிற்படும் பணத்தில் தமிழர்களின் பங்கு கணிசமாக இருக்கிறது.
சென்னை அய்.அய்.டி.யை மூடக் கோரினால், பார்ப்பனர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும். தமிழ்நாடு எப்போதும் அவர்களுக்குத் தொல்லை அளிக்கும் மாநிலம்தான். இதே அய்.அய்.டி.-ஐ வேறொரு மாநிலத்திற்கு மாற்றி, தங்களது பார்ப்பன மேலாண்மையை, சுரண்டலை அங்கே தொடர்வார்கள். அதற்கும் தமிழர்களாகிய நம் வரிப்பணம் செலவாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அய்.அய்.டி.ஐத் தாரை வார்க்க நினைப்பது சரியல்ல.
அய்.அய்.டி. மோகம்
அய்.அய்.டி.யில் படித்து முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதைப் பார்த்து, தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி.யில் சேர்க்க ஆசைப்படுகிறார்கள்.
பெற்றோரின் இந்த ஆசையைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை மிக அதிகம்.
அய்.அய்.டி. பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லி, கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பள்ளியில் 11, 12ம் வகுப்புகளுக்கு ஓராண்டிற்கு வாங்கும் கட்டணம் 1.75 இலட்ச ரூபாய்.
அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பேராசிரியர் வசந்தா கந்தசாமி, ஃபாத்திமாக்களின் கதைகள் தெரியாது.
அய்.அய்.டி.யில் சேர்ந்து விட்டால், தங்கள் பிள்ளைக்கும் Google, Facebook போன்ற நிறுவனங்களில் 1 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், அவர்கள் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ரூ 3.50 இலட்சம் செலவு செய்கிறார்கள்.
பார்ப்பனர்களின் குருகுலம்தான் அய்.அய்.டி. என்பது தெரியாமல்...
தாங்கள் எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு பெரிய கோச்சிங்கில் சேர்த்துவிட்டாலும், பார்ப்பனரல்லாதார் அய்.அய்.டி.யை முடித்து வெளிவர முடியாது என்பது தெரியாமல்...
எத்தனை பெற்றோர்கள் தங்களது சம்பாத்தியத்தை இத்தகைய பள்ளிகளிடம் இழக்கிறார்கள்?
எத்தனை மாணவர்கள் அய்.அய்.டி.யில் சேர முடியாமல் விரக்திக்குத் தள்ளப்படுகிறார்கள்?
நம் அனைவரின் வரிப்பணத்தில் அய்.அய்.டி. எனும் பார்ப்பன 'பூதம்' பார்ப்பனரல்லாதோர் மீது நிகழ்த்தும் கொடுமைகள்தான் எத்தனை, எத்தனை?!
என்னதான் தீர்வு?
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை கடுமையாக அமல்படுத்தினாலொழிய இத்தகைய கொடூரங்கள் தொடர்வதை நாம் தடுக்க இயலாது.
‘அய்.அய்.டி.யில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் என அனைத்திலும் தமிழர்களுக்கு 50% ஒதுக்க வேண்டும், மொத்த இடங்களுக்கு சாதிவாரியான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும், பேராசிரியர்களின் கல்வித் தகுதி, கற்பிக்கும் திறன் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும், பேராசிரியர்களின் பதவி உயர்வில் வெளிப்படைத் தன்மை, இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்.’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனரல்லாத எல்லோருமே தீண்டத்தகாதவர்கள், வாழத் தகுதியற்றவர்கள் தான். பார்ப்பனரல்லாதாரின் விழிப்புணர்வும், ஒன்றுபட்ட போராட்டமும் தான் நமக்கான நீதியை பெற்றுத் தரும்.
சமூக நீதிப் போராட்டங்களில் எப்போதும் தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதியைக் கொண்டு வருவதற்கும் தமிழர்களாகிய நாம்தான் முன்கை எடுக்க வேண்டும்.
- கீற்று நந்தன்