பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ... வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ.... சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ... அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது...

காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் - என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்...

இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்...

பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்...

இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் சாதி வெறி அதிகாரங்களுக்கு ஆதரவாய் நின்று பார்ப்பனிய வெறி கொண்டு ஆடுகின்றன...

எனவே, தமிழ்நாட்டைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டுமென்றால், தமிழினத்தை அடிமைப்படுத்தியிருக்கும் இந்தியப் பார்ப்பனிய வல்லாட்சியை எதிர்க்க வேண்டுமென்றால், சாதி வழியான அடித்தட்டு மக்களை அடக்கி நசுக்கி வரும் சாதிய வெறித்தனங்களை எதிர்த்தாக வேண்டியிருக்கிறது.

இந்தியப் பார்ப்பனிய, பன்னாட்டு வல்லரசிய, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து உண்மையான மக்கள் ஆட்சியை, தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றால், உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு அந்த அதிகாரங்களை வீழ்த்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்...

அத்தகையதோர் விரிந்த முயற்சியின் முதற்படியாகத்தான்... கருஞ்சட்டைப் பேரணியும்... இப்போது நீலச் சட்டைப் பேரணியும்...

சாதியை, சனாதனப் பார்ப்பனிய வெறியாட்டங்களை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரடியவர் என்பது மட்டுமின்றி மிகப் பெருமளவில் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் புரட்சியாளர் அம்பேத்கர்...

சாதி ஒழிப்புக்கான, பார்ப்பனிய ஆதிக்க ஒழிப்புக்கான அவரின் கடும் முயற்சிகள் பல பின்பற்றத்தக்கன... எனவே, வாருங்கள்... அவரின் நினைவு நாளை முன்னிட்டு வரும் திசம்பர் 22ஆம் நாள் அன்று நீலச் சட்டையுடன் புரட்சியாளர் அம்பேத்கரின் போர்க் குரலை வளர்த்தெடுப்போம்...

இந்தியப் பார்ப்பனிய அதிகாரத்தை அடிசாய்ப்போம்! வல்லரசியச் சுரண்டல்களை, நிறுவனங்களை அவற்றின் சூறையாடல்களைத் தடுத்து நிறுத்துவோம்! சாதி மத அரசியல் அதிகாரங்களை வீழ்த்துவோம்!

அணி அணியாய்த் திரள்வோம்... அதிகாரங்களை அடிசாய்ப்போம்...

திசம்பர் 22, 2019 - கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நீலச் சட்டைப் பேரணி - சாதி ஒழிப்பு மாநாடு

சாதியத்தை வேரறுக்க சமத்துவத்தை நிலைநாட்ட கோவையில் திரள்வோம்!

கொள்கை முழங்குவோம்...

- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Pin It