‘காவி’ப் புனிதம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளுவருக்கும் ‘காவி’ உடை போர்த்தி ‘இந்து மதக் காவலர்’ என்கின்றன, சங்பரிவாரங்கள். இந்து மதம், பார்ப்பனரல்லாத மக்களை வேத அதிகாரத்துக்கு அடிமைப்படுத்தி ‘சூத்திரா’ என்ற இழிவைத் திணித்து, ‘கடவுள் - மதம்’ என்ற நம்பிக்கை மாயைக்குள் நமது மக்களை மூழ்கச் செய்திருக்கிறது. உள்ளே மறைந்து கிடப்பது பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு.

இந்த உண்மைகளைப் பேசினால் இந்து மத எதிர்ப்பாளர்கள் என்று ஓலமிடுகிறார்கள். வீதிகளில் இறங்கி இவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார், எச். ராஜா என்ற பார்ப்பனர். ‘காவிப் புனிதம்’ பேசும் கூட்டங்கள், அந்தப் புனிதங்களுக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்காரர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?

• நித்தியானந்தா காவி உடை ‘ஆன்மீக’க்காரர். இளம் பெண்களைக் கடத்தி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறார். புகார் தந்த இளம் பெண்களின் பெற்றோர், எச். ராஜா ‘குல’ வம்சமான பார்ப்பனர்கள் தான். குஜராத் காவல்துறை, காவி நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார், தூதரக உதவியுடன் கைது செய்வோம் என்று கூறுகிறது.

இதுதான் காவிப் புனிதமா?

• கல்கி அவதாரம் என்று தன்னை அறிவித்துக் கொண்டார், ஒரு காவி உடை பார்ப்பனர். அவர் பெயர் விஜயகுமார். உலகம் முழுதும் காவி ‘ஆன்மீக வணிக’ நிறுவனங்களைத் தொடங்கினார். அவரது 38 மய்யங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறை 23.87 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் ரூ.9 கோடி மதிப்பிலான அன்னியப் பணத்தையும் கைப்பற்றியுள்ளது. 1.68 கோடி மதிப்பிலான தங்க நகைகள், 433.47 காரட் வைரமும் (11.7 கோடி மதிப்பு) கைப்பற்றப்பட்டுள்ளன. ‘காவி கல்கி பகவான்’, மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் இதில் தொடர்பு இருப்பதாக வருமான வரித் துறை கூறுகிறது.

இதுதான் காவிப் புனிதமா?

• தில்லை நடராசன் கோயிலில் நடராஜ தீட்சதர் என்ற ‘ஆன்மீக’ப் பார்ப்பனர் தலைமறைவாகியிருக்கிறார். தனது குழந்தையின் பிறந்த நாளுக்காக அர்ச்சனை செய்ய வந்தவர் ஒரு ‘இந்து’ப் பெண். அவர் ஒரு செவிலியர். நாள் நட்சத்திரம், குழந்தையின் பெயரைக்கூட கேட்காமல் அர்ச்சனை செய்தார் ‘தீட்சதர்’. உண்மையான நம்பிக்கைக் கொண்ட அந்த ‘இந்து’ப் பெண், தனது இந்து நம்பிக்கையின் உந்துதலால் தீட்சதரிடம் கேள்வி கேட்க, தீட்சதரோ அந்தப் பெண்ணைத் தாக்கியிருக்கிறார். தில்லை கோயிலில் தரிசனத்துக்கு வந்திருந்த ‘இந்து’ பக்தர்களே இதை சகிக்க முடியாமல் காவல்துறையில் புகார் கூறியுள்ளனர். சென்னையில் முக்கிய புள்ளி ஒருவர் வீட்டில் பதுங்கிக் கொண்டு, ‘முன் ஜாமீன்’ கோரி மனு போடுகிறார், தீட்சதப் பார்ப்பனர்.

தீட்சதர் - பார்ப்பனர் என்றால், ‘இந்து’க்களைப் புண்படுத்தலாம்; பக்தரை பெண் என்றும் பார்க்காமல் தாக்கலாம்.

‘இந்து’ பெண்களைக் கடத்தலாம்; வருமான வரித் துறையை ஏய்க்கலாம்.

இதற்குப் பெயர் ‘காவிப் புனிதமா?’ இந்து முன்னணிகளே? எச். ராஜாக்களே! நீங்கள் பேசும் ‘இந்து’ப் பாதுகாப்புக்குப் பெயர் பார்ப்பனப் பாதுகாப்பு என்ற பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். பதில் உண்டா?

இந்த ‘காவி கிரிமினல்களை’ ஏன் கண்டிக்கவில்லை?

Pin It