dvk against honor killingகொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

நந்தீஷ்-சுவாதியின் கொடூரமான ஜாதிவெறி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (நவம்.19, 2018) சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக்க கழகம், இளந்தமிழகம் ஒருங்கிணைத்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு தரப்பட்ட அறிக்கை விவரம்:

கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள போதுமானது. இதில் தொடர்புள்ள கூலிப்படை இன்னும் கைது செய்யப்படவில்லை. நந்தீசின் பெற்றோரை அச்சுறுத்தி மாண்டியாவிலேயே  உடல்களை எரியூட்டிவிட்டது காவல்துறை. கொல்லப்பட்டது நந்தீசு, சுவாதி மட்டுமல்ல, சுவாதியின் வயிற்றில் வளர்ந்துக்கொண்டிருந்த மூன்று மாதக் குழந்தையும்! இதுவரை வெளியில் தெரிந்த சாதி ஆணவக் கொலைகளிலேயே மிகவும் கோரமானது இதுவாகும்.

2012 இல் இளவரசன் – திவ்யா இணையர் பிரிக்கப்பட்டு இளவரசன் கொல்லப்பட்டது தொடங்கி அரசியல் அரங்கில் முட்டுக் கொடுக்கப்படும் சாதி ஆணவப் படுகொலைகளின் தொடர் வரிசை நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான காட்டு மிராண்டித்தனமாகும். அண்மையில் தெலங்கானாவில்  அம்ருதாவின் இணையர் பிணராய் சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதைக் கண்டோம்.

சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்றுமாறு சனநாயக ஆற்றல்கள் வலியுறுத்தி வந்தபோதும் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதைப் புறக்கணித்து வருகிறது. மக்களின் சாதியுணர்வோடு முட்டிமோத விரும்பாத முக்கிய அரசியல் கட்சிகள் பட்டும்படாமல் இதைக் கண்டித்துவிட்டு கடந்துவிடுகின்றன. சாதியை வாக்கு வங்கிக்காக நம்பி இருக்கும் பிழைப்புவாத சாதிக் கட்சிகள் காதலையும் சாதி மறுப்பு திருமணங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதை மீறுபவர்களை கொல்லத் தூண்டும் நோக்கிலும் தலித் இளைஞர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். இதை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது நாகரிகத்திற்கு ஒவ்வாததாகும். சாதி அரசியல் கட்சிகளின் பின்புலம் இருப்பதால் இலகுவாக இதை முறியடித்துவிடவும் முடியாது. இடைவிடாத தொடர் இயக்கங்களின் வழியாகத்தான் சாதி ஆணவக் குற்றங்களுக்கு முடிவுகட்ட முடியும். இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாகப் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

கோரிக்கைகள்:

  • சுவாதி-நந்தீசு கொலை வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிய வேண்டும்
  • நந்தீசு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்க வேண்டும்.
  • கொலையில் தொடர்புடைய கூலிப் படையினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
  • வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும்.
  • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான வெளிப்படையான கண்டனத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
  •  சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வேண்டும்.

கலப்பு மண இணையர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டுமென வலியுறுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக மக்களே!

சாதி ஆணவத்தின் காரணமாக காதலர்களை மணம்புரிய விடாமல் தடுப்பது, மணமானப் பின்பும் பிரிப்பது, பிரிக்க இயலாவிட்டால் கொல்வது என நீளும் உரிமை மீறல்களைச் சட்டம் மட்டுமே தடுத்துவிட முடியாது. பழைய கருத்துகளின் பிடியில் சிக்குண்டுள்ளோரை மீட்டெடுக்க புதிய சக வாழ்வை நாடும் சமூக சக்திகள் அனைவரும் முனைய வேண்டும். அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள், சினிமா, விளையாட்டுத் துறையினர், தொழிற்சங்கங்கள், அரசுத்துறையினர், எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள், இலக்கிய ஆளுமைகள், மாணவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள், ஊடகங்கள் என துறைதோறும் உள்ள சனநாயக சக்திகள் சமுதாய வளர்ச்சிக்கு தடையாய் உள்ள சாதி ஆணவத்திற்கு எதிராய்ப் பேச வேண்டும், போராட வேண்டும், இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் திருவல்லிக்கேணி, மயிலைப் பகுதித் தோழர்களும், வடசென்னை மாவட்ட பெண் தோழர்கள் ராஜி மற்றும் சங்கீதா மற்றும் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

எட்டு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன. பங்கேற்ற அமைப்புகளும் அதன் பொறுப்பாளர்களும்:

பாலன் (செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி), செந்தில் (ஒருங்கிணைப் பாளர், இளந்தமிழகம்),  அ.சா. உமர் பாரூக் (மாநிலப் பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ.),  வே.பாரதி (பொதுச் செயலாளர் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்),  அப்துல் ரசாக் (மாநில தலைமை நிலையச் செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), சுந்தரமூர்த்தி (தலைவர், தமிழர் விடுதலைக் கழகம்), விவேகானந்தன் (மே பதினேழு இயக்கம்), சைலேந்தர் (செய்தி தொடர்பாளர், தமிழர் விடியல் கட்சி).

சாதியைக் கட்டியழுதால்... நாதியற்றுப் போவோம் நாம்!
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்

முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்!
சாதி ஆணவக் கொலைகளுக்கு
முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்!

உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்!
எல்லோரும் நிகரென்று
உரக்கச் சொல்வோம்!

தமிழக அரசே! துணை போகாதே!
தமிழக அரசே! தமிழக அரசே!
சாதி ஆணவக் கொலைக்கு எதிராய்
தனிசட்டம் இயற்றிடு!

கைதுசெய் கைதுசெய்!
கொலை செய்த கூலிப்படையை
உடனடியாக கைதுசெய்!

அமைச்சர்களே, அமைச்சர்களே
ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு
ஊர்வம்புப் பேசிக்கொண்டு
ஊர்வலம் போவதற்கா
அமைச்சர் பதவி உங்களுக்கு?

தமிழர்களே! தமிழர்களே!
சாதியைக் கட்டியழுதால்
நாதியற்று போவோம் நாம்!

பெற்றெடுத்த மகளையும்
மணம்முடித்த மருமகனையும்
மகள் வயிற்றுப் பிள்ளையையும்
கொல்லச் சொல்லும் சாதிவெறி!

சாதிவெறி போதையது!
தாயுணர்ச்சிக் கொன்றுவிடும்
தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும்
மாந்தநேயம் கொன்றுவிடும்!

பழக்கமாம்! வழக்கமாம்!
வழக்கறிஞர் வேலையும்
மருத்துவப் படிப்பும்
எந்த சாதிப் பழக்கமய்யா!

பாட்டன் முப்பாட்டன்
பட்டப் படிப்பு படிச்சானா?
இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு
அரசு வேலைக்குப் போனானா?

எல்லாமே மாறும்போது
மணமுறைதான் மாறாதா?

மந்திரிப்பதவி வாங்கிகிட்டு
யார்யாரோ சொத்துசேர்க்க
சாதிமயிரத் தூக்கிக்கிட்டு
தலைமேல சுமக்கணுமா?

மானம் போச்சு என்றுசொல்லி
மல்லுகட்டும் ஊர்க்காரன்
நீ பெத்த மகளுக்கு
சோறூட்டி வளர்த்தானா?

சாதிய ஆணவத்தால்
நிறையாது! நிறையாது!
உன்வயிறு நிறையாது!

சாதிய ஆணவத்தால்
உன் மனசு குளிராது!

தமிழர்களே தமிழர்களே!
சாதியைக் கட்டியழுதால்
நாதியற்றுப் போவோம் நாம்!

 

Pin It