Madras HC kowsalyaகடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே நடந்த சங்கர் படுகொலை, மனிதாபிமானம் உள்ள அனைவரையும் பதறச் செய்தது. அந்தக் கொலை சிசிடிவி-ல் பதிவாகவில்லை என்றால், காவல் துறை அதைச் சந்தேக மரணம் என்றோ, நீதி மன்றம் சங்கர் தன்னைத்தானே கழுத்தை வெட்டிக் கொண்டு படுகொலை செய்து கொண்டார் என்றோ கொலை வழக்கை முடித்து வைத்திருக்கும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள் அழிக்க முடியாத ஆதாரமாக மாறிப் போனது. சாதி ஆணவப் படுகொலையை செய்தியாக மட்டுமே கேள்விப்பட்டு கடந்து போன பல பேர் சாதிவெறியின் கொடூர முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து பதைபதைத்துப் போனார்கள்.

சாட்சிகள் மிக வலுவாக இருந்ததால் வேறு வழியின்றி காவல் துறையும், தமிழக அரசும் இந்த வழக்கை நேர்மையாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டார்கள். திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் அமைந்திருக்கும் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பு 2017 டிசம்பர் 13 அன்று வெளியானது. அதில் 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, கெளசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு 2 மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கெளசல்யாவுக்கும், சங்கரின் தந்தைக்கும் ரூ.11.95 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. 7வது குற்றவாளியான கலை தமிழ்வாணன், 8வது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேலுக்கும் தூக்கு தண்டனையும், 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப் பட்டனர்.

தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 2018 பிப்ரவரி 26ஆம் தேதி இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. 22/06/2020 அன்று வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் 5 பேருக்கான மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதுடன், முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமியையும் விடுதலை செய்தும், கெளசல்யாவின் தாயும் பிரபல கஞ்சா வியாபாரியுமான அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும், தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்திருக்கின்றார்கள்.

சின்னசாமி கூட்டுச் சதியில் ஈடுபட்டதை அரசுத் தரப்பு போதிய சான்றுகளோடு நிரூபிக்கவில்லை என்று நீதி மன்றம் முடிவெடித்து, அவரை விடுதலை செய்திருக்கின்றது. அப்படியானால் இந்தப் படுகொலையை நிகழ்த்தச் சொல்லி அந்த ஐந்து பேருக்கும் வழிகாட்டியது யார் என்பதையோ, கொலை செய்த ஐந்து பேருடன் சின்னசாமியும், அவரது மனைவியும் பல முறை தொலைபேசியில் பேசியது ஏன் என்பதையோ நீதிமன்றம் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

நீதி மன்றங்களைப் பொருத்தவரை அது தன் முன்னால் உள்ள ஆதாரங்களை மட்டுமே பார்க்கும். அதைத் தாண்டி சமூகத்தில் குற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையோ, அதனால் ஒட்டுமொத்த சமூகமும் அநாகரிக காலத்திற்கு தள்ளப்படுவதைப் பற்றியோ அது ஒருபோதும் கவலைப்படாது. இந்திய நீதி மன்றங்களில் தீர்ப்பு கொடுக்கும் நீதிபதிகள் அனைவரும் தங்களை வெளி உலகத் தொடர்பில் இருந்து துண்டித்துக் கொண்டு வாழும், வானத்தில் இருந்து வந்த நீதி தேவன்களாகவும், தேவதைகளாகவுமே காட்சியளிக்கின்றார்கள்.

சங்கருக்கும் வெட்டிக் கொன்ற குற்றவாளிகளுக்கும் என்ன சம்மந்தம்? ஏதாவது முன்பகை இருந்ததா? இருந்தது என்றால் என்ன முன்பகை? இல்லை என்றால் எதற்காக  வெட்டிக் கொல்ல வேண்டும்? ஏன் கெளசல்யாவையும் வெட்டிக் கொல்ல முயற்சிக்க வேண்டும்? அவருக்கும் கொலையாளிக்கும் என்ன சம்மந்தம்? கொலை எந்த நோக்கத்தின் அடிப்படையில் நடந்தது, முன்பகையா, பணத்திற்காகவா, இல்லை சாதி வெறியில் நடத்தப் பட்டதா? பணத்திற்காக என்றால் அவர்களுக்கு யார் பணம் கொடுத்தது? சாதிக்காக என்றால் வெட்டியவர்கள் அனைவரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் தண்டிக்கப் பட்டிருக்கின்றார்களா? இல்லை என்றால் என்ன முகாந்திரத்தின் அடிப்படையில் கொலை நடத்தப்பட்டதாக நீதிமன்றம் கருதுகின்றது?

இந்தத் தீர்ப்பு இப்படி பல கேள்விகளை எழுப்புகின்றது. ஆனால் எதற்குமே பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, கட்டாயமோ நீதிமன்றத்திற்குக் கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போதுமே பொதுச் சமூகத்தின் கூட்டு விருப்பங்களை புரிந்து கொண்டதாக இருப்பதில்லை. அப்படி இருப்பது தோற்றத்திற்கு நல்லது போல் தோன்றினாலும் சாதிய வர்க்க முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூகத்தில் இரண்டு மாறுபட்ட உளவியலில் இருந்து நிகழ்த்தப்படும் வன்முறையை ஒரே தட்டில் வைத்து மதிப்பிடுவது அப்பட்டமான அற மீறலாகும். இங்கே சூத்திர சாதி வெறியர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டது போல தலித்துகளால் சூத்திர சாதியினர் கொல்லப்பட்டிருந்தால் நீதிமன்றத் தீர்ப்பு இப்படித்தான் வந்திருக்குமா என இதற்கு முன்னால் இந்திய நீதிமன்றங்கள் தலித்துகளுக்கு எதிராக கொடுத்த தீர்ப்புகளை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சங்கர் படுகொலை செய்யப்பட்டது அப்பட்டமான சாதிவெறியின் வெளிப்பாடுதான். கொலை செய்த ஐந்து பேரும் சின்னச்சாமியும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் சின்னச்சாமியை ஒப்பிடும்போது அந்த ஐந்து பேருமே பொருளாதார நிலையில் மிக வறியவர்கள். சின்னச்சாமி நினைத்திருந்தால் இந்தக் கொலையை தானே செய்திருக்கலாம். ஆனால் சின்னச்சாமி போன்ற நபர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு சிறைக்குச் சென்று அல்லல்பட ஒருபோதும் விரும்புவதில்லை. அதனால் தன் சாதியில் இருக்கும் படிப்பறிவற்ற, வறிய நிலையில் இருக்கும் இளைஞர்களை சாதிவெறியைத் தூண்டுவிட்டு, பணத்தாசை காட்டி, தான் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றார்கள். தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அத்தனை குற்றங்களும் ஏறக்குறைய இதே போக்கை ஒட்டித்தான் நடத்தப்படுகின்றன. தர்மபுரி கலவரத்தில் தொடங்கி பொன்பரப்பி கலவரம் வரை இதை நம்மால் பார்க்க முடியும்.

தற்போது கொலைக்கு மூளையாக செயல்பட்ட சின்னசாமியும், அவரது மனைவி அன்னலட்சுமியும் குற்றத்தில் இருந்து முழுமையாக விடுவிக்கப் பட்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்காக கொலை செய்த ஐந்து பேரும் தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். சங்கரை கொலை செய்வதற்கு சின்னசாமிக்கு சாதி மட்டுமே காரணம் என்றால், கொலை செய்த ஐந்து பேருக்கும் அவர்களின் வர்க்க நிலையும் ஒரு காரணமாக உள்ளது. ஒரே சாதிக்குள் நிலவும் இந்த வர்க்க முரண்பாடுகள்தான் சாதிவெறி அரசியலின் ஆணிவேராகவும் இருக்கின்றது.

இந்திய சமூகத்தில் எல்லா ஓட்டுக்களுக்கும் ஒரே மதிப்பு இருந்தாலும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மதிப்பு கிடையாது என்பதுதான் எதார்த்தம். அந்த எதார்த்தம்தான் தன்னை நீதிமன்றம், காவல்துறை, சிறைச்சாலை என அனைத்து இடங்களிலும் மெய்ப்பித்துக் கொள்கின்றது. வர்க்க வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தில் ஜனநாயகம் என்பதும் நீதி என்பதும் ஒடுக்கும் வர்க்கத்தின் உளவியலை எதிரொலிப்பதாகவே எப்போதும் இருக்கும். தற்போது நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பானது இந்தக் கொலைக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு ‘சாட்சிகளோடு சாவதன் முக்கியத்துவத்தையும்’, சாதிய ஆணவக் கொலை செய்பவர்களுக்கு ‘சாட்சிகள் இல்லாமல் எப்படி கொலை செய்வது’ என்பதையும் ஒரு சேர சொல்லி இருக்கின்றது.

வரும் காலங்களில் சாதி ஆணவப் படுகொலை செய்பவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை உணர்ந்து கொலையை எப்படி சாட்சிகள் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையும், தான் நிச்சயமாக சாதி ஆணவப் படுகொலை செய்யப்படுவோம் என்ற நிலையில் வாழ்பவர்கள் எப்படி தன்னுடைய கொலையை சாட்சிகளோடு மெய்பித்துவிட்டு உயிரை விடுவது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் நீதி மன்றத்திற்கு சாட்சிகள் மட்டுமே முக்கியம், மனசாட்சி அல்ல.

- செ.கார்கி

Pin It