(18.03.2016 அன்று சென்னை எழும்பூரில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தோழர் சுபவீ ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி)
இங்கே சாதியை எதிர்ப்பவர்கள் கூடியிருக்கிறோம். சாதி வெறியை ஒடுக்க நினைப்பவர்கள் இவ்வளவு பேர் ஒன்று கூடியிருக்கிறோம். சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் இன்று நம்மோடு சேர்ந்து செயலாற்ற வந்துள்ளனர்.
உடுமலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா பெரியாரைப் படித்த பெண் இல்லை. தாழ்த்தப்பட்ட ஒருவனைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். பெற்றோர் வற்புறுத்தி அழைத்தபோதும், நாங்கள் நன்றாக வாழ்வோம், என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது, உங்களோடு வரமாட்டேன் என்று அவர்களிடம் துணிச்சலாகச் சொன்னவர்.
அப்படிப்பட்ட பெண்ணைத்தான், கூலிப்படை வைத்துப் பெற்றோரே கொன்றனர். அந்தப் பெண் வெட்டப்படும்போது, அருகில் நின்ற காரில் அமர்ந்து அதனை ரசித்தவர் அந்தப் பெண்ணின் தந்தை என்று கூறுகிறார்கள்.
சாதி எவ்வளவு கொடியது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. சாதியை விடக் கொடியது உலகில் வேறில்லை.
இவ்வளவுக்குப் பிறகும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நான் பிழைத்தால், சங்கர் வீட்டுக்குத்தான் போவேன், உங்களுடன் வரமாட்டேன் என்று கௌசல்யா உறுதியாகக் கூறுகிறாள்.
காதல் எவ்வளவு வலியது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. காதலை விட வலியது உலகில் வேறில்லை.
அதனால்தான் காதலை நாம் ஆதரிக்கிறோம். சாதி என்னும் மலையைக் காதல் என்னும் உளியால்தான் உடைக்க முடியும்.
முன்பு இளவரசன் கோகுல்ராஜ், இப்போது சங்கர் -- கௌசல்யா.
இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன.
2006-ல் திருவாரூரில் இலட்சுமி-சிவாஜி. கொல்லப்பட்டார் சிவாஜி.
2010-ல் சிவகங்கையில் மேகலா-சிவகுமார். கொல்லப்பட்டார் சிவகுமார்.
2012-ல் திருவண்ணாமலையில் தேன்மொழி-துரை. கொல்லப்பட்டார் துரை.
ஒரே மாதிரிக் கொலைகள் நடந்திருக்கின்றன. காதலர்களில் ஆண் தாழ்த்தப்பட்டவனாக இருந்தால், கொலையே தீர்வு என்கிறது சாதி வெறி.
சிதம்பரம் மாவட்டம், ஆண்டிப்பாளையம் என்னும் ஊரில், ஒரு தாத்தாவே தன்பேத்தி, தாழ்த்தப்பட்ட ஒருவனைக் காதலித்தாள் என்று, அந்தப் பேத்தியின் கழுத்தைத் தானே அறுத்துத் துண்டித்த கொடுமையும் நடந்தது.
சாதி வெறிக்கு எதிரான போரட்டங்களும் தமிழ்நாட்டில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
1957இல் திராவிடர் கழகம், சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் 4120 பேர் கைது செய்யப்பட்டார்கள். 14 வயது சிறுவனும் ஒருவன். அப்போதிருந்த ஆளுநர் விஷ்ணுராம் மோதி, சிறையில் அந்தச் சிறுவனை அழைத்து உன்னை விடுதலை செய்கிறேன், வெளியே விடுகிறேன், ஒழுங்காக இருப்பாயா என்று கேட்டபோது, அந்தச் சிறுவன் வெளியே போனால் மறுபடியும் சட்ட நகலை எரிப்பேன், திரும்பவும் இங்கே வருவேன் என்று சொன்னான்.
அன்று சாதிக்காகத்தான் - சாதி ஒழிப்புக்காகத்தான் பெரியார், சட்ட நகலை எரித்தார்.
அதே 1957ஆம் ஆண்டுதான் தமிழகத்தின் முதல் சாதிக் கலவரம் நடைபெற்றது. இன்றுவரை தொடர்கிறது.
1957-இல் முதுகுளத்தூர்
1968-இல் கீழ்வெண்மணி
1990-92 என்று தொடர்ச்சியாகத் தாழ்த்தப்பட்டவர்களே தாக்கப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் வளர்கிறார்கள் என்கிற பொறாமைதான் அடிப்படைக் காரணம்.
அம்பேத்காரின் நூற்றாண்டுக்குப்பிறகு தாழ்த்தப்பட்டவரிடையே எழுச்சி ஏற்பட்டது. கல்வியில், வேலைவாய்ப்புகளில் அவர்கள் வளரத் தொடங்கினார்கள். இது பொறுக்கவில்லை மற்ற சாதியாருக்கு. உணர்ச்சிவசப்பட்டார்கள், கோபப்பட்டார்கள், திட்டமிட்டார்கள்.
கொடியங்குளம், தாமிரபரணி, திண்ணியம் என்று படுகொலைகளும், அவமானங்களும் தொடர்ந்தனர்.
இத்தகைய சாதிவெறிச் செயல்கள் தனி மனிதன் சார்ந்தும், குடும்பம் சார்ந்தும், சாதி அமைப்பு சார்ந்தும், கட்சி சார்ந்தும் நடந்துள்ளன. ஆண்டிப்பாளையம், உடுமலைப்பேட்டை, திருச்சங்கோடு, தர்மபுரி ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மேலே உள்ள வரிசையோடு பொருத்திப்பார்க்கலாம்.
தர்மபுரியில் 268 வீடுகளும், 52 வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. திரைப்படத்தில் வருவதுபோல், கடைசிக் காட்சியிலும் காவல்துறை வரவில்லை.
2012 நவம்பர் 7-இல் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு டிசம்பர் 20-இல் ராமதா-ஸ் மதுரையில் பேசுகிறார். வீடு இல்லாமல் வாழ்ந்துவிடலாம், எங்கள் பெண்கள் மானம் கெட்டு வாழமுடியு-மா- என்று கேட்கிறார்.
என்ன கொடுமை? நாடு மௌனமாக இருக்கிறது.
யுத்தம் வெளிப்படையாகத் தெரிகிறது.
கருஞ்சட்டைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.
கருஞ்சட்டைகள் மட்டுமில்லை, கருப்பு, நீலம், சிவப்பு மூன்றும் ஒருங்கிணைய வேண்டிய நேரமிது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, இவையிரண்டையும் என்றென்றும் எதிர்த்துப் போராடும்.