ஊடகங்கள் நான்கு நாட்களாக கொண்டாடி மகிழ்கின்றன. ஈபிஸ், ஓபிஎஸ் - ஓபிஎஸ், ஈபிஎஸ். இந்த மோதல் செய்தி தான் தமிழ்நாட்டு மக்களின் ஆதார சுருதியான பிரச்சனைப் போல் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு தரப்பினரும் ஒரே கருத்தைக் கூறிக்கொண்டு வருகின்றன. “இது புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கிற இயக்கம், தொண்டர்கள் தான் முடிவெடுப்பார்கள், இதை யாராலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது” இது இரு தரப்பும் பேசுகிற வசனம். ஊடகங்கள் இதையே திருப்பித் திருப்பி பரப்புகின்றன. தவிர, இதனுடைய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி ஆராய்வதற்குத் தயாராக இல்லை.

சரி பார்ப்போம்.

புரட்சித் தலைவிகளின் விசுவாசிகள் என்று இரண்டு பேரும் கூறுகிறார்கள். அந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட கடைசி காலத்தில், எம்.ஜி.ஆர். படத்தை போடுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தவர் தான். எம்ஜிஆரை ஓரம் கட்டியவர் தான். அதற்குப் பிறகு புரட்சித் தலைவியின் தலைமையின் கீழ் கட்சியை பங்கு போடுவதற்கு பலரும் வந்தார்கள். அதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றவர்களும் இருந்தார்கள். ஜெயலலிதா கூட ஊழலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அரசுக்கு சொந்தமான டான்சி நிலங்களை சட்டத்துக்குப் புறம்பாக முதல்வர் பதவியில் இருந்து கொண்டே அவர் விலை கொடுத்து வாங்கினார். நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அதை அரசிடமே ஒப்படைத்தார். இது வரலாறு. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டார். தேர்தலில் நிற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் உடல் நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதன் காரணமாக அவர் சிறைக்குப் போக முடியவில்லை. அவர் மருத்துவமனையிலேயே மரணத்தை சந்தித்து விட்டார். இல்லாவிட்டால் அவரும் சிறையில் தான் இருந்திருப்பார்.

அவருக்கு ஊழல் செய்ய உதவியதாக சசிகலா, இளவரசி, திவாகர் ஆகியோர் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் 4 ஆண்டு இருந்துவிட்டு விடுதலையாகி, இப்போது தியாகத் தலைவி என்ற பட்டத்தோடு உலா வந்து கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு முன் இடைக்கால ஏற்பாடாக இது நடந்தது. சசிகலா மீண்டும் முதலமைச்சர் பதவியேற்கும் நிலையில் ஒன்றிய பாஜக ஆட்சி சதி செய்து, ஆளுநரை முடக்கிப் போட்டு, பிறகு இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. கூவத்தூர் நாடகங்கள் நடந்தன. பிறகு ஒரு கட்டத்தில், கட்சிகள் இரண்டாக உடைந்தன. மோடி தலையிட்டார். மோடி இரண்டு தரப்பையும் ஒன்றாக்கி அதை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனதற்குப் பிறகு, தனது ஆட்சியின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையிலே கொண்டு வந்தார். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று சொந்த கட்சிக்கு எதிராகவே ஓ பன்னீர் செல்வமும் அவருடன் இருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இது கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம். அந்த வழக்கு அப்படியே உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

எடப்பாடி பழனிச்சாமி ஊழலுக்கு அப்பாற் பட்டவரா என்று கேட்டால், முறைகேடாக டெண்டர்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது, ஊழல் புகார் இருக்கிறது. இதை சி.பி.அய். விசாரிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியதற்குப் பிறகு, உச்சநீதிமன்றம் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை வாங்கி வைத்திருப்பவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.

எனவே, ஜெயலலிதாவாக இருந்தாலும், ஓபிஎஸ் ஆக இருந்தாலும், ஈபிஎஸ் ஆக இருந்தாலும் அத்தனை பேருமே அதிகாரத்தை பங்கு போடவும், சொத்துக்களைக் குவிப்பதற்கும் அரசியலுக்கு வந்தவர்களே தவிர இவர்களுக்கான கொள்கைகள், அடையாளங்கள், இலட்சியங்கள் எதுவுமே கிடையாது. இன்னும் சொல்லப் போனால், பாஜக வின் ஊதுகுழலாக தமிழ் நாட்டை மாற்றி அமைத்த மகத்தான துரோகத்தில் நிச்சயம் இவர்களுக்குப் பங்கு உண்டு.

பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்களை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கிற கட்சி அ.தி.மு.க. என்பதால், பாஜக வை தமிழ்நாட் டிற்குள் கால் ஊன்ற விடாமல் தடுப்பதற்கு இக் கட்சியின் இருத்தல் என்பது அவசியமாகிறது என்பதைத் தவிர இந்த பிளவுக்கு வேறு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்ல என்பதே நமது கருத்து. இனியாவது பா.ஜ.க.வை எதிர்த்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற முடிவுக்கு எந்த ஒரு பிரிவினரும் துணிவு டன் முன் வருவார்களா என்று தெரியவில்லை.

“அழுகிய தேங்காய் உடைந்த பின் எந்த மூடி எந்த பக்கம் இருந்தால் என்ன பயன்?”

- விடுதலை இராசேந்திரன்

Pin It