மக்கள் அதிகார குழுமத்தின் (வினை செய்) அணியின் சித்தாந்த குருவான திருவாளர் மருதையன் அவர்களும், அந்த அமைப்பின் பொருளாளர் திருவாளர் காளியப்பன் அவர்களும் அண்மையில் அரண் செய் இணைய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் 2021 - சட்டமன்ற தேர்தல் பற்றிய தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
இந்த நேர்காணலில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த நாற்பது ஆண்டு காலமாக தாங்கள் கடைப்பிடித்து வந்த தேர்தல் பாதை திருடர் பாதை என்ற கொள்கைக்கு மாறாக திருவாளர் மருதையன் அவர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
இவரின் சீடரான காளியப்பன் அவர்கள் பாசிச பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், அதன் பிற மறைமுக ஆதரவாளர்களான பி-டீம் என்று அழைக்கப்படும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சீமான் போன்றோருக்கும் வாக்களிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் போவதாகவும் திக்கித் திணறி உளறியிருக்கிறார். சாராம்சத்தில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்பதை அறிவித்திருக்கிறார்.
தாங்கள், தங்கள் கொள்கையை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை என்றாலும், இப்போது இருக்கிற பாசிச சூழலில் கொள்கையை உயர்த்தி பிடிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று அதற்கு விளக்கம் வேறு அளித்துள்ளனர். எப்போதெல்லாம் கடும் நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதுதான் முன் எப்போதும் இல்லாத வகையில் கொள்கை பற்றோடு, அதை உயர்த்தி பிடித்து உறுதியாக செயல்பட வேண்டும் என்பது தான் நடைமுறை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். ஆனால் இந்த கொள்கை பற்றாளர்களோ அதற்கு நேர் எதிராக கொள்கையை கைவிட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.
இவர்களை பொருத்தவரை காங்கிரசு கட்சியை எப்போதுமே பாசிச கட்சியாகத்தான் வரையறுத்துள்ளனர். காங்கிரசு ஆட்சியின் நெருக்கடி நிலை காலம், சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி படுகொலைகள், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் படுகொலைகள் ஆகிய அனைத்தையும் பாசிசம் என்ற பதத்தையே பயன்படுத்தி விமர்சித்து வந்துள்ளனர்.
அப்போதெல்லாம் இப்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை - தேர்தலில் பங்கெடுக்கலாம் - போன்றொதொரு நிலைப்பாட்டை இவர்கள் எடுக்கவில்லை. அப்படியானால், அப்போதெல்லாம் பாசிசம் என்று முழங்கியது வெறும் வெற்று முழக்கங்களா என்பதை இவர்கள் மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும். ஆனால் இதற்கும், அதாவது தமது முந்தைய நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திப்பதற்கு கூட உகந்த நேரம் இதுவல்ல என்கிற தொனியில்தான் இவர்கள் இருவரின் நேர்காணலும் அமைந்துள்ளது.
கடந்த 1992-லிருந்தே பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக செயல் தந்திர பிரச்சார இயக்கத்தை தாங்கள் முன்னெடுத்து வந்ததாகவும், இதன் விளைவுகள் ஏறுதழுவுதல் போராட்டத்தில் வெளிப்பட்டதாகவும் உரிமை கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல இதன் மூலமே தாங்கள் தமிழக அரசியல் சக்திகளில் குறிப்பிட தக்க அரசியல் சக்தியாக விளங்குவதாகவும் கூறுகின்றனர்.
அதாவது கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே இவர்கள் பாசிச அபாயத்தை பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். ஆனால் இப்போதோ எரிமலையை போன்று பாசிசம் திடீரென வெடித்து வெளிவந்து விட்டதை போன்றும், அதை எதிர்ப்பதற்கான கால அவகாசம் இல்லை என்றும் கதை அளக்கின்றனர்.
பாசிசத்தின் அபாயத்தை பற்றி உண்மையிலேயே இவர்கள் உண்மையான இயக்கத்தை எடுத்திருந்தால், அதற்கான தயாரிப்பு பணிகளை அப்போதே தொடங்கியிருக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை?
பாசிசத்தை எதிர் கொள்வதற்கு மிக முக்கியமான அம்சமாக விளங்குவது, அதனால் அழிவைச் சந்திக்கப் போகிற அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணியை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், அப்படியான சக்திகள் அனைவரையுமே எதிரிகளாக சித்தரித்து கையாண்டதுதான் பாசிசத்தை இவர்கள் புரிந்துக் கொண்டார்கள் என்பதற்கான இலக்கணமா? பாசிசத்தை தாங்கள் மட்டுமே எதிர்த்து முறியடிக்க முடியாது என்பதை புரிந்துக் கொள்வதற்கு இது முற்றிலும் உலகிற்கே முற்றிலும் புதியதான ஒரு சக்தியா என்றால் அதுவும் இல்லையே?
அப்படியானால் எந்த இலக்கோடு கடந்த கால் நூற்றாண்டு காலமாக இவர்கள் பாசிசத்திற்கு எதிராக பிரச்சார இயக்கம் எடுத்தனர்!? அந்த பிரச்சார இயக்கத்தின் போக்கில் பாசிசத்தை முறியடிப்பதற்கான தயாரிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடாமைக்கு மக்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையா? அப்படி இவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால், இவர்கள் மக்களை புரிந்து கொள்ளவில்லையா? அப்படி இவர்கள் மக்களை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு என்னக் காரணம்? மக்களே இவர்களை ஏற்றுக் கொண்டு இவர்களோடு அணி திரளவில்லை என்றால், தமிழகத்தின் குறிப்பிடத் தக்க அரசியல் சக்தி என்ற தகுதி சான்றிதழை இவர்களுக்கு வழங்கியது யார்?
மக்கள் இவர்களை குறிப்பிட தக்க அரசியல் சக்தியாக ஏற்றுக் கொண்டிருந்தால் பாசிச ஐக்கிய முன்னணிக்கான குறைந்த அளவு செயல் திட்டத்தை முன்மொழியும் தகுதி இவர்களுக்கு கிடைத்திருக்குமே?
மக்கள் இந்த தகுதியை இவர்களுக்கு வழங்கவில்லை என்றால், ஆளும் வர்க்கத்தின் ஒரு அணியின் செய்தி ஊடகங்கள்தான் இந்த தகுதியை இவர்களுக்கு அளித்துள்ளது என்பது தெளிவாகிறது.
இப்படியான தகுதியை இவர்களுக்கு அவர்கள் எதற்காக வழங்க வேண்டும்? ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் அகம் மகிழ்ந்து இவர்களுக்கு இந்த – தமிழகத்தின் குறிப்பிட தக்க அரசியல் சக்தி - தகுதியை வழங்குகிறார்கள் என்றால் அதற்கு ஏற்ப, அவர்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத ஒரு சக்தியாக இவர்களை அவர்கள் கருதியிருக்க வேண்டும்.
அதற்கு நன்றிக் கடனாகத்தான் இப்போது அவர்களுக்கு இந்த தேர்தலில் குறைந்த அளவு கோரிக்கைகளை கூட முன் வைக்காமல் நிபந்தனையற்ற ஆதரவை வலிய முன் மொழிந்து விட்டார்கள்.
பின்பு அதற்கு சித்தாந்த விளக்கமளிப்பதாக நினைத்துக் கொண்டு, போரில் பாதுகாப்பு அரண்களோ, பதுங்கு குழிகளையோ அமைத்துக் கொள்ளாத நாம் மரத்தையும், பாறைகளையும் பாதுகாப்பிற்காக பயன் படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது என்று கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து கீதா உபதேசம் செய்த கிருஷ்ணனாக திமுக - விற்கு வாக்களிக்க தயங்கும் நபர்களுக்கு உபதேசம் செய்துள்ளார் திருவாளர் மருதையன் அவர்கள்.
உண்மையிலேயே இவர்களின் நோக்கம் பாசிசத்தை எதிர் கொள்வதற்கு, அதாவது மூச்சு விட சிறிது கால அவகாசம் தேவை என்பதற்காகத்தான் திமுகவிற்கு வாக்கு கேட்கிறார்களா? சத்தியமாக இல்லை என்று அவர்களே தமது நேர்காணலில் தங்களையே அறியாமல் அறிவித்து விட்டார்கள்.
இவர்களின் நோக்கம் திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதோ, இதன் மூலம் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டும் என்பதோ அல்ல. மாறாக இடது சாரி இயக்கங்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் பாசிசத்தை எதிர்த்து போராட முடியாது.
சமூக மாற்றம் என்பதும் சாத்தியமில்லை. நிலவுகின்ற சமூக அமைப்பிலேயே கூடுதல் ஆதாயம் பெறுவது மட்டுமே முடியும். இந்த தனது வலது சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை ஏற்கனவே தனது அணிகளிடமும், ஆதரவாளர்களிடமும் நிலை நாட்டிவிட்டனர்.
இப்போது அந்த கருத்தை பாசிசம் என்ற அபாயத்தை காட்டி நாம் கையாலாதவர்கள் என்பதை மேலும் சமூக மயமாக்குவதே இவர்களின் உண்மையான இலக்கும், நோக்கமுமாகும்.
இந்திய இடது சாரிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிலவுகின்ற சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாத வகையிலான பாதைகளையே முன்வைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.
1. வலது சந்தர்ப்ப வாதம்.
2. இடது சந்தர்ப்ப வாதம். இவ்விரண்டு பாதைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். முன்னது நிலவுகின்ற சமூக அமைப்பிலேயே சீர்திருத்தங்களின் மூலம் ஆதாயம் பெறுவது. இரண்டாவது நிலவுகின்ற சமூக அமைப்பின் இழிவானதும், கேடு நிறைந்ததுமான அனைத்து செயல்களுக்கும் குறிப்பிட்ட தனி நபர்களே காரணம்.
அப்படியான தனி நபர்களை அழித்தொழிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்ற இளம்பருவ கோளாறினால் செய்யும் செயல்களினால், நிலவுகின்ற சமூக அமைப்பை ஆளும் வர்க்கம் தனது ஆயுத பலத்தினால் பாதுகாப்பதற்கான வாய்ப்பை ஆளும் வர்க்கத்திற்கு வலிய ஏற்படுத்தி தருபவர்கள். இவ்விரு பிரிவினரே இந்தியாவில் இதுவரை கம்யூனிச கட்சிகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களில் மாஅக என்கிற மக்கள் அதிகார குழுமம், தனது வலது சந்தர்ப்ப வாதத்தை இடது வாய்வீச்சால் மூடி மறைத்துக் கொண்டு கடந்த நாற்பது ஆண்டுகளாக மிக துல்லியமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்துள்ளனர். இதற்கான எடுப்பான ஆதாரங்களில் ஒன்றுதான் கடந்த இருபத்து ஐந்து ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வந்த செயல் தந்திர இயக்கங்களாகும்.
பாசிசத்தைப் பற்றி இந்தியாவிலேயே முதன் முறையாக புரிந்துக் கொண்டு அதற்கு எதிராக கால் நூற்றாண்டுகளாக இயக்கம் எடுத்தவர்கள், இன்று அதை எதிர் கொள்வதற்கு தேர்தலைப் பயன்படுத்துவதை தவிர, வேறு வழிமுறைகளை கையாளுவதற்கான கால அவகாசம் இல்லை என்றால், மேலும் கால் நூற்றாண்டு கால அவகாசம் தேவை என்று கருதுகிறார்கள் என்று இதற்கு பொருள் கொள்ளலாமா?
மூச்சு விட சிறிது கால அவகாசம் தேவை. அதற்கு இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக – விற்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் கடந்த கால் நூற்றாண்டு கால அனுபவம் இவர்களுக்கு மூச்சு விடுவதற்கான உத்தியை மட்டுமே கற்று தந்திருக்கிறது போலும்! சரி உலகிலேயே மிகச்சிறந்த கம்யூனிஸ்டுகளான இவர்களின் அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பை நாமும் ஏற்றுக் கொண்டு திமுக - விற்கு வாக்களித்து அவர்களை தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர வைத்து விடுவோம்.
மூச்சு விடுவதற்கான வாய்ப்பும் இதன் மூலம் இவர்களுக்கு கிடைத்து விடும்.மூச்சு விட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சியில், பாசிசத்தை எதிர் கொள்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
அதற்கு திமுக - வையும் நம்மோடு இணைத்துக் கொண்டு ஐக்கிய முன்னணியை கட்டிவிடுவோம் என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? திமுக-விற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கு உரிமை உள்ள இவர்களுக்கு, அந்த கட்சி நம்மோடு ஐக்கிய முன்னணியில் இணைந்துக் கொள்ளும் என்று அறிவிப்பதற்கும் உரிமை உள்ளவர்களாகத்தானே இருக்க முடியும்! கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்!
இவர்கள் தமக்கு வெளியில் உள்ளவர்களோடு ஐக்கிய முன்னணி கட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தமது கட்சியின் அணிகள் மத்தியில் பாசிசத்தின் அபாயத்தை உணர்ந்து, உணர்த்தி அவர்களுடன் ஐக்கியமாக நடந்துக் கொண்டார்களா? கேள்வி கேட்பவர்கள், தனது கருத்துக்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் அனைவரும் தமக்கு எதிரிகள் என்று கருதியவர்கள் இவர்கள்.
பல நூற்றுக்கணக்கான அணிகளை கட்சியிலிருந்து நீக்கியவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் அனைவரும் திருடர்கள், போலி கம்யூனிஸ்டுகள் என்று பறைசாற்றியவர்கள் இவர்கள்.
மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாத தருணத்தில் கூட தமது பாரம்பரிய பண்பாட்டை கடைபிடிப்பதில் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை பற்றாளர்கள். அதனால்தான் இப்போதும் இரண்டு அணியாக உடைந்து நடுத்தெருவில் சிண்டை பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் தமக்கு நேர் எதிரான கொள்கை உடையவர்களுடனும் ஐக்கிய முன்னணியை கட்டுவார்களாம்!
திருவாளர் மருதையன் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டும். தனது சுய மரியாதைக்கு தலைமை மதிப்பளிக்கவில்லை என்பதற்காக - தனிப்பட்ட நலனுக்காக - அவர் இருந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்.
பாசிச அபாயத்தை பற்றி நன்கு அறிந்த அறிஞரான அவர் இப்போதாவது மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து கொள்வதன் மூலம், நமது தனிப்பட்ட நலன்களை விட பாசிசத்தை வீழ்த்துவதே முதன்மையான பணி என்பதையும், இதன் மூலம் தனது நேர்மையையும் நிரூபித்து காட்ட அவர் தயாரா? முதலில் கட்சியின் செயலர் தலைமையிலான அணியினரோடு இணைவது இருக்கட்டும்.
அவரை சித்தாந்த குருவாக ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அதிகாரம் (வினை செய்) அணியினயினரிடமாவது ஐக்கியப்பட்டு செயல்பட அவர் தயாராக இருக்கிறாரா?
இதை செய்ய அவர் தயாராக இல்லை என்றால் பாசிசத்தை வீழ்த்துவதை பற்றியும், மூச்சு விடுவதற்கு தேர்தலில் திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசுவதற்கும் அவர் தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நினைக்கிறார்? என்பதை மக்களுக்கு அவர் விளக்குவாரா?
பிறக்கும் போதே பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் நான்.எனக்கா என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறாய்? என்று அவர் கேட்பது, அவரால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தீண்டப்படாதவர்களாக அறிவிக்கப்பட்டவர்களான எங்களுக்கும் புரிகிறது.
ஆனால் என்ன செய்வது நீங்கள் அரண் செய் இணையத்தில் அளித்த நேர்காணலை எங்களைப் போன்றவர்களும் கேட்டு விட்டோமே! எத்தனை முறை பட்டாலும் எங்களை போன்றவர்களுக்கு புத்தி வரமாட்டேன் என்கிறது.
இவர்களின் நோக்கம் எப்போதுமே பாசிசத்தை எப்படி எதிர் கொள்வது என்பதோ, அதை முறியடிப்பது என்பதோ அல்ல என்பது அவர்களின் கால் நூற்றாண்டு கால வரலாறே நிரூபிக்கிறது. அப்படியானால் இவர்களின் நோக்கம் தான் என்ன?
மேற்கண்ட கேள்விக்கான பதில் அரண் செய் இணையத்திற்கு நேர்காணல் அளித்த மருதையன், காளியப்பன் ஆகிய இருவரின் பேச்சிலேயே முழுவதுமாக நிரம்பி வழிகிறது. அது பாசிசத்தை இடது சாரிகளால் வீழ்த்த முடியாது. மாறாக திமுக போன்ற கட்சிகளின் பின்னால் பாதுகாப்பாக மறைந்து கொள்வதுதான் ஒரே வழி என்பதுதான் அது.
உலக அளவிலும், இந்திய அளவிலும் இடது சாரிகளின் பலம், மக்களிடையே அவர்களுக்கு உள்ள செல்வாக்கு என்கிற உண்மை நிலையிலிருந்து பார்க்கும் போது மக்கள் அதிகாரம் அமைப்பினர் எடுத்துள்ள முடிவு சரியானதாகத்தானே உள்ளது என்று அவர்களின் அணிகளும், சீடர்களும், ஆதரவாளர்களும் கருதக் கூடும். இவர்கள் நினைப்பதுதான் உண்மை என்றால், இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவமான மார்க்சியம் சமூக மாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டது.
அந்த சமூக மாற்றம் என்பது சாத்தியம் இல்லை என்று இவர்களின் கால் நூற்றாண்டு கால நடைமுறை ரீதியான அனுபவங்கள் நிரூபித்துள்ளது என்றால் மார்க்சியத்தை இனி எங்களின் வழிகாட்டி சித்தாந்தமாக ஏற்கமாட்டோம் என்று நேர்மையாக அறிவித்து விட்டு திமுக - விலெயே இணைந்து விடலாமே!
உண்மையில், பாசிசத்திற்கு எதிராக இப்போது நடப்பதாக கூறுகின்ற போரில் திமுக போன்ற சக்திகளையும் பாதுகாப்பு அரணாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அந்த அரண் என்பதை மரம் மற்றும் பாறைகள் என்றும் திருவாளர் மருதையன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இவர் முன் மொழிந்துள்ளதை திமுக ஏற்றுக் கொண்டுள்ளதா? அவர் குறிப்பிடும் மரமும், பாறையும் இவர்களை போன்றவர்கள் உண்மையானதை போன்று உருவாக்கும் முப்பரிமாண ஒவிய சித்தரிப்புகளே தவிர உண்மையான பொருட்கள் அல்ல.
நமக்குத் தேவை முப்பரிமாண ஓவியங்கள் இல்லை. உண்மையான மரங்களும், பாறைகளுமே ஆகும். அந்த உண்மையான பாதுகாப்பு அரண்களையும் தெரிவு செய்வதற்கு அந்த மரத்தையும், பாறைகளையும் தனது ஆளுமையில் வைத்திருக்கும் சக்திகளோடு ஓர் உடன்பாட்டிற்கு நாம் வந்தாக வேண்டும்.
ஆனால் திருவாளர் மருதையன் அவர்களோ, அவரின் சீடர்களோ அப்படியெல்லாம் அவர்களிடம் நாம் பேசும் அளவிற்கு நமக்கு தகுதி இல்லை என்கிறார்கள். தங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் தமிழகம் முழுக்க உள்ள புரட்சிகர,ஜனநாயக, முற்போக்கு சக்திகள் எவருக்கும் அந்த தகுதி இல்லை என்று சொல்கிற உரிமையை இவர்களுக்கு தந்தவர்கள் யார்? போர் நடந்துக் கொண்டிருக்கும் போதே பாதுகாப்பு அரண்களையும்.பதுங்கு குழிகளையும் உருவாக்கி கொள்ள முடியாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அவர் கடுகளவிற்கு கூட ராணுவ நுட்பங்களை அறியாத அறிவிளியாகத்தான் இருக்க வேண்டும்.
நாம் வலுவான படை பலத்தோடு இருக்கும் போது எதிரியை எதிர்த்து போரிடுவது என்பது ஒப்பீட்டளவில் நமக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுவதும், கணிப்பதும் இயல்பான ஒன்றுதான்.
ஆனால் படை பலம் மட்டுமே அதற்கான வெற்றியை தந்து விடாது. அப்படித்தான் அது இருக்க முடியும் என்றால் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் இட்லரின் ஜெர்மானிய படைகளே வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஒருவர் வலுவாக இருக்கும் தருணத்தை விட, வலு குறைவாக இருக்கும் போது போரில் இழப்புகளை குறைத்துக் கொண்டு பின் வாங்குவதில் கடைபிடிக்கும் உத்திகளே மிகச்சிறந்த ராணுவ நுட்பமாகும்.
திருவாளர் மருதையன் அவர்களும், அந்த அமைப்பின் தலைமையில் எவரும் மாஅக என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட நாற்பது ஆண்டுகளில் மக்கள் திரள் போராட்டங்களில் கூட களத்தில் நேரிடையாக பங்கெடுத்துக் கொண்டு வழி நடத்தியவர்கள் கிடையாது.
எழுதுவதும், மேடைகளில் பேசுவதும் மட்டுமே ராணுவ நுட்பங்களை ஒருவருக்கு கற்றுத் தந்து விடாது. ஓரிடத்தில் கடைபிடித்த நுட்பங்களை மற்றொரு இடத்தில் அப்படியே கடைபிடிக்கவும் முடியாது. போர் என்பது கோயிலில் மணியாட்டிக் கொண்டு மந்திரம் ஓதுவதை போன்று திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யும் வேலையும் அல்ல.
நமக்கு அமைப்பு பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லை. அதனால் நாம் மற்றவர்கள் உழைப்பில் உருவாக்கி வைத்துள்ள சக்திகளைப் பயன் படுத்திக் கொள்வது தவறில்லை என்கிறார்கள். காலம், காலமாக அடுத்தவர்கள் உழைத்து உருவாக்கும் செல்வத்தை, உழைக்காமல் உட்கார்ந்துக் கொண்டே தின்று கொழுத்த கூட்டத்திற்கு இப்படித்தான் சிந்திக்க முடியும்.
நாம் வலுவற்றவர்களும் இல்லை, நமது எதிரி வலுவானவனும் இல்லை. நம்மிடையே நமது எதிரிகளால் உருவாக்கி பாதுகாக்கும் பலவீனங்களே எதிரிகளின் பலமாகும்.
பார்ப்பன, பாசிச பாஜக கடந்த தனது பத்து ஆண்டுகால ஆட்சியில், தமது வாழ்வாதாரத்தையும், சமூக ரீதியாக பெற்ற கல்வி, வேலை வாய்ப்புகளையும் இழந்த, இழக்கபோகும் அனைத்து பிரிவு மக்களும் இந்தப் போரில் நம்மோடுதான் இப்போது தார்மீக ரீதியாக இருக்கிறார்கள்.
நாளை நடைபெறப் போகும் போரில் நம்மோடுதான் களம் காண்பார்கள். மக்கள் முன்னணியாளர்களை போன்று கோட்பாட்டு ரீதியாகவே அனைத்து உண்மைகளையும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை அனுபவங்கள் மூலமே அவற்றை கற்றுக் கொள்வார்கள்.
எந்த பாரதிய ஜனதாவை ஜாட் சாதியினர் ஆட்சியில் அமர்த்தினார்களோ அவர்கள் தான், அதே பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக கடந்த நான்கு மாத காலமாக டெல்லியின் எல்லைகளில் போராடி வருகிறார்கள்.
பாம்புக்கு பால் வார்த்தால் அது பாவம் பார்க்காது என்பதை இன்று புரிந்துக் கொண்ட பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகளை போன்று விரைவில் நாட்டின் ஏனைய மக்களும் புரிந்துக் கொள்வார்கள்.
புதிய கல்வி கொள்கை என்ற பெயரிலான குலக்கல்வி திட்டம், இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் சதிகள், நீட் தேர்வு, புதிய வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி, சிறு வணிகத்திலும், அமைப்பு சாரா தொழிற்துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது போன்றவற்றால், தமது வாழ்வா தாரத்தையும், சமூக ரீதியான உரிமைகளையும் இழக்கும், இழக்கப்போகும் அனைவரும் நமது அணியிலேயே இருக்கிறார்கள். நாம் தனிமைப்பட்டு கிடக்கவில்லை.
திருவாளர்கள் மருதையனும், காளியப்பனும் இன்னும் இவர்களை போன்றோரும் சித்தரிப்பதை போன்று இதுவே கடைசி தேர்தலாக இருந்தாலும், அல்லது தமிழகத்தில் பாசிஸ்டுகள் ஆட்சியை பிடிக்காமல் நாம் தடுத்துவிட்டாலும் பாசிசம் வருவதற்கான உலகலாவிய பொருளாயித, அரசியல் அடிப்படைகள் நீடித்தால் பாசிசம் வருவதை இப்போதைய நிலையில் நம்மால் தடுத்து விடவும் முடியாது.
பாசிசம் இப்போது ஆட்சிக்கு வந்து விட்டாலே, அதுவே மனித குல வரலாற்றில் என்றென்றும், யாராலும் வெற்றி கொள்ள முடியாத சக்தியாக திகழ்ந்து விடவும் முடியாது.
எனவே பாசிசம் பற்றிய இவர்களின் பீதியூட்டல்களை கேட்டு நாம் அஞ்சி நடுங்க தேவையில்லை. மூலையில் முடங்கிக் கிடப்பதற்கான தருணமும் இது இல்லை.போர் என்று வந்து விட்டால் இழப்புகளை நம்மால் குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் தவிர்த்து விட முடியாது.
இழப்பை சந்திக்க அஞ்சுகிறவர்களே, படமெடுத்தாடும் பாசிசம் என்ற நாகத்தை பார்த்துத் தொடை நடுங்குபவர்களே நம்மையும் தங்களை போன்றே ஆக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.
நடை பெறப் போகும் தமிழக தேர்தல் மூச்சு விடுவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கும் என்பது அப்படி கூறுபவர்களின் விருப்பமும், ஆசையுமாக மட்டுமே இருந்து விட்டு போகட்டும்.
பாசிசத்திற்கு எதிரான போருக்கு எது தவிர்க்க முடியாத தேவையோ அவை அனைத்தையும் இந்த நிமிடத்திலிருந்தே நாம் தேடிப்பிடிப்போம். அந்த சக்திகளோடு கரம் கோர்ப்போம்.
1. அப்படிப்பட்ட தேவைகளில் முதன்மையான ஒன்றுதான் குறைந்த அளவு செயல் திட்டத்தின் அடிப்படையிலான ஐக்கிய முன்னணியாகும்!
2. திமுக இந்த தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்கும், அந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கும், அது எதிரிகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும், மாநில அரசுக்கு தேவையான தன்னாட்சி அதிகாரங்களை பெறுவதற்கான போராட்டங்களை - ஓட்டுப் போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் - தேர்தலுக்கு பிறகும் முன்னெடுப்போம்!
3. பாசிசம் என்ற நாகத்தை எதிர் கொள்வதற்கு கீரிப்பிள்ளை மற்றும் பாம்பாட்டியின் உத்திகளை கற்று போர்க்களத்திற்கு தயாராவோம்!
வெற்றி நமதே!
- மூடக்கிழவன்