சுயமரியாதை திருமண சட்டத்தில் பெரியார் தந்த திருத்தம்

1954: தீண்டப்படாதார் கோயில் நுழைவு உரிமையை பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். காசி விசுவநாதன் கோயிலில் தீண்டப்படாதவரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பனர்கள் அவர்களுக்கென்று தனி வழி ஒன்றை உருவாக்கி அந்த வழியாக மட்டும்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறினார்கள். ஏனைய பிற சாதி பக்தர்களோடு கலந்து அவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பெரும் போராட்டத்தை நடத்தினர்.

1955 : தீண்டாமையை ஒழித்து சட்டம் கொண்டுவரப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசு சட்டமேற்றியது. அந்த சட்டத்தில் அம்பேத்கர் தெரிவித்த பல கருத்துகளை புறக்கணித்தது.

1956 பம்பாய் சட்டமன்றம் கோயில் நுழைவுக்கு ஒரு சட்டம் இயற்றியது, சுவாமி நாராயணன் பரம்பரை என்ற ஒரு பிரிவினர் யாரை கோவிலுக்கு விடலாம் என்கின்ற உரிமை தங்களுக்கு உண்டு என்று உரிமை கோரி சில பிரிவினருக்கு அனுமதி மறுத்து கோயிலை மூட உரிமை தங்களுக்கு உண்டு என்று வாதிட்டனர். இதை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

1966 : சுவாமி நாராயணன் பரம்பரையினர் பம்பாய் சட்டமன்றம் இயற்றிய சட்டத்தை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றம் போனார்கள். உச்சநீதிமன்றம் அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்தது, தீண்டப்படாதவர்கள் இந்துக்களே அல்ல என்று சாமி நாராயணன் பரம்பரையினர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை ஏற்க மறுத்தது, அரசியல் சட்டம் தீண்டப்படாதவர்களை இந்துக்கள் என்று அங்கீகரிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.atrocity on dalits1967 : தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணத்திற்கு பின் தேதியிட்டு உரிமைகளை வழங்கி சட்டம் கொண்டு வந்தார். புரோகிதர்கள் இல்லாமல் மாலை மாற்றிக் கொள்ளலாம் அல்லது தாலி கட்டிக் கொள்ளலாம். புரோகிதர்கள் இல்லாத திருமணம் செல்லும் என்ற புரட்சிகரமான சட்டமே சுயமரியாதை திருமண சட்டம். இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பு பெரியாரின் பரிசீலனைக்கு அண்ணா அனுப்பி வைத்தார், மசோதாவை ஆழ்ந்து படித்த பெரியார் அதில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான கருத்துக்கு திருத்தம் ஒன்றை தந்தார் சுயமரியாதை திருமணம் என்பதற்கான விளக்கமாக அந்த மசோதாவில் தாலி கட்டிக் கொண்டு மாலை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பெரியார் தாலி கட்டிக் கொள்ளலாம் அல்லது மாலை மாற்றிக் கொள்ளலாம், இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும் என்ற திருத்தத்தை பெரியார் முன் வைத்தார். அண்ணா அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பெரியாரின் அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டினார். படித்த தங்களுக்கே புரியாத பிரச்சனையை பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த பெரியார் எப்படி கண்டறிந்து பாருங்கள் என்று வியந்தார்.

1968 : கீழ் வெண்மணியில் 42 தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உயர்வு போராட்டத்திற்காக உயிருடன் கொளுத்தப்பட்ட கொடுமை அரங்கேறியது.

1969 : தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மறு பரிசீலனை செய்வதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 1954 இல் அம்பேத்கர் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது.

1973 : சென்னை உயர்நீதிமன்றம் கீழ் வெண்மணி எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் அவர்கள் குடிசைக்கு சென்று தீ வைத்திருப்பார்கள் என்று நம்ப முடியாது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

1976 : தீண்டாமை ஒழிப்பு சட்டத்தில் 1954 இல் அம்பேத்கர் கூறிய பரிந்துரைகளை ஏற்று அதை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தோடு இணைத்து இந்திரா காந்தி சட்டமியற்றினார்.

1977 : பீகார் மாநிலம் பெல்சி கிராமத்தில் நிலமற்ற பஸ்வான் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் நில உடமையாளரான குர்மி சாதியினருக்கும் இடையே நடந்த சாதி மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 8 பேர் தீண்டப்படாத வகுப்பைச் சார்ந்தவர்கள். மொரார்ஜி தேசாய் அரசாங்கம் இது சாதி மோதல் அல்ல, இரு குழுவினருக்கு இடையே நடந்த மோதல் என்று கூறி சாதி பிரச்சினையை திசை திருப்ப பார்த்தது. தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் பெல்சி சென்று உண்மைகளை அறிந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. சாதியே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அது தெளிவுபடுத்தியது. அதைத் தொடர்ந்து அன்றைக்கு அதிகாரத்தில் இல்லாத இந்திரா காந்தி பெல்சி கிராமத்திற்கு சென்று கொட்டும் மழையில் யானை மீது ஏறி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்திரா காந்தியின் மறு அரசியல் பிரவேசத்திற்கு இந்த நிகழ்வு பெருமளவில் உதவியது.

1982 : பெல்சி சாதி கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில் ஒருவர் இரண்டு தலித்துகளை கொலை செய்தவர்.

1983 : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மகாபீர் மத்தூர் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்தியாவில் முதன் முதலாக தீண்டப்படாத மக்களை கொலை செய்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தூக்கு தண்டனை இதுதான்

1987 : ராஜஸ்தானில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ரூப் கண்வார் என்ற பெண் கணவன் இறந்த நெருப்பில் உயிரோடு எரிக்கப்பட்டார். சதி என்ற கொடூரமான இந்துப் பழக்க வழக்கத்தின் தொடர்ச்சியாக இந்த எரிப்பு நடந்தது. நாடு முழுதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன, ராஜீவ் காந்தி சதி என்பது கொலை குற்றம் அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்

1989 : தீண்டாமை கொடுமைகளை கண்டிக்கும் சட்டத்தை கடுமையாக்கி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1990 : உச்சநீதிமன்றம் கீழ் வெண்மணி கொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

1991 : ஆந்திர மாநிலத்தில் சுந்தூர் கிராமத்தில் 8 தலித் மக்கள் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது தலித் மக்கள் மீதான கொடுமைக்காக சிறப்பு விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

1996 : பீஹார் மாநிலத்தில் ரன்வீர் சேனா என்ற பூமிகார் சாதி அமைப்பு பதோனி தோலா என்ற ஊரில் 20 பேரை கொலை செய்தது இதில் பெரும்பாலோர் தலித் சிலர் முஸ்லிம்கள் இதில் ஒருவரைத் தவிர கொல்லப்பட்ட மற்ற அனைவரும் பெண்கள் குழந்தைகள்.

1997 : பீகாரில் லக்ஷ்மன்பூர் பதே என்ற கிராமத்தில் ரன்வீர் சேனா என்ற ஜாதி வெறி அமைப்பு 58 தீண்டப்படாத மக்களை வெட்டிக் கொன்றது. இந்தியாவிலேயே சாதி வன்முறையில் மிக அதிக எண்ணிக்கையில் தலித் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு இதுதான் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் இது தேசிய அவமானம் என்று கூறினார் .

1997 : பம்பாயில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து போராடிய தலித் மக்கள் மீது காவல்துறை சுட்டதில் 10 பேர் இறந்தனர் பம்பாய் நகரில் இந்த சம்பவம் நடந்தது

1998 : ராம் பாய் நகரில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்திய குழு காவல்துறை துறை ஆய்வாளர் மனோகர் கதாம் என்பவர் மீது குற்றம் சுமத்தியது தேவையே இல்லாமல் கண்மூடித்தனமாக அவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று விசாரணை ஆணையம் அறிவித்தது.

1999 : ரன்வீர் சேனா 23 தலித் மக்களை கொன்றுக் குவித்தது. இதில் 24 பேர் மீது பீகார் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

2002 : ஹரியானாவில் பசுமாட்டை ஏற்றிச் செல்கிறார்கள் என்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு கும்பல் ஐந்து தலித் மக்களை கொலை செய்தது. அங்கே இருந்த காவல்துறை இந்த கொலையை தடுப்பதற்கோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கோ முன் வரவில்லை.

2006 : மகாராஷ்டிராவில் கைராலஞ்சி என்ற இடத்தில் தலித் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கொடூரமாக ஒரு கும்பல் கொலை செய்தது. அதில் ஒரு தாயாரும் அவரது வயது வந்த மகளும் அடங்குவர் அவர்களது உடல் நிர்வாணமாக்கப்பட்டு அருகே இருந்த ஒரு கால்வாயில் வீசப்பட்டது இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இது திட்டமிட்ட சதி இந்த வழக்கில் சாட்சியங்களையும் உண்மைகளையும் மறைப்பதற்கு மிக பெரும் சதி நடந்து இருக்கிறது என்று கூறியது.

2009 : ராம் பாய் நகர் துப்பாக்கி சூடு வழக்கில் விசாரணை நீதிமன்றம் காகம் என்ற காவல்துறை துறை ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து அங்கே நடந்தது கொலை அல்ல தற்கொலை தான் என்று கூறியது கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய அந்த துணை ஆய்வாளர் உடனடியாக பிணையில் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

2010 : ஹரியானாவில் பசுமாட்டை ஏற்றிச் செல்கிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டில் ஐந்து பேரை ஒரு கும்பல் கொலை செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது அதில் ஒருவர் தலித். நீதிமன்றம் தனது தீர்ப்பில் கொலை செய்தவர்கள் பசுமாட்டை ஏற்றி வந்தவர்கள் தலித் என்பது தெரியாது என்று கூறியது.

2012 : உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் விடுதலை செய்தது விசாரணை நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகள் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது இதில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டு இருந்தது பம்பாய் உயர் நீதிமன்றம் அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்தது

2013 : லட்சுமண்பூர் பதே வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரையும் விடுதலை செய்தது. இதில்16 பேர் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

2016 : ஆந்திர மாநிலம் சுதூர் வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டிய 53 பேரையும் ஆந்திர உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

2019 : கைரலாஞ்சி சாதி கலவர வழக்கின் உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதே நேரத்தில் இதில் சாதி பிரச்சனை ஏதும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

Pin It