இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை குறைந்துவிட்டது என்று கூறப்படும் நிலையில், 55 சதவிகித வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டதே இதற்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.2017-18 நிதியாண்டின் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 960 கோடி குறைந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிதிக் குழுவுக்கு வழங்கியுள்ள விவரங்களின் படி, பொதுத்துறை வங்கிகளின் மேற்கூறிய செயற்படா சொத்து மதிப்பில் வெறும் 27 சதவிகித மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் எனவும் சுமார் 55 சதவிகித அளவுக்கான கடன்கள், வங்கிகளே பார்த்து தள்ளுபடி செய்து விட்டால் ஏற்பட்ட மதிப்பு குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது.

வராக் கடன் மீட்பு நடவடிக்கை மூலமாக ரூ. 41 ஆயிரத்து 391 கோடி அளவிலான கடன் மட்டுமே மீட்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ரூ. 84 ஆயிரத்து 272 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. ரூ. 25 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான கடன்கள் செயற்படா சொத்துப் பிரிவிலிருந்து தரம் உயர்ந்துள்ளன.மேலும், முந்தைய வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய வராக் கடன்கள் உருவாகி, அது ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 475 கோடியாக உயர்ந்து விட்டதும் வெளியே வந்துள்ளது.தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரையில் 2018 டிசம்பர் 31 வரையில் அவற்றின் வராக் கடன் ரூ. 46 ஆயிரத்து 91 கோடியாக குறைந்துள்ளது. ஆனால், புதிதாக ரூ. 60 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான கடன்கள், வராக் கடன் பட்டியலில் இணைந்துள்ளன. தனியார் துறை வங்கிகளில் மீட்கப் பட்டதாகக் கூறப்படும் வராக் கடனை எடுத்துக் கொண்டாலும், பொதுத்துறை வங்கிகளைப் போல சுமார் 40.2 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டவையாகும். உண்மையாகவே திரும்பப் பெறப்பட்ட கடன் 34.2 சதவிகிதம் மட்டும்தான்.

வங்கித் துறையில் மோசடிகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்பட்ட இழப்பும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கத்தான் செய்துள்ளன என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில் தலா ரூ.1 லட்சத்துக்கும் மேலான 4 ஆயிரத்து 693 மோசடிகள் நடந்துள்ளன. 2017-18 நிதியாண்டில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 904. இதன் வாயிலாக இழந்த தொகை மொத்தம் ரூ. 32 ஆயிரத்து 361 கோடியே 27 லட்சமாகும்.இவற்றையெல்லாம் பார்க்கையில், மோடி அரசால் ஒருபோதும் வராக்கடன்களை வசூலித்துக் குறைக்க முடியாது. இப்படி தள்ளுபடி செய்து குறைத்தால்தான் உண்டு. எனவே, வராக்கடன் மதிப்பு குறைந்தது என்பது என்பதும் ஒருவகையிலான ஏமாற்று நடவடிக்கையே ஆகும்.

Pin It