தனியார் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களிலிருந்து நபர்களைத் தேர்வு செய்து 10 மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர்களாக நேரடியாக நியமிக்கப் போவதாக நடுவண் ஆட்சி அறிவித்திருக்கிறது. இது சட்ட விரோதமாக நிர்வாக அமைப்பைப் புறந்தள்ளி, அரசு எந்திரத்தை ‘பார்ப்பன காவியமாக்கும்’ நடவடிக்கையேயாகும்.

இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகள் முறையாக பதவி உயர்வு பெற்று இணைச் செயலாளராகும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. இணைச் செயலாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நடுவண் ஆட்சியின் அறிவிப்பே கூறுகிறது. இத்தகைய அதிகார மய்யத்தில் செயலாற்றும் உரிமை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மறுக்கப்படுவது மற்றொரு சமூக அநீதியாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பத்து துறைகளும் நிர்வாகத் திறமையற்ற அதிகாரிகளைக் கொண்டு தான் செயல்பட்டு வந்ததா என்ற கேள்விக்கும் நடுவண் ஆட்சி பதில் சொல்ல வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் ஆலோசனை வழங்கும் அமைப்புகளிலும் உயர் பொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் பார்ப்பன உயர்ஜாதிப் பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவிப்பு கூறுவதிலிருந்து இதனால் பயனடையப் போகிறவர்கள் யார் என்பதை சொல்லத் தேவை இல்லை.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டு மானால் ‘சங் பரிவார்’ கொள்கையை ஏற்று நிர்வாகத்தை காவி மயமாக்குவதில் முனைப்புக் காட்டும் பார்ப்பனர்களிடம் நடுவண் அரசின் முக்கிய அதிகாரப் பொறுப்புகள் கைமாற்றப்பட இருக்கின்றன.

ஏற்கனவே - ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்புகளான ‘ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ்’ என்ற அமைப்பு கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில், நடுவண் அரசை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. பாரதிய சிக்சா மண்டல் என்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை பாடத் திட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட கொள்கைத் திட்டங்களில் வழிகாட்டி வருகிறது. பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவலின் மகன் சவுர்யா டோவல் இணைந்து நடத்தும் ‘இந்தியா நிறுவனம்’ அரசை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

இவை தவிர, இந்திய உயர்கல்வி ஆய்வு மய்யம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான மய்யம், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், தேசிய நூல் அறக்கட்டளை ‘பிரச்சார் பாரதி’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், சென்சார் போர்டு மற்றும் அய்.அய்.டி., அய்.அய்.எம். ஆகியவற்றின் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கருத்துகளில் ஊறிப் போனவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய தேர்வுகளில் முதல் நிலை தேர்வு முதன்மை தேர்வு நேர்முகப் பேட்டி என்று மூன்று கட்டங்களில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக அனுப்பிய பிறகு மற்றொரு குழு அவர்களுக்கான பணித் துறையை மதிப்பெண் வழங்கி நிர்ணயிக்கும் என்ற விபரீத முடிவை நடுவண் அரசு எடுத்திருக்கிறது. அந்த மற்றொரு குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்து அனுப்புகிறவர்களாகவே இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆக, பதவிக் காலம் முடிவதற்குள் அரசு நிர்வாக அதிகார அமைப்புகளை முழுமையாக பார்ப்பன - மதவெறிக் கட்டமைப்பாக மாற்றும் முடிவுக்கு நடுவண் ஆட்சி வந்துவிட்டது. இது பச்சைப் பார்ப்பனியம். ‘இராமராஜ்யம்’ கொல்லைப்புற வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது.

Pin It