ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு - நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 'நீர் மறுப்பு' என்ற தலைப்பில் ஆற்றிய உரை.:

நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட் டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதல் ஒப்பந்தம் 1892ஆம் ஆண்டில் போடப்படுகிறது. அப்போதே காவிரியில் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென்றால் அதற்கு சென்னை மாகாண அரசிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அதற்குப் பிறகு 1924ஆம் ஆண்டில் அங்கே கிருஷ்ணராஜ சாகர் அணையும், இங்கே மேட்டூர் அணையும் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது இரண்டு அரசுகளும் பேசின. அப்போது கர்நாடகாவில் 1,10,000 ஏக்கரும், தமிழ்நாட்டில்

14 இலட்சம் ஏக்கரும் பாசனப் பரப்பாக இருந்தது. அதன் அடிப்படையில் எவ்வளவு நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒப்பந்தத்தில் இரு அரசுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்குமென்றும், அதன்பிறகு மறுபரிசீலனை செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பரப்பு பாதிக்கிற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது என்பது 1924 ஒப்பந்த விதி. இந்த 1924ஆம் ஆண்டிலிருந்து சட்ட விரோதமாக கர்நாடகா காவிரியின் குறுக்கே அணை கட்டிய காலம் வரையில் சராசரியாக நமக்குக் கிடைத்த தண்ணீரின் அளவு ஒரு ஆண்டுக்கு 370 முதல் 380 டி.எம்.சி.யாக இருந்தது. ஆனால் 1970ஆம் ஆண்டுவாக்கில் கர்நாடகா காவிரியின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி அணைகளைக் கட்டிய பிறகு தமிழ்நாட்டுக்கு கிடைத்த காவிரித் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

தண்ணீரின் தேவையை உணர்ந்து விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த பிறகு தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்வாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க உத்தரவிடுகிறது. 1980-1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் தமிழ்நாடு காவிரியில் பெற்ற அதிகபட்ச 2 ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச 2 ஆண்டுகள் போக எஞ்சிய 6 ஆண்டுகளின் சராசரியை கணக்கிட்டு இந்த இடைக்காலத் தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். ஆனால் இந்த 205 டி.எம்.சி. என்பது கர்நாடகம் சட்ட விரோதமாக ஐந்து அணைகளைக் கட்டிய பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீரின் அளவைத் தடுத்து குறைத்துவிட்ட பிறகு, அந்த சராசரியை கணக்கிட்டு வழங்கியதுதானே தவிர 1974ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீரின் அளவு அல்ல.

கிருஷ்ணராஜ சாகர் அணையும், மேட்டூர் அணையும் கட்டப்பட்ட பிறகு. இன்னும் சொல்லப் போனால் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்ட பிறகு தமிழ்நாட்டுக்குள் காவிரி பாய்ந்த அளவைத்தான் தீர்ப்பாயம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், சட்ட விரோதமாக ஐந்து அணைகளைக் கட்டிய பிறகு வந்த தண்ணீரின் அளவைக் கணக்கில் எடுத்துக்கொண்டது நமக்கு இழைக்கப்பட்ட முதல் அநீதி. இந்த 205 டி.எம்.சியும் 2007ஆம் ஆண்டு இறுதித்தீர்ப்பில் 192 டி.எம்.சியாக குறைந்தது. 192 டி.எம்.சி. இப்போது 177.25 டி.எம்.சியாகக் குறைந்துவிட்டது. ஆனால் 1924ஆம்  ஆண்டில் மைசூர் மாகாணம் காவிரியில் பெற்ற தண்ணீரின் அளவு 177 டி.எம்.சி. அப்போது சென்னை மாகாணம் பெற்ற தண்ணீர் 490 டி.எம்.சி. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அன்று கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைப் பெற்றதோ அவ்வளவு தண்ணீரை உச்ச நீதிமன்றம் தமிழ் நாட்டுக்கு இன்று வழங்கி யிருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய அநீதி நமக்கு நிகழ்த்தப்பட் டிருக்கிறது?

ஏற்கெனவே தமிழ்நாடு தண்ணீர் குறைந்த மாநில மாகவும், மழை குறைந்த மாநிலமாகவும் இருக்கிறது. பெரிய நீர் ஆதாரங்களும் நம்மிடம் இல்லை. இந்தச் சூழலில் காவிரியில் தண்ணீர் குறைக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட சதி. 1924ஆம் ஆண்டில் காவிரியை நம்பியிருந்த தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 14 லட்சம் ஏக்கர். இப்போது 29 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. ஆனால் இங்கு இருக்கக் கூடிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஒவ்வொரு முறை எழுதும்போதும் 'தமிழ்நாட்டிலே பாசனப் பரப்பு கட்டுக்கடங்காமல் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. தண்ணீரை அதிகம் குடிக்கக் கூடிய பயிர்கள் இங்கே பயிரிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது. தமிழ்நாடு பேராசைப்படுகிறது' என்கிறார்கள். ஆனால் உண்மை நிலை, கர்நாடகம் 1924ஆம் ஆண்டிலிருந்த லட்சம் ஏக்கர்  பாசனப் பரப்பை இப்போது 24 லட்சம் ஏக்கர்களாக அதிகரித்திருக்கிறது. இந்தக் கணக்கை அவர்கள் பேசுவதில்லை. கடந்த வருடம் தமிழ் இந்து பத்திரிக்கையிலே ஒரு கட்டுரை எழுதப்பட்டது. காவிரியில் தண்ணீர் கேட்கத் தமிழனுக்கு உரிமை இருக்கலாம், ஆனால் தகுதி இருக்கிறதா. தமிழ் நாட்டில் நீர் சேகரிப்புப் பணிகளை சரியாகச் செய்யவில்லை என்று அந்த கட்டுரையில் எழுது கிறார்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக எங்கள் உரிமைகளை நாங்கள் மறுத்துவிட முடியாது.

பல்வேறு தகவல்களையும் இவர்கள் மறைத்துத் தான் இப்படி எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய அணைகளில் தேக்கப்பட்டிருக்கிற தண்ணீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 180 டி.எம்.சி.யாக உள்ளது. இதில் காவிரியிலிருந்து மட்டும் நமக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு 120 டி.எம்.சி. கிட்டத்தட்ட இரண்டு பங்கு தண்ணீரைக் காவிரிதான் நமக்கு அளிக்கிறது. ஆனால் கர்நாடக நீர் தேக்கங்களில் இருக்கக்கூடிய தண்ணீரின் அளவு என்பது 600 டி.எம்.சியாகும். தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு அதிகம். அதில் ஆறில் ஒரு பங்குதான் அவர்களுக்குக் காவிரியின் மூலம் கிடைக்கிறது.

கர்நாடகத்திற்கு மழை மூலமாக கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு 3,450 டி.எம்.சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு மழை மூலமாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு 800 டி.எம்.சி. மட்டுமே. ஆக, தமிழ்நாட்டை விட நான்கு மடங்கு அதிகமான மழைநீரைக் கர்நாடகம் பெறுகிறது. கர்நாடகத்தின் மக்கள்தொகை 6 கோடி. தமிழ் நாட்டின் மக்கள்தொகையோ 8 கோடி. தண்ணீரை மிக அளவில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள மாநிலமாகக் கர்நாடகம்தான் உள்ளது. அவர்களுக்குக் காவிரியில் உரிமை மறுக்கப்படவும் இல்லை. எனவே தமிழ்நாட்டின் உரிமையை மறுத்து, நம்மிடமிருந்து தண்ணீரைப் பிடுங்கிக்கொண்டு போய் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது?

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் வட கிழக்குப் பருவமழை மூலமாகக் காவிரி டெல்டாவுக்கு கிடைக்கிற தண்ணீர் நிலத்தடி நீராக மாறுவது கிடையாது. ஏனென்றால் காவிரி டெல்டா பகுதியின் நிலப்பரப்பில் கடும் பாறைகள் இருக்கின்றன. அதனால்தான் இந்த மழைநீர் நிலத்தடி நீராக மாறுவதில்லை. இதை நாங்கள் சொல்லவில்லை. 1969ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு ஆய்வு சொல்கிறது. காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி தண்ணீர் எப்படிச் சேருகிறது என்றால் காவிரியில் நீர் பாய்ந்து பாறை இடுக்குகளில் ஊடுருவி அதன்வழியாக நீர்த் தொகுப்பில் சேருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியின் நிலத்தடி நீரின் அளவு 20 டி.எம்.சியாக உள்ளது. அதிலிருந்து 10 டி.எம்.சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இதிலே சுனாமிக்குப் பிறகு கிட்டத்தட்ட 770 சதுர கிலோமீட்டர் காவிரி டெல்டாவுடைய நிலப்பரப்பு கடல்நீர் புகுந்து உவர்நீராக மாறியிருக்கிறது. இதனால் திட்டமிட்டு உச்ச நீதிமன்றம் நம்மை வஞ்சித்திரு க்கிறது. கர்நாடகாவின் பெங்களூருக்கு நாங்கள் தண்ணீரை ஒதுக்குகிறோம் என்றும் சொல்கிறார்கள். பெங்களூரு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்துகிறது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவிரி தமிழ்நாட்டுக்குள் நுழையும் கிருஷ்ணகிரியிலிருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம் என்று பல்வேறு நகரங்கள் காவிரி நீரை நம்பித்தான் வளர்ந்து நிற்கின்றன. இந்த நகரங்கள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைக் கொண்டவைதான். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்பவை யாகவும் உள்ளன. ஆனால் இந்த நகரங்களுடைய தண்ணீர் தேவையை உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இதுமட்டுமல்ல, புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இங்கிருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. சென்னையின் பொருளாதார பங்களிப்பு என்பது இந்தியாவுக்கு மிக முக்கியமானது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்லுகிறார்களே இனப்படு கொலை செய்த இலங்கை நாட்டின் பொருளாதார அளவை விட சென்னையின் பொருளாதார அளவு மிக அதிகம். இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட சென்னையின் உள்நாட்டு உற்பத்தி அதிகம். நம்முடைய வலிமை நமக்குத் தெரியவில்லை என்பதுதான் நமக்குப் பிரச்சினை. தமிழ்நாடு நினைத்தால் இந்தியப் பொருளாதாரத்தை முடக்க முடியும் என்று நாங்கள் திரும்பத் திரும்ப சொல்வதன் அர்த்தம் இதுதான். தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்களின் இறையாண்மைக்குள் இருக்கு மென்றால் இந்தியாவின் பொருளாதாரம் முறிந்துபோகும்.

1947க்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை நீரின் பங்களிப்போடு சேர்த்துப் பார்க்க வேண்டி யிருக்கிறது. இது இரண்டும் பிரிக்கக்கூடிய காரணிகள் அல்ல. தண்ணீர் இல்லையென்றால் எந்தப் பொருளாதார வளர்ச்சியும் கிடையாது. அதனால்தான் காவிரியில் மறுக்கப்படுகின்ற நீரை தமிழ்நாட்டின் பொருளாதாரத்தோடு இணைத்துப் பார்க்கிறோம். விவசாயத்தின் முக்கியத்துவம் காவிரி நீரைக் கொண்டுதான் இருப்பதுபோல இந்தக் காவிரி கரையோரம் இருக்கக்கூடிய 19 மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியையும் இதை நம்பித்தான் இருக்கிறது. நாம் இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருபுறத்தில் இந்தியாவினுடைய ஆரிய வெறி நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் தனியார்மயத்தை தமிழின அழிப்புக்குப் பயன்படுத்த முடியுமென்றால் அதையும் நம்மை அழிக்கப் பயன்படுத்துகிறது இந்திய அரசு. 1955ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரப் பங்களிப்பில் விவசாயத்தின் பங்களிப்பு என்பது 52 விழுக்காடு. ஆனால் 2004ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரப் பங்களிப்பில் விவசாயத்தின் பங்களிப்பு வெறும்  15 விழுக்காடுதான். ஆனால் இன்னும் தமிழ்நாட்டு மக்களில் 50 விழுக்காட்டினர் கிராமத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். பசுமைப் புரட்சி என்ற செயற்கை விவசாய முறையைக் கொண்டுவந்த பிறகு விவசாய முறையில் பெரும் மாறுதல் வந்துள்ளது என்பது மட்டுமல்ல, விவசாயத்தின் பொருளாதார செழிப்பும் அழிக்கப்பட்டுள்ளது. அதோடு இணைத்துத்தான் நாம் தண்ணீரின் பயன்பாட்டைப் பார்க்க வேண்டும்.

செய்தி தொகுப்பு : ர. பிரகாசு

(தொடரும்)

Pin It