வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரி சேலம் இரயில்வே சந்திப்பு முன்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ``நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் வைத்த வேண்டுகோள் சரியா தவறா என்று தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்றம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக் குள்ளேயே நுழைந்து அதை நீர்த்துப் போகச் செய்தது. அக்கறை இல்லாமல் வழக்கை நடத்துவதாலும், சாட்சிகள் மிரட்டப்படுவதாரும் இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடிய வில்லை என்கிறார்கள்.

ஆனால், இந்த வன்கொடுமை சட்டத்தைக் கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போது இச்சட்டம் கொண்டு வரப் பட்டது. வி.பி.சிங் பிரதமராக இருக்கும்போது இச்சட்டம் அமலுக்கு வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது வகைப் படுத்தப்பட்டது. மோடி பிரதமராக இருக்கும் போது சட்டம் மேலும் திருத்தப்பட்டது. அனைத்து பிரதமர் களும் ஆதரவாகவே இருந்துள்ளனர்.

 காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வன் கொடுமைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. வன்கொடுமை நவீன முறையில் அதிகரித்துள்ளது. படித்த இந்த சமுதாயத்தில்தான் இரட்டைக் குவளை முறைகளும், ஆணவப் படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன. இதை ஒழிப்பதற்கு எந்த அரசுகளும் முனைப்பு காட்டுவ தில்லை. சட்டசபையில் தமிழகத்தில் ஆணவக் கொலையும், இரட்டைக் குவளை முறையும் இல்லை என்று பொய் பேசுகிறார்கள். இன்றளவும் சாதியத் தீண்டாமை இருந்து கொண்டே இருக்கிறது.

அதனால் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கூடாது. இதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அரசிய லமைப்பின் 9ஆவது அட்டவணை யில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து தண்டனை வழங்குவதோடு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அரசு செய்ய வேண்டும். சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்க வேண்டும்'' என்றார்.

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர். கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி. (சி.பி.எம்.) மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பா. இராமச்சந்திரன், நிர்மல் குமார், விக்னேஷ், இயல், அமுல்ராஜ், மாதவன், நேரு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pin It