இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி'.

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது.

‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டு வரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின.

ஆமை இறைச்சி கதையைப் பரப்பி தலைவர் பிரபாகரனை கேலியும் கிண்டலும் செய்வதற்கு புலி எதிர்ப்பாளர்கள் முற்பட்டார்கள். கவிதைகள், கேலிச் சித்திரங்கள் எல்லாம் வரைந்தார்கள்.

ஆமை இறைச்சிக் கதை என்பதே தலைவர் பிரபாகரனின் மாண்பைக் குறைப்பதற்காக புலி எதிர்ப்பாளர்களால் பரப்பி விடப்பட்ட ஒன்று. தலைவர் பிரபாகரன் தனது வாழ்நாளில் அதிக காலம் காட்டில் நின்று போராடியவர். இதன் போது உணவு கிடைப்பதே பெரும்பாடாக இருந்த காலங்களை அவர் அனுபவித்திருக்கிறார். கிடைத்தவற்றை உண்டும் எதுவும் கிடைக்காதபோது பட்டினியாகவும் வாழ்ந்திருக்கிறார்.

இப்படியான ஒரு போராளியாகவும், புரட்சியாளராகவும் தலைவர் பிரபாகரன் தமிழர் மனங்களில் நிறைந்திருந்திருப்பதைப் பொறுக்க முடியாமல், புலி எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு உணவுப் பிரியராகவும் உல்லாச வாழ்க்கை வாழ்பவராகவும் காட்டுவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படியான ஒரு நாளில் தான் இந்தியாவில் இருந்து 14000 மெட்ரிக் டன் அரிசி ஏற்றிக் கொண்டு தென்னாப்பிரிக்கா நோக்கி பர்ஹா 3 என்கின்ற ஜோர்தானியச் சரக்குக் கப்பல் ஒன்று புறப்பட்டது. வழியில் முல்லைத் தீவுக்கு அண்மையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கப்பல் தத்தளிக்கத் தொடங்கியது. உதவிக்கு விரைந்த கடற்புலிகள் அதில் இருந்த 25 மாலுமிகளையும் காப்பாற்றி, கப்பலையும் கரை சேர்ந்தார்கள். தமது உயிரைக் காப்பாற்றியதற்காக மாலுமிகள் விடுதலைப் புலிகளுக்கு நன்றியை தெரிவித்தார்கள். அவர்கள் பத்திரமாக அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கையும் அன்றைக்கு புலி எதிர்ப்பாளர்களால் கடற் கொள்ளையாகவும், வழிப்பறியாகவும் வர்ணிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அத்துமீறி கப்பலை மறித்து, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இழுத்து வந்தது போன்றுதான் அன்றைக்கு புலிகளுக்கு எதிரான இணைய ஊடகங்கள் எழுதின.

2009இற்குப் பின்னர் புலிகளுக்கு எதிரான இணைய ஊடகங்களில் பெரும்பாலானவை காணாமல் போயின. மிஞ்சியுள்ள ஊடகங்களும் தமது பாதையை பெருமளவில் மாற்றிக் கொண்டன. போராட்டத்திற்கு தன்னையும் தன் குடும்பத்தையும் தலைவர் பிரபாகரன் அர்ப்பணித்து விட்ட பிறகு, இனியும் அவரைப் பற்றி அவதூறு எழுத வேண்டாம் என்று அவர்கள் சிந்தித்திருக்கலாம்.

ஆனால் யாருக்கோ இது பொறுக்கவில்லை. திடீரென்று ‘28 கிலோ ஆமைக் கறி சாப்பிட்டேன்' என்றபடி சீமான் காட்சி தந்தார். தலைவர் பிரபாகரனை உண்மையாக நேசிப்பவர்கள் ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனார்கள். சீமானின் நிகழ்ச்சி நிரல் எது என்று தடுமாறிப் போனார்கள். ஆயினும் சுதாரித்துக் கொண்டார்கள். இந்தக் கதையை சீமானை நோக்கியே திருப்பி விட்டு, அவரைப் பொய்யனாக்கி கேலி செய்து இந்தச் சதியை முறியடித்தார்கள். சற்றும் சளைக்காத சீமான் அடுத்து கப்பல் கதையோடு வந்தார். நல்ல வேளையாக 40000 டன் என்றும், ஆஸ்திரேலியாக் கப்பல் என்றும் உளறினார். ஆகவே இம் முறை அந்தக் ‘கதை’யும் இலகுவாக முறியடிக்க முடிந்தது.

விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனங்கள் வைப்பது வேறு. ஆனால் ஒரு உன்னதமான அர்ப்பணிப்பு மிகுந்த போராட்டத்தை நடத்திய தலைவரை உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவராக சித்தரித்து அவருடைய மாண்பைக் குலைப்பது வேறு.

தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. புரட்சியாளர், மாபெரும் தலைவர். உண்ணாமல், உறங்காமல் தமிழர்களுக்காகப் போராடியவர். கையை தலையணையாய் வைத்து அவர் உறங்கிய காலங்கள் அதிகம். உண்ணாமல் இருந்த காலங்கள் அதிகம். அதே வேளை அவருடைய போராட்ட வாழ்வில் அவர் மனநிறைவாய் ரசித்து ருசித்து உண்ட நாட்களும் நிச்சயம் இருந்திருக்கும்.

ஆனால் வரலாற்றில் எதைப் பதியப் போகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி. கொளத்தூர் மணி அண்ணன் சொன்னது போன்று, தட்டை கையில் ஏந்தி உண்கின்ற ஒருவராக தலைவர் பிரபாகரனை எதிர்கால சந்ததியினர் படிக்க வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவர்களின் விருப்பமாக இருக்கிறது.

- எழுத்தாளர் வி.சபேசன்

Pin It