ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கிடையே கழக செயல்பாடுகள்
2020ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் கொரானா பாதிப்புகளால் மக்கள் கூடுகை தடை செய்யப்பட்ட சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் சந்திப்பு இயக்கங்களையும் கருத்தரங்குகள் - பொதுக் கூட்டங்களையும் ஏனைய இயக்கங்களைபோல் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
அவ்வப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட நிலையில் கழக நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனாலும் இணையம் வழியாகக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கூட்டமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் கழகம் தனியாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.
கொரானா மோசமான நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையானதால் அச்சகங்கள் இயங்காத நிலையில் 2021, மே 6ஆம் தேதி முதல், ஜூலை 1, 2021 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏழு இதழ்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் தடைபட்டு நிற்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கழகம் தனது இயக்கத்தை இயன்ற அளவு முனைப்புடன் முன்னெடுத்தது. அந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு:
ஜனவரி : யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலைக்குள்ளான தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களை சிங்கள இராணுவம் இடித்து தரைமட்ட மாக்கியதைக் கண்டித்து, 2011 ஜன.11இல் திராவிடர் விடுதலைக் கழகம், சென்னை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டனத்தைப் பதிவு செய்தது. இது அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற போராட்டம்.
கரூரில் முடிதிருத்தும் சமூகத்தைச் சார்ந்த ஹரிகரன், வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து ஜாதி ஆணவக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையிலும் (ஜன. 12), கரூரிலும் (ஜன.21) திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
பெரியாரை, அண்ணா முதன்முதலாக சந்தித்தத் திருப்பூரில் அதன் வரலாற்று நினைவாக பெரியார், அண்ணா சிலைகள் ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தலைக் காரணம் காட்டி, அந்த சிலைகளை துணி போட்டு மூடி வைத்தது காவல் துறை. அதை அகற்றக் கோரி காவல்துறையிடம் திருப்பூர் மாவட்டக் கழகம் மனு அளித்தது.
பிப்ரவரி : மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் பிப்.6, 7 தேதிகளில் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம் புதிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டது. அரியலூரில் (பிப்.20) கழக சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ‘ஊபா’ என்ற ஒடுக்குமுறை - ஆள்தூக்கி சட்டத்தை நீக்கக் கோரி சென்னையில் தமிழ்த் தேசிய முன்னணி ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது.
மார்ச் : மார்ச் 6ஆம் தேதி திருச்சியில் கழகத்தின் செயலவை கூடி, சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியை ஆதரிக்க ஒரு மனதாக முடிவு செய்தது.
ஈழத் தமிழர் இன அழிப்புத் தடுப்பு சர்வதேச மய்யத்தின் சார்பில் இலண்டனில் அம்பிகை செல்வக்குமரன் என்ற பெண், அய்.நா. சபைக்கு 5 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஈழத்தில் இனப் படுகொலை செய்து முடித்த இலங்கை அரசு மீது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. கோரிக்கையை ஆதரித்தும் அம்பிகை அம்மையார் உயிர் காக்கக் கோரியும் சென்னை, ஈரோட்டில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் (முறையே மார்ச் 12, 13) கழகம் பங்கேற்றது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு, ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பொள்ளாச்சியில் கழக சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது (மார்ச் 14). பல்லடத்தில் அன்னை மணியம்மையார் நினைவு கருத்தரங்கு கழக சார்பில் நடத்தப்பட்டது (மார்ச் 25), இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை கழகத் தோழர் பாரூக், நினைவு நாளில் மத அடிப்படைவாத எதிர்ப்புக் கருத்தரங்கு கழக சார்பில் நடத்தப்பட்டது (மார்ச் 21).
ஏப்ரல் : மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி நிறுவனரும் முதுபெரும் பொரியாரிஸ்டுமான வே. ஆனைமுத்து முடிவெய்தினார் (ஏப்.6). முதல் இரங்கல் கூட்டத்தை அடுத்த மூன்று நாட்களிலேயே சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையத்தில் படத்திறப்புடன் கழகம் நடத்தியது (ஏப்.10). பொள்ளாச்சி, ஈரோட்டிலும், படத்திறப்பு நிகழ்வுகளை கழகம் நடத்தியது (ஏப்.13).
சென்னையில் மிக முக்கிய நீண்ட சாலையான பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே உள்ள பெயர்ப் பலகையிலிருந்து ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் துறை திடீர் என்று அகற்றி கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் சாலை என்று முன்னறிவிப்பு ஏதுமின்றி மாற்றியது. பிரதமர் மோடி அந்த சாலை வழியே தமிழ்நாட்டில் பயணம் செய்கிறார் என்பதால் இந்தத் திடீர் மாற்றத்தை பார்ப்பனிய அதிகாரவர்க்கம் செய்தது. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நேரே பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப் பலகையின் புதிய பெயரை தார்பூசி அழித்தனர்.
மே : சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு பார்ப்பனர்கூட வெற்றி பெற முடியவில்லை. பார்ப்பனரே இல்லாத சட்டமன்றம் தமிழ்நாட்டில் அமைந்தது. மு.க. ஸ்டாலின் முதல்வரானார்.
கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் மே 16 முதல் 26 வரை இணையம் வழியாக தொடர் கருத்தரங்குகளை நடத்தியது.
(மே 6 முதல் ஜலை 1 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வெளி வர முடியாமல் தடைபட்டு நின்றுவிட்டது)
ஜூலை : கழக தலைமைக் குழுக் கூட்டம் இணைய வழியாகக் கூடியது (ஜூலை 26). பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவது என தீர்மானித்தது.
தலைமைக் குழு உறுப்பினரும் கழகத்தின் ஆற்றல் மிக்க செயல் வீரருமான மடத்துக்குளம் மோகன், கொரானா பாதிப்புக்குள்ளாகி முடிவெய்தினார் (ஜூலை 1). கழகம் மிகப் பெரும் இழப்பை சந்தித்தது.
ஜாதிப் பாகுபாடு, தீண்டாமை வெறியுடன் தொடர்ந்து செயல்படும் சென்னை அய்.அய்.டி.யைக் கண்டித்து வளாகத்துக்கு அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கெடுத்தது. தீண்டாமை எதிர்ப்பு முன்னணி இதற்கு ஏற்பாடு செய்தது.
மாட்டுக் கறி விற்பனைக்கு தடை போட்ட அவிநாசி வட்டாட்சியரைக் கண்டித்து, அவிநாசியில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது (ஜூலை, 26).
தமிழ்ப் புலி கட்சிப் பொறுப்பாளர் கம்பம் திருநாவுக்கரசு, போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது (ஜூலை 21).
நீட் தேர்வு பாதிப்பு குறித்து தி.மு.க. ஆட்சி நியமித்த ஏ.கே. ராஜன் குழு நியமனத்தை இரத்து செய்யக் கோரி, தமிழக பா.ஜ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகம் எதிர் மனுதாரராக தன்னையும் இணைத்துக் கொண்டது (ஜூலை 9).
பீம் கொரேகான் வழக்கில் பல மாதங்களுக்குப் பிறகு முறைகேடாக ஒன்றிய அரசால் சேர்க்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைப் போராளி 80 வயதைத் தாண்டிய ஸ்டேன் சுவாமி சிறையிலிருந்தபடியே மரணமடைந்தார். அதைக் கண்டித்தும் ‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்யக் கோரியும் சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது.
காமராசர் பிறந்த நாள் கருத்தரங்கத்தை இணையம் வழியாக தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தியது (ஜூலை 18). ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கழக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆகஸ்டு : தி.மு.க. ஆட்சி அமைந்த 100ஆவது நாளில் சென்னை மயிலாப்பூரில் அனைத்து ஜாதியைச் சார்ந்த 24 பேரை அர்ச்சகராக்கும் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் போல செயல்படுவதைக் கண்டித்து, பல்கலைக்கழக வளாகம் அருகே கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (ஆக.23). திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட ஆக. 12ஆம் நாளையொட்டி இணைய வழி கருத்தரங்கம் கழக சார்பில் நடத்தப்பட்டது (ஆக.12, 2021).
செப்டம்பர் : செப்டம்பர் முதல் தேதி முதல் 16ஆம் தேதி வரை கழக முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் இணைய தள பிரிவு இணைந்து இணையம் வழியாக பெரியாரி யலைப் பரப்பும் நூல்கள் சிந்தனைகளை முன் வைத்து தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
பெரியார் பிறந்த நாளான செப்.17ஆம் தேதி, ‘சமூக நீதி’ நாளாக அரசு சார்பில் அனைத்து அலுவலகங் களிலும் கொண்டாடப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தார் (செப்.6).
சேலம் காவலாண்டியூர் கழகத் தோழர்களிடம் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதி-செல்வன் இணையர் பாதுகாப்பு தேடி வந்தபோது மணமகள் வீட்டைச் சார்ந்தவர்களும் பா.ம.க. வினரும் கழகத் தோழர்களைத் தாக்கி, மணமகளை மீட்டுச் சென்றனர். கழக முயற்சியால் ஜாதி வெறியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப் பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, மணமகள் காவல்நிலையம் வந்து தான் கடத்தப்பட்டதைக் கூறினார். மாவட்டக் காவல்துறை அதிகாரி முழு ஒத்துழைப்புடன் இணையர்கள் மீண்டும் இணைந்தனர். கழகத் தோழர்கள் மணமக்களை மேட்டூர் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா பொதுக் கூட்டத்தையும் நடத்தினர். கொரனா ஊரடங்குக்குப் பிறகு நீண்டகால இடைவெளியில் மேட்டூரில் நடந்த முதல் பொதுக் கூட்டமும் இதுவே (செப். 23).
ஈரோடு தெற்கு மாவட்ட கழகத் தோழர்கள் குடும்பங்களைத் தேடிச் சென்று சந்தித்து உரை யாடும் குடும்ப சந்திப்புகளை நடத்தினர் (செப். 29).
நவம்பர் : தலைமைக் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்டம் தோறும் சென்று மூன்று கட்டப் பயணமாக கழகத் தோழர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த கருத்துகளைக் கேட்டனர். மதுரை, காரைக்குடி, பேராவூரணி, மயிலாடுதுறை, கருவேப்பிலங்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மடத்துக்குளம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்செங்கோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பள்ளிகொண்டா, சங்கராபுரம், அரியலூர், சிவகங்கை, கும்பகோணம், பழனி, மேட்டூர் உள்ளிட்ட பல ஊர்களில் இந்த சந்திப்புகள் நடந்தன.
சூர்யா தயாரித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த ஜாதி வெறியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறையில் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
1957, நவம்பர் 26, அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை பெரியார் ஆணைப்படி எரித்து கழகத் தோழர்கள் சிறைச் சென்றனர். 6 மாதம் முதல் 2 ஆண்ட வரை சிறைத் தண்டனை ஏற்றனர். 20 பேர் மரணமடைந்தனர். அந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர். சென்னை, கள்ளக்குறிச்சி, மேட்டூர், கோவை திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் தோழர்கள் உறுதி ஏற்றனர்.
நவம்பர் 27 அன்று தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்கள் நினைவு நாள் ஆகும். ஆண்டுதோறும் புலிகள் இராணுவப் பயிற்சி பெற்ற கொளத்தூர் அருகே உள்ள புலியூரில் ‘மாவீரர்’ நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மாவீரர் நாள் நினைவு போற்றப்பட்டது. ஈழ விடுதலையில் திராவிடர் இயக்கத்தின் பங்கு என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய நூலும் வெளியிடப்பட்டது (நவம். 27).
டிசம்பர் : பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று 2001லிருந்து 2020 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்கங்கள் 4 தொகுப்புகளாகவும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் எழுதிய நய்யாண்டி (Satire) எழுத்துகள் ஒரு தொகுப்பாக 1600 பக்கங்களில் சென்னையில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்