கடந்த அக்டோபரில் இந்து மதவெறி போராசிரியரின் ஜாதி, மத வெறுப்பு துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு 21.11.2017 காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜோயல் பிரகாஷ் தாய் மற்றும் தந்தை தன் மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு கண்ணீர் மல்க செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள்.
பிரகாஷ் தற்கொலைக்குக் காரணமான கவின் கலைக் கல்லூரி துறைத் தலைவர் இரவிக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு தொடர வேண்டும் என்றும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சத்தியராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினர்.
நிகழ்வில் ஜோயல் பிரகாஷ் பெற்றோர் தங்கள் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பேசியது பார்வையாளர் உள்ளத்தைக் குலுக்கியது. ஜோயல் பிரகாஷின் அற்புதமான ஓவிய படைப்புகளை கல்லூரி மாணவர்கள் கரங்களில் ஏந்தி ஜோயல் பிரகாஷ் உருவத்தை தங்களது முகத்தில் அணிந்து நின்றனர். ஓவியப் படைப்புகளைப் பார்த்த அனைவரும் இவ்வளவு அற்புதமான கலைஞரை மதவெறியர்கள் பழி தீர்த்திருக்கிறார்களே என்று உள்ளம் குமுறினார்கள்.
திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், இயக்குநர் கவுதமன், மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன், காந்தி, சேவ் தமிழ் இயக்கத்தைச் சார்ந்த செந்தில் மற்றும் தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். மாலை 6 மணி வரை பிரகாஷின் ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஜோயல் பிரகாஷ் தற்கொலைக்கு முன் ‘வாட்ஸ்-அப்’ வழியாக பேசியது ஒளிபரப்பப்பட்டது. நவம்பர் 29 அன்று பிரகாஷ் சாவுக்கு காரணமான மதவெறி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், வேல் முருகன் உள்ளிட்ட அனைத்து இயக்க கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.