மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே வட்டாரத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1ல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா பார்ப்பனர் படையை முறியடித்தனர். தலித் பிரிவைச் சார்ந்த மகர் வீரர்கள், கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைந்து போரிட்டனர். அந்த வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனிலிருந்து வந்த வணிக நிறுவனம் பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, கம்பெனியின் கீழிருந்த பகுதிகளைத் தன் வசம் எடுத்துக் கொண்டது.

பேஷ்வா ஆட்சி என்பது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த மன்னராட்சி. அவர்களது படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் (தலித்) சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740ல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு உள்ளேயும் படைப்பிரிவுகளிலும் மஹர் மக்கள் பல்வேறு அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்திக்கத் தொடங்கினார்கள்.கொடூரமான ஜாதிய ஒடுக்குமுறைகள் தடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்த பேஷ்வா பார்ப்பன மன்னர்கள் தங்களுக்கிடையே கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றப் போர்களில் ஈடுபட்டு வந்தார்கள்.

கம்பெனி நிர்வாகம் அவர்களுக்கு கான்ஃபெடரசி (சட்டவிரோத நோக்கங்களுக்கான கூட்டமைப்பு) என்று பெயரிட்டிருந்தது. அவற்றில் ஒன்றுதான் பேஷ்வா கான்ஃபெடரசி. அதன் தலைமையில் இருந்தவர் இரண்டாம் பாஜி ராவ்.கம்பெனி படைகளை முறியடித்து விரட்டும் போரில்தாங்களும் இணைய விரும்பி, பேஷ்வா படையில் தங்களைச் சேர்த்துக் கொள்ளக் கோரினார்கள் மஹர் இளைஞர்கள். ஆனால், சாதிய ஆதிக்கப் புத்தியோடும் மமதையோடும் எங்களோடு சேர்ந்து போரிட உங்களுக்கு தகுதியில்லை என்று கூறி, மகர் வீரர்கள் நின்ற இடம் தீட்டாகிவிட்டது என்று அவமதித்து தீட்டுக் கழிப்பு சடங்குகளை செய்தான் பேஷ்வா பார்ப்பன மன்னன். மகர்கள் அவமதிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டார்கள். அதனால் ஏற்பட்ட மனக் கொந்தளிப்போடுதான் அவர்கள் கம்பெனிப் படையை நாடினார்கள். நிர்வாகம் உடனே அவர்களைப் படையில் சேர்த்துக் கொண்டது. இரண்டாம் பாஜி ராவின் பேஷ்வா பார்ப்பனப் படையில் அப்போது சுமார் 28,000 பேர் இருந்தார்கள். 12 அதிகாரிகளுடன் இருந்த கம்பெனியின் படையிலோ, காலாட்படையினர் 834பேர்தான்.

அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் மஹர்கள்.அந்தச் சிறிய படைதான் பேஷ்வா பார்ப்பனரின் பெரும்படையை வீழ்த்தி, கோரிகான் கிராமத்தை மீட்டது. 1927 ஜனவரி 1இல் டாக்டர் அம்பேத்கர் கோரிகாவுனுக்குச் சென்று, பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியில் அங்கு நிறுவப்பட்டிருந்த வெற்றித்தூண் முன்பாக நின்று, மஹர் வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிறகுதான், அதுவரையில் அடிமைப்பட்டவர்களாக மட்டுமே காணப்பட்டவர்களின் மகத்தான வீரமும் தியாகமும் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. 2005இல் பீமா கோரிகாவுன் ரன்ஸ்தம்ப் சேவா சங் (பீகேஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு, இதை நினைவுகூர்ந்து பரப்பிடும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கானோர் கோரிகாவுனில் கூடி அஞ்சலி செலுத்திவிட்டு, தலித் சுயமரியாதையை நிலைநாட்ட உறுதியேற்றுத் திரும்புகிறார்கள். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலித்வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.இருநூறாவது ஆண்டு என்பதையொட்டி இவ்வாண்டுஎல்கார் பரிஷத் (போர்க்குரல் விழா) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை சில பார்ப்பன அமைப்புகள் உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அஞ்சலி செலுத்த வந்த மகர்களை தாக்கத் தொடங்கினர்.

பேஷ்வா பார்ப்பனர் இந்துத்துவா சக்திகளை எதிர்த்து  மகாராஷ்டிரம் முழுதும் இலட்சக்கணக்கான மகர், பிற்படுத்தப்பட்டோர் இணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தி, மகாராஷ்டிய ஆட்சியை நிலைகுலையச் செய்துள்ளனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It