கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேசபக்தியை திரையரங்குகள் வழியாகத்தான் ஊட்டி வளர்க்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு உச்சநீதி மன்றம் வந்திருக்கிறது.

இனி திரைப்படம் தொடங்கு வதற்கு முன்பு திரையரங்க கதவுகளை இழுத்து மூடிவிட்டு திரையில் தேசியக் கொடியை காட்டி ‘ஜன கண மன’ பாடலை பாட வேண்டுமாம்! அப்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமாம்!

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்; மது அருந்துவது உடலுக்குக் கேடு தரும் என்ற விளம்பரங்கள் போடுவது கட்டாயப் படுத்தப்பட்டிருந்தது.

இந்த வரிசையில் “ஜன கண மன பாடுவது  தேச பக்தியை வளர்க்கும்; அப்போது எழுந்து நின்றால், கால் வலி, மூட்டு உபாதை நீங்கும்” என்ற விளம்பரத்தையும் சேர்த்துக் கொள்ள லாம்!

இதேபோல் ‘டாஸ்மாக்’ கடைகள் நட்சத்திர ஓட்டல், மதுபான விடுதிகளில் ஜன கண மன’ பாடலை திறக்கும் போதும், மூடும் போதும் ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடுமோ? வேண்டாமய்யா... அங்கே ‘குடிமக்கள்’ எழுந்து நிற்க முடியாத நிலையில்கூட இருப் பார்கள் என்பதை நீதிபதிகள் கவலையோடு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்திலேயே இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந் தார். ஆனால் நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டனராம்.

நீதிபதிகளுக்குத்தான் ஏற்கனவே போதுமான அளவில் ‘தேச பக்தி’ இருக்கிறதே என்று நீதிபதிகள் கருதியிருக்கக் கூடும்.

ஜன கண மன’ பாடலில் தேச ஒற்றுமையின் குறியீடாக ‘சிந்து’ நதி வருகிறது. ஆனால் அந்த நதி நீரை இனி பாகிஸ்தானோடு பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதுபோலவே பாடலில் இடம் பெறும் ‘யமுனை’ நதிநீர் பிரச்சினையிலும் மாநிலங்கள், நாடுகளுக்கிடையே சிக்கல்கள் இருக்கின்றன. தேச ஒற்றுயை வலியுறுத்தும் பாடல் வரி களிலேயே ஒற்றுமை இல்லையே என்று, ஒரு நண்பர் சுட்டிக் காட்டுகிறார்.

கேள்வி நியாயம்தான். இதை யெல்லாம்  கேட்டால் ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

சரி, போகட்டும். கடைசியாக ஒரு யோசனை. தியேட்டர்களில் ‘ஜன கண மன’ பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் இருப்பவர்களை ‘கண்காணித்து’ அவர்கள் மீது தேச விரோத நடவடிக்கை எடுக்க ஒரு கண்காணிப்புக் குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தால் தேச பக்தியை இன்னும் ‘கறாராக’ காப்பாற்ற முடியுமே.

யோசியுங்கள்!

- கோடங்குடி மாரிமுத்து