கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தி நடிகர் சல்மான் குடிபோதையில் வண்டி யோட்டி சாலை ஓரம் சென்ற ஒருவரைக் கொன்றுவிட்டார் என்ற வழக்கில் மும்பை கீழமை நீதிமன்றம் ஐந்தாண்டுக் கடுங்காவல் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர் ஒரு நாள்கூட சிறையில் இல்லாமல் பிணையில் வெளியே வந்துவிட்டார். இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா?

மும்பையில் கீழமை நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. மூன்றாண்டுவரை தண்டனை பெற்றால் அதே நீதிமன்றத் தில் அன்றே பிணை பெற சட்டத்தில் இடமுண்டு. மூன்றாண்டுக்கு மேல் என்னும்போது, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து - உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து மேல் முறையீட்டை ஏற்றால் பிணை கொடுக்கலாம்.

சல்மான்கான் வழக்கில் 5 ஆண்டுத் தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் இரண்டு நாள் பிணை கொடுத்தது. கீழமை நீதிமன்றத் தின் தீர்ப்பு நகல் இல்லாமலேயே உயர் நீதிமன்றம் சல்மான்கானின் மேல் முறையீட்டை ஏற்று பிணை வழங்கியது. கீழமை நீதிமன்றம் இரண்டு நாள் பிணை கொடுத்த நகலை வைத்துக் கொண்டு உயர் நீதிமன்றம் மேல் முறையீட்டை ஏற்றுப் பிணை வழங்கியது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போற்றத்தக்க பொன் மொழியே தவிர, கட்டாயம் கடைபிடிக்கப்படும் நடைமுறை அன்று!

வல்லான் முன் சட்டம் வளையும்; இல்லான் முன் சட்டம் எகிறும்! மானம் பெரிதென மதிக்கும் நீதிபதிகள் வல்லான் முன்னும் மானமிழக்காமல் இருப்பார் கள். இப்படிப்பட்டவர்கள் அரிதாகவே இருக்கி றார்கள்.

பேரறிவாளன், நளினி உட்பட ஏழுபேர் 24 ஆண்டுகளாக பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் கிடக்கிறார்கள். இவர்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்தும் வெளியே வரவிடாமல் தில்லி ஏகாதிபத்தியம் அடைத்து வைத்துள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை, தில்லியால் நீதி மறுக்கப்படுவதற்குத் தமிழர் களாய்ப் பிறந்த “குற்றமே” போதும்!

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளதாகவும், 17.05. 2015 அன்று சென்னையில் முதல் கிளையின் உறுப்பி னர் சேர்ப்பு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தெலுங்கு தேசம் கட்சி என்பது தெலுங்கு தேசத்திற் குரிய கட்சி. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே உரியது. அதனால் தான் அப்பெயர் அக்கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அக்கட்சி கிளை தொடங்கினால் தமிழ்நாட் டையும் தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியாகச் சந்திர பாபு நாயுடு கருதுகிறார் என்று பொருளாகும். அதே போல், இங்குள்ள சிலரும் அக்கட்சியில் சேர்ந்தால் தமிழ்நாட்டைத் தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியாக மாற்றிட முனைகிறார்கள் என்று பொருள். இது பிறந்த மண்ணுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அனைத்திந்தியக் கட்சிகளாக அமைக்கப்பட்டவை. அதற்கான விதிமுறைகள் அக்கட்சிகளுக்கு உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் முதலிய ஐந்து மாநிலங்குரிய கட்சி. அ.இ.அ.தி.மு.க. அனைத் திந்தியாவுக்குரிய திராவிடக் கட்சி! ஆனால், தெலுங்கு தேசம் தெலுங்கு தேசத்திற்கு மட்டுமே உரியது.

தமிழ்நாட்டில் தமிழர், தெலுங்கர் என்ற இனப் பிளவுகளை உருவாக்கத்தான் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசத்தை இங்கு தொடங்கப் போகிறார் என்று ஊகிக்க முடிகிறது. அண்மையில்தான் சந்திர பாபு நாயுடு இருபது தமிழர்களை சுட்டுக் கொல்ல ஆணையிட்டார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுவிட்ட தெலுங்கு பேசும் மக்கள், அயலார் அல்லர். தமிழ்த் தேசிய மக்களே! அண்மைக் காலங்களில், ஆந்திராவி லிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள தொழில் - வணிகம் - திரைத்துறை ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத் தும் தெலுங்கர்கள் தங்களுக்கான அரசியல் அமைப்பை தமிழ்நாட்டில் நிறுவ முயலுகிறார்கள். இத் தன்னல ஆற்றல்களின் வலையில், தெலுங்கு பேசும் தமிழக மக்கள் விழக் கூடாது.

பா.ச.க. தலைவர் அமீத்ஷா வங்காள தேசத்திலிருந்து இந்துக்கள் இந்தியா வந்தால், அவர்களை ஏற்று இந்தியக் குடிமக்களாக்குவோம் என்று கூறியுள்ளார். இது சரியா?

1947 இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்து - முஸ்லீம்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட படு கொலைகளையும் இரத்தக்களரியையும் மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறது பாரதிய சனதாக் கட்சி என்பதே அமீத்ஷாவின் இந்துக்களுக்கான அழைப்பில் பொதிந்துள்ள உண்மையாகும்.

வங்காள தேசத்திலுள்ள இந்துக்கள் இந்தியாவில் குடியேறலாம் என்பதன் மறுபக்கம், இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் வங்காள தேசத்திற்கு வெளியேறலாம் என்பதுதான்! ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. அமைப்பு கள், இரத்த வெறி அமைப்புகள் என்பதற்கு, அமீத் ஷாவின் பேச்சு இன்னொரு சான்றாகும்.

சிங்கள பௌத்த இனவெறியர்களால் இனப்படு கொலை செய்யப்பட்டதால், உயிரைப் பாதுகாக்க தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழீழ மக்களில் பெரும் பாலோர் இந்துக்கள்தாம். இந்தத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க, பா.ச.க. முன்வருமா? இந்துவே ஆனாலும் தமிழ் இந்துவை ஏற்க மாட்டோம் என்று ஆரிய இனப்பகையைத்தான் தொடருமா? பா.ச. க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்.

ஆந்திரப்பிரதேசத்தில் அண்மையில் இருபது தமிழர் கள், அம்மாநிலக் காவல்துறையினரால் இனப்படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழீழ வடக்கு மாகாண அவையில் முதலமைச்சர் விக்னேசுவரன் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறாரே?

தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்ல, இருபது தமிழர் படுகொலை ஈழத்தில் நடந்த இனப்படுகொ லையை நினைவூட்டுகிறது என்று திரு. விக்னேசுவரன் அந்த அவையில் பேசியது, பாராட்டத்தக்கது.

இதற்குமுன், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனை விசாரிக்க பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டு மென் றும் அதே அவையில் விக்னேசுவரன் முன் மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பாராட்டத்தக்க செயல்!

குடியியல் உரிமைகளுக்காகவும், சனநாயக உரிமை களுக்காகவும் தமிழீழ வடக்கு கிழக்கு மாகாண அவை களும் மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய காலமிது!

பிரித்தானியாவில் நடந்த தேர்தல் மீண்டும் பழைமை வாதக் கட்சி ஆட்சிக்கு வாய்ப்பளித்துள்ளது. அதுவும் தனிப்பெரும்பான்மையுடன். இது எந்தப் போக்கைக் காட்டுகிறது?

பிரித்தானியாவுக்குள்ளேயே இத்தேர்தல் முடிவு ஓர் ஒற்றைப் போக்கைக் காட்டவில்லை. ஸ்காட்லாந்தில் உள்ள 59 பகுதிகளில், 56 தொகுதிகளை ஸ்காட்லாந்திய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. தனிநாட்டுக்கானக் கருத்து வாக்கெடுப்பு கடந்த செப்டம்பரில் நடந்த போது, தனிநாட்டுக் கோரிக் கைக்குக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வி ஏற்பட்டது. அதன்பிறகு, தனிநாட்டுக் கோரிக்கை வலு வடைந்துள்ளது என்பதை இம்முடிவு காட்டுகிறது. ஸ்காட்லாந்தில் வழக்கமாகக் கூடுதல் இடங்களைப் பெற்றுவந்த தொழில் கட்சி, படுதோல்வி அடைந் துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருப்பதா வேண்டாமா என்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பழைமைவாதக் கட்சிப் பிரதமர் கேமரூன் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார். தொழில் கட்சியோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாதென்று தேர்தல் பரப்புரையில் கூறியது.

பிரித்தானியரின் தனித்தன்மையையும் தனிச் செல் வாக்கையும் காத்திட ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்து கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஸ்காட் லாந்திலோ பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போகும் கோரிக்கைக் குக் கூடுதல் வலு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இனி ஒருகட்சி ஆட்சிமுறை தேவை யில்லை, கூட்டணி ஆட்சியே தேவை என்று விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்தென்ன?

வரவேற்கத்தக்கக் கருத்து! கலைஞரின் ஆலோசனையின்றி திரு. திருமாவளவன் சொந்தக் கருத்தாகக் கூறியிருந்தால் மேலும் சிறப்பு.

தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து புதுதில்லியிலும் போய், செய்தியாளர்களோடு முண்டா தட்டியுள்ளாரே?

ஸ்டண்ட் நடிகர் அரசியல் தலைவரானதால், பழக்க தோசம் போகவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் செயலலிதா விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பிற்கும் பாரதிய சனதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று எச். இராசா கூறியுள்ளாரே?

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதான்!

எல்லா நீதிமன்றத்திற்கும் மேலான நீதிமன்றம் மனச் சாட்சி தான் என்று கலைஞர் கருணாநிதி கூறியுள் ளாரே?

கூட்டணிக் கட்சிகளுக்குப் போதிய தொகுதி ஒதுக் காதபோது, என் இதயத்தில் இடமிருக்கிறது என்று கருணாநிதி சொல்வார். அதுபோல்தான், இப்பொழுது மனச்சாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மனச்சாட்சி நீதிமன்றம் 2ஜி வழக்குத் தீர்ப்புவரை நீடித்தால் நல்லது.