அனைவருக்கும் கல்வி/சமச்சீர் கல்வி குறித்து ஒருபுறம் தீவிரமாகப் பேசப்படுவதும் மறுபுறம் அவை கேலிக்கூத்தாக்கப் படுவதுமான இன்றைய சூழலில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, எவ்வாறான கொள்கைகளைப் பின்பற்றுவதன்வழி அதை நடைமுறைப்படுத்த முடியும் என்பது பற்றி அக்கறை யோடு பேசிய பெரியார், அம்பேத்கர், காந்தி, தாகூர் ஆகியோரின் சிந்தனைகளை உரையாடலுக்கு உட்படுத்தி அதைப் பொதுமைப் படுத்தவேண்டிய அவசியம் நமக்கு உண்டு.

எதைப்போன்றதொரு கல்வி, அதை எவ்வாறு வழங்கவேண்டும், கல்வி வழங்குகின்ற நிறுவனங்கள் எவ்வாறு கட்டமைக்கப் படவேண்டும் என்பதான கருத்துக்களைத் தாகூர், காந்தி இருவருமே பொதுமைப்படப் பேசியுள்ளனர். என்றாலும் தாய்மொழி வழியிலான கல்வி, தற்சார்புக்கல்வி என்பது இருவரின் கல்வி குறித்த மையச்சிந்தனையாக இருந்துள்ளது. இதே கருத்துடையவர்களாக இருந்தாலும் மேற்குறித்த இருவரின் கருத்திற்கு எதிர்நிலையிலான கருத்துடையவர் களாகப் பெரியாரும் அம்பேத்கரும் இருந்துள்ளனர். எந்த மாதிரியான கல்வி, அது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைப் பற்றியும் இருவரும் பேசியுள்ளனர். இதன்வழி மேற்குறித்த இருவரிலிருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்விபெறும் உரிமை மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் கல்விபெறும் உரிமையைப் பெறவேண்டு மெனில் சமூகத்தில் நிலவிவரும் மூடநம்பிக்கையை ஒழிப்பதன் வழியே அது சாத்தியப்படும் எனப் பெரியார் எண்ணினார். இதனாலேயே பகுத்தறிவுக் கல்வியை அவர் வலியுறுத்தினார். பெண்கள் கல்விபெறும் உரிமை குறித்துப் பேசிய பெரியார் அவர்களுக்குத் தனிக் கல்லூரி தொடங்குவதை வன்மையாகக் கண்டிக்கிறார். பெண்விடுதலையும் அதன்வழி சமூகவிடுதலையும் சாத்தியப்படுவதற்குப் பகுத்தறிவுக் கல்வி மட்டுமே உதவும் என அவர் நம்பினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ஆட்சி அதிகாரத்திற்கான ஒரு தேவையாக இந்தியாவில் கல்விநிறுவனங்களை உருவாக்கினர். அவ்வாறு 1815இல் பம்பாயில் ‘பம்பாய் கல்விக் கழகம்’ நிறுவப்பட்டது. அதில் ஐரோப்பிய குழந்தைகளுடன் சுதேசிய அதாவது இந்திய குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவற்றிலும் பின்னர் உருவாக்கப்பட்ட சுதேசிகளுக்கான பள்ளிக்கூடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கல்விநிலையை விரிவான பட்டியலில் விவரித்துப் பேசி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விபெறும் உரிமையை அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.

உடல் உழைப்போடு கூடிய கல்வி, கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி, மாணவனின் சூழலை விட்டு விலகித் தனித்துப் போகாத கல்வி முதலானவை காந்தி வற்புறுத்திய கல்விமுறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி குறித்தும், மத நம்பிக்கையற்ற கல்விமுறை குறித்தும் அம்பேத்கரும், பெரியாரும் பேசிய சமகாலத்தில் காந்தியின் மேற்குறித்த சிந்தனைகள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய அதே வேளையில் தனித்து அடையாளப் படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசி வந்த காந்தியடிகள், அதற்கு இந்தி மொழியைத் தேசிய பொதுமொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

தாகூர் ஆங்கிலக் கல்வியை எதிர்த்துத் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தியதற்கு அறிவார்ந்த காரணங்கள் அவரிடம் இருந்துள்ளன. குறிப்பிட்ட நடுத்தட்டு மக்கள் மட்டும் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதன்வழி அக்கல்விமுறை வெகுமக்களை அந்நியப்படுத்தும் என்பது தாகூரின் எண்ணமாக இருந்துள்ளது. இதன்வழி தேச மக்களிடத்து முரண்பாடுகள் உருவாகிப் பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். அது தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என அவர் எண்ணியுள்ளார்.

ஆக, மேற்குறித்த நால்வரின் சிந்தனைகளும் ஒன்றின் எதிர்குரலாக உருவானவை. பிரிட்டிஷாரின் அதிகாரத்திற்கும் ஆங்கில மொழிக் கல்விக்கும் எதிர்குரலாகக் காந்தி, தாகூர் இருவரின் கல்விச் சிந்தனைகளும் உயர் சாதியினரின் அதிகாரக் கட்டமைப்பிற்கும் உரிமை மறுப்புக்கும் எதிர்குரலாக அம்பேத்கரின் சிந்தனைகளும் உருவானவை. மூடநம்பிக்கையை உருவாக்குகின்ற மதத்திற்கு எதிர்குரலாகப் பெரியாரின் சிந்தனைகள் உருவானவை. இந்த எதிர்குரல்கள் அனைத்தும் இந்திய சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எழுந்தவையாகும். ஆக, தொடர்ச்சியாகச் சமூகத்தில் நிலவியிருந்த சாதிய ஒடுக்குமுறைகள், உரிமை மறுப்புகள் முதலானவற்றிற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த இந்த எதிர்குரல்களின்வழி கேள்விக்குள்ளாக்கப்பட்ட வரலாறும் அதில் பதிவாகியுள்ளதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

- இரா.வெங்கடேசன்

Pin It