கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப் பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும்.Modi and Amit Shahமுதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்பட்டது கிடையாது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதே கிடையாது. முக்கியமான கேள்வி நேரம் நடக்கின்ற அந்த நேரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்ததே கிடையாது. எந்த விவாதத்திலும் அவர் தலையிட்டு பேசுவதும் கிடையாது. பட்ஜெட் விவாதமாக இருந்தாலும் சரி குளிர்கால கூட்டத்தொடராக இருந்தாலும் சரி; அவர் ஆற்றும் கடைசி உரை கூட்டங்களிலே பேசுகிற பிரச்சார உரையாக தான் இருந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, ஒரு கூட்டத்தில் மோடி என்ற பெயரை கொண்டிருப்பவர்கள் நாட்டைத் திருடுகிறார்கள் என்றார். மோடி என்ற பட்டம் எல்லா ஜாதியிலும் உண்டு, ஆனால் ஒரு ஜாதியை இழிவுபடுத்தியதாக அவதூறு வழக்கு ஒரு பாஜகவினரால் குஜராத்தில் தொடரப்பட்டது. அந்த அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக இரண்டு வருடம் சூரத் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நாடாளுமன்றப் பதவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

கிரிமினல் சட்டம் அமலாகிய கடந்த 165 ஆண்டு கால வரலாற்றில் இந்த சட்டத்தின் கீழ் இரண்டு வருட தண்டனை வழங்கப்பட்டது என்பது இதுதான் முதல் முறை. பிறகு உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இது மிக மோசமான ஒரு நடவடிக்கை என்று கூறியதற்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தார். எந்த விவாதங்களும் நடப்பதற்கு அனுமதிக்காத நாடாளுமன்றத்தில் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக விவாதங்கள் இன்றியே 40 மசோதாக்கள், 50 மசோதாக்கள் என்று இவர்கள் மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றி விடுகிறார்கள். எந்த விவாதமும் அங்கே கிடையாது. விவசாயிகள் சட்டம் பத்தே நிமிடத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருடத்திற்கு மேல் போராடினார்கள். 700 பேர் போராட்டத்தில் உயிர் பலியானார்கள். பஞ்சாபில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சீக்கியர்கள் வாக்கு வங்கி பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக பத்தே நிமிடத்தில் அந்த சட்டம் விவாதங்கள் இன்றி திரும்பப் பெறப்பட்டது. இப்படி ஏராளமாக பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

அரசியல் சட்டம் மாற்றப்படும்?

அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு இவர்கள் தயாராகி விட்டார்கள் என்பதற்கு சான்றாக ஒரு செய்தியை நாம் குறிப்பிட முடியும். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கிற பிவேக் டம்ராய், ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். ‘மின்ட்’ இணையதளத்தில் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் என்பது பிரிட்டிஷ்காரர்கள் கொண்டு வந்த காலனிய அரசியல் சட்டம். அது காலாவதியாகிப்போன சட்டம். அந்த சட்டத்தை இனியும் வைத்துக் கொண்டிருக்க முடியாது, அது திருத்தப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். எதில் எல்லாம் திருத்தம் வரப்போகிறது என்பதையும் அவர் கூறியிருக்கிறார். நீதிபதிகளின் நியமனங்களில், நீதிமன்றங்களின் அதிகார வரம்புகளில், தேர்தல் சட்டங்களில், மாநிலங்களவையில் மாற்றம் செய்வதில் திருத்தங்கள் வரப்போகின்றன. மாநிலங்களின் எல்லைகளும் மாற்றியமைக்கப்பட இருக்கின்றன என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

மாநிலங்கள் எல்லைகள் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது என்பதில் தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்கும் முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டு எதிர்ப்புகள் பலமாக இருந்ததால் பின்வாங்கினார்கள். மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பல கூறுகளாக பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அடையாளத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதற்கான ஆபத்துகள் இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்றங்களில் தலையீடு

நாடாளுமன்றத்தை இப்படி சீர்குலைத்தவர்கள், நீதிமன்றங்களையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொலிஜியம் என்கிற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறது. கொலிஜியம் என்ற அமைப்புக்கு இந்த உரிமை கிடையாது அமைச்சரவை தான் இதை முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், இப்போது கொலிஜியம் தேர்வு செய்கிற நீதிபதிகளின் பட்டியலுக்கு ஒன்றிய ஆட்சி ஒப்புதல் தர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒன்றிய ஆட்சியில் இருந்து முன்னாள் ஆர் எஸ் எஸ் காரர்கள், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர்கள், நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் பல மாநிலங்களில் அவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். கல்கத்தாவில் நீதிபதியாக இருந்த ஒருவர் நீதிபதி பதவியை விட்டு விலகி அடுத்த நாளே பாஜகவில் சேர்ந்து இப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

சனாதன எதிர்ப்பு பேசினாலே அது அரசியல் சட்டத்திற்கு விரோதம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பேசினார் என்பதற்காக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பல்வேறு மாநிலங்களில் இந்த வழக்குக்காக அவரை அலைக்கழிக்க வேண்டும் என்று முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வழக்கை ஏற்று சென்னையிலே விசாரித்த அனிதா சுமந்த் என்ற பெண் நீதிபதி, சனாதன எதிர்ப்பு பேசுவதே சட்டத்திற்கு எதிரானது என்று கூறுகிறார். இவர் கேரளாவில் நடந்த உலக ‘பிராமண’ மாநாட்டில் பங்கேற்றுப் பேசியவர்.

அரசியல் சட்டம் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறுகிறது. சனாதன தர்மம் சமூகத்தை வர்ண அடிப்படையில் கூறு போட்டு ஏற்றத்தாழ்வான ‘படிக்கட்டு’ சமூக அமைப்பை பேசுகிறது. ஆனால் இந்த நீதிபதி சனாதனம் என்பது அதுவல்ல என்று சொல்லி, அது ஒரு வாழ்க்கை நெறி என்று அதற்கு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் விட அதை எதிர்த்து பேசுவதே சட்டத்துக்கு விரோதம் என்று சொல்லுகின்ற அளவுக்கு நீதிமன்றம் இன்று அவர்களுடைய பிடியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

 உச்ச நீதிமன்றத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு சில நீதிபதிகள் இருக்கின்ற காரணத்தினால் தான், இன்றைக்கு நாடு பல்வேறு பிரச்சனைகளில் காப்பாற்றப்படுகிறது.

ராமராஜ்யத்துக்கு அரசியல் சட்டமே கூடாது –- சங்கராச்சாரி கூறுகிறார்!

அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, அது ராமராஜ்ஜியத்துக்கு எதிரானது என்றார் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

“ராமராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களின் வாரிசுகள் ஜனநாயகம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து (அதாவது சட்டங்களை உருவாக்கி) ராஜ்ய பாரம் நடத்தவில்லை தன் அபிப்பிராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து அப்படியே பண்ணினவர் ஒருவர் உண்டு என்றால் அது ராமச்சந்திர மூர்த்தி தான். மநு தர்மத்தை காலம் முதலாக தசரத சக்கரவர்த்தி வரை எந்த தர்ம சாஸ்திர ஆட்சி நடந்ததோ அதையே தான் ராமரும் நடத்திக்காட்டினார் என்று சங்கராச்சாரி கூறியதோடு பாமர மக்களுக்கு உரிமைகளை வழங்கினால் மோசடிகள் – ஏமாற்றுகள் தொடங்கி விடும் என்றார். இது குறித்து அவர் கூறியது.

“ஏராளமான பாமர ஜனங்களை நேராக ராஜ்ய விசயங்களில் கொண்டுவருவதில் அநேக தப்புத்தண்டாக்கள், ஏமாற்று மோசடிகள் நடந்து விடலாம் என்ற கருத்தை அலட்சியம் செய்வதற்கு இல்லை. (தெய்வத்தின் குரல் 4ஆம் பகுதி)

ராமராஜ்யம் என்ற பார்ப்பனிய ஆட்சிக்கு அரசியல் சட்டங்களே கூடாது. மனு உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்களே சட்டங்கள் என்ற சங்கராச்சாரி கருத்தைத்தான் பாஜக ஆட்சி ஏற்று அரசியல் சட்டங்களின் உள்ளடக்கங்களை சீர்குலைத்து வருகிறது.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

Pin It