கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது.

வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். 

இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது.

பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற நிறைவு மாநாட்டின் தீர்மானத்தில்  காமராசர் நினைவு நாளான அக்.2 இல் புதிய கல்விக் கொள்கை நகல்களை கிழிக்கும் போராட்ட அறிவிப்பு வெளியானது. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் புதிய கல்விக் கொள்கை நகல்கள் கழகத் தோழர்களால் கிழிக்கப்பட்டது. தோழர்கள் கைதானார்கள்.

இந்நிலையில், தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலக் கல்வியை அவசர அவசரமாக மக்கள் கருத்துக்களை கேட்காமல், மக்களவையில் விவாதத்திற்குட் படுத்தாமலும், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கடந்த ஜூலை 29 ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கொரானா காலத்திலும் கழகம் இந்த அறிவிப்பை எதிர்த்து -

புதிய கல்விக் கொள்கையை - தமிழக அரசே!  நடைமுறைப் படுத்தாதே!

நமக்கான கொள்கையை நாமே வகுத்துக் கொள்வோம்!

என்ற முழக்கங்களுடன் ஆக. 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஜூலை 31ஆம் தேதி அறிவித்தார்.

03.08.2020 அன்று, ஈரோடு வடக்கு மாவட்டம், சேலம் மாநகரம்,  ஆத்தூர், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், இராசிபுரம், மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, கோவை மாநகரம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி நயினார் பாளையம், குடியாத்தம், பழனி, மேட்டூர், திருப்பூர் மாநகரம், மயிலாடுதுறை, ஈரோடு தெற்கு, அன்னூர், தர்மபுரி பென்னாகரம் ஆகிய பகுதிகளிலும். 04.08.2020 அன்று மதுரை, 05.08.2020 அன்று சென்னையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒத்த கருத்துடைய இயக்கங்களும் கலந்து கொண்டன. முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளியுடன் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாடாக நடந்தன.

தமிழக அரசு 03.08.2020 அன்று, தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழியை நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்படுவது பற்றி மக்கள் கருத்து கேட்ட பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

- பெரியார் முழக்கம்