amit shah and modi 2இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, ஆர்.எஸ்.எஸ். -இன் “இந்து ராஷ்ட்ரம்” என்னும் பார்ப்பனக் கும்பலின் மேலாதிக்கக் கனவை நனவாக்கும் பல முயற்சிகளுள் ஒன்று தான் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவுத் திட்டமாகும். இரண்டாவது முறையாக மிருக பலத்துடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் மோடி அரசு இதில் காட்டும் தீவிரத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும்,

பார்ப்பன மேலாதிக்கத்தை உருவாக்க இந்திய தேசிய இனங்களின் மீது தொடர் தாக்குதல்களை இந்த அரசு அன்றாடம் புதிய புதிய திசைகளில், புதிய புதிய வழிகளில் தொடுத்து வருகிறது.

ஒரே தேசம், ஒரே தேர்தல்; ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை; ஒரே தேசம், ஒரே மோட்டார் வாகனச் சட்டம், ஒரே தேசம், ஒரே மின்பகிர்வு; ஒரே தேசம், ஒரே மொழி இந்த வரிசையில் ஒரே தேசம், ஒரே கல்வி என்ற ஆபத்தான முழக்கம் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

மிகவும் நைச்சியமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் சூழ்ச்சி வலையைக் கஸ்தூரி ரங்கன் குழு பின்னியுள்ளது.

“ஒரு நாட்டை அடிமைப்படுத்த வேண்டுமா? அந்நாட்டின் மொழியை அழித்துவிடு” என்றார் இப்பன்ஸ் என்னும் மேனாட்டறிஞர். ஒரு மொழி அழிக்கப்படுமானால் அதனூடே வளர்ந்த கலாசாரமும், பண்பாடும் அழிந்து போய்விடும். அதனால்தான்,

“நைந்தாய் எனில் நைந்துபோகும் என்வாழ்வும் - மற்று

நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே!”

என்று பாடினார் பாவேந்தர்.

ஆனால், தாய்மொழி அழிப்பு, தேசிய இன அடையாள அழிப்பு ஆகிய இரண்டினையும் தேசியக் கல்விக் கொள்கை மிக வெளிப்படையாகவே செய்கிறது.

மெக்காலே கல்வி முறை என்று பேசப்படும் இன்றைய கல்வி முறை வெள்ளையர்களால் இந்தியாவில் 9.2.1835-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது மெக்காலே கூறினார்:

“இக்கல்வி முறையில் பயின்று வரும் இந்தியர்கள் இனி நிறத்தாலும் இரத்தத் தாலும் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள். எண்ணம், செயல் ஆகியவற்றில் அவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள். ஆங்கிலேயர்களாக இருப்பார் கள்”. இன்றளவும் இக்கருத்து பெற்றிருக்கும் வெற்றிக்குத் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகி வரும் புற்றீசல் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளே சாட்சிகளாக உள்ளன.

மெக்கலோவிற்கும் ஒருபடி மேலே சென்று கஸ்தூரி ரெங்கன் குறிப்பிடுகிறார்.

“பன்மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் 15 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆனால் 54 விழுக்காடு மக்கள் இந்தி பேசுகிறார் கள், இந்தியை ஏன் கற்றல் மொழியாகத் தேர்வு செய்யக்கூடாது? வட்டார மொழி களை ஏன் பயன்படுத்தக்கூடாது?” (இயல் 4.5.4) நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று இதில் உள்ளது. இந்தி தேசிய மொழி, தமிழ் உள்ளிட்ட பிறமொழிகள் வட்டார மொழிகள். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி கட்டாயம், வட்டார மொழி என்ற நிலையில் தமிழ் விருப்பப் பாடம்!

ஆங்கிலத்தை நீக்க வேண்டும் என்று குரலெழுப்பும், கஸ்தூரி ரங்கன் குழு சமஸ்கிருதம் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.

“கிரேக்க இலத்தீன் மொழிகளின் இலக் கியங்கள் இரண்டையும் சேர்த்தாலும் வடமொழியில் படைக்கப்பட்ட இலக்கியங் களுக்கு இணையாகாது” (4.5.13).

“வடமொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அறிவியல், கணிதம், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அரசியல், இசை, மொழியியல், நாடகம், கதை கூறுதல், கட்டடக்கலை போன்ற பல்வேறு துறை களைச் சார்ந்த அறிஞர்கள் தங்கள் அறிவை வடமொழியில் வடித்துள்ளனர். அறிவுத் தேடலில் 64 கலைகளின் வளர்ச்சியில் வடமொழி (பிராக்ருதம்) முக்கிய பங்கு வகித்துள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு, அறிவு வளர்ச்சிக்கு உதவிய தனித்த பெருமையைக் கணக்கி லெடுத்து, கலாச்சார ஒற்றுமைக்கு உதவி யதையும் கவனித்து, பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் வடமொழி கற்கவும் அதன் அறிவியல் பூர்வமான அமைப்பை உணரவும் புராதன, தற்கால எழுத்தாளர்கள் (காளிதாசன் மற்றும் பாசா எழுதிய நாடகங்கள்) படைத்த படைப்பு களின் பகுதிகளைப் பயன்படுத்த வாய்ப் பளிக்க வேண்டும்” (4.5.14).

வடமொழியை இத்தனை புகழ்ந்து எழுதும் தேசியக் கல்விக் கொள்கை திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான தமிழ்மொழி பற்றியோ பிறமொழி தேசிய இலக்கியங்கள் குறித்தோ, உலகப் பொது மறையாம் திருக்குறளின் அறநெறி வாழ் விலக்கியம் குறித்தோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

நன்னெறி வகுப்புகளுக்குப் பஞ்சதந்திரக் கதைகளைப் பரிந்துரைக்கும் குழுவினர் “நிஷ்காம கர்மாவை” (பலனை எதிர்பார்க் காமல் உழைப்பது) கற்றுத்தரக் கூறுகின்றனர். பஞ்ச தந்திரக் கதைகள் ஏமாற்றுவது, பொய் சொல்லுதல், பழிவாங்குதல் என்னும் எதிர்மறைக் கூறுகளைக் கொண்டவை. வர்ண சாதித் திமிரை வலியுறுத்துவது நிஷ்காமகர்மா.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பொதுமை நோக்கு படைத்த இனம் தமிழினம்.

“ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருகவென்னாது அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்”.

சான்றாண்மை மிக்க சமூகம் தமிழ்ச் சமூகம்.

சமத்துவத்தை மறுக்கின்ற ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுவாதிகளைக் கொண் டாடும் ஒரு கல்விக் கொள்கை இந்த மண் ணிற்கு, இந்தச் சமுதாயத்திற்கு எப்படிப் பொருந்தும்?

“பாஸ்கராச்சாரியரின் கணித கற்றல் தான்” மகிழ்ச்சியான அனுபவமாக இருக் கும். இதனை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என்ற வள்ளுவப் பெருந்தகையை எந்த இடத்திலும் ஏன் எடுத்தாளவில்லை?

ஆர்.எஸ்.எஸ். சிந்தனை, பிறப்பில் உயர்வு - தாழ்வு கருதும் பேதமை, சமத்துவம் - சனநாயகத்தின் நம்பிக்கையின்மை, சோதிடம், தலைவிதித் தத்துவங்களை நம்பும் கையாலாகாத்தனம், தன் தாய் மொழி அழிப்பு, தன் தேசிய இனத்தின் மீதான அடக்குமுறை இவற்றை உணரும் திறனற்ற அடிமைத்தனம் கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கக் காவிக்கூட்டம் கல்வியின் பெயரால் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது என்பதனை நாம் உணர வேண்டும்.

கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழி களில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்தியும், ஆங்கி லமும் தெரியாத மக்களுக்குப் தேசியக் கல்விக் கொள்கை பற்றித் தெரியவே வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது மைய அரசு.

தகுதி, திறமை என்ற பெயரில் உழைக் கும் மக்களின் கல்வி உரிமையைத் தட்டிப் பறிக்கிறது இந்தக் கல்விக் கொள்கை.

மூன்றாவது வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்பிலும் மற்றொரு பொதுத் தேர்வு எனத் தேர்வுகளை வைத்து, அப்படி வந்தவர்களையும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பிற்குள்ளாக எட்டு பொதுத் தேர்வுகளை நடத்தித் துன் புறுத்த நினைக்கிறது இக்கல்விக் கொள்கை. கல்வி என்னுமொரு கணக்கில்லாத் துயர் நீங்கி வெளிவருபவர்களை நீட்தேர்வுகளை நடத்தி அவர்களின் வாய்ப்புகளைத் தடுக்கும் தீயநோக்கம் இக்கல்விக் கொள்கையில் காணக்கிடக்கிறது.

ஏனெனில் பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் நடத்தப்பெறவிருக்கும் இந்த “நீட் தேர்வு”களை மைய அரசுதான் நடத்தும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரைவு அறிக்கை நிலையிலேயே உள்ள இத் தேர்வுக் கோட்பாடுகளை வரிந்து கட்டிக் கொண்டு பா.ச.க.வின் அடிமை அரசாங்க மாகத் திகழும் தமிழக அரசாங்கம் ஆதரிப்பது மிகவும் வெட்கக்கேடானது. இந்தியாவிலேயே 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்து இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல் என்ற பெயரில் மிஷன் நாளந்தா, மிஷன் தட்சசீலா போன்ற பண்டைய இந்திய பல்கலைக்கழகங்களைப் போல் ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் இக்கல்விக் கொள்கை 2000 ஏக்கர் நிலத்தில் 50 சதவீத அரசு நிதியுதவியுடன் இப்பல்கலைக்கழகங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. தற்சமயம் ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் இல்லாமல் பணிமூப்பு அடிப்படையில் உயர் பதவி பெறுவதனால் மோசமான விளைவுகள் ஏற்படுவதாக இக்கொள்கை வருத்தப்படுகிறது.

மைய அரசின் ராஷ்ட்ரீயா சிக்ஷா அபியான் மற்றும் மிஷின் இயக்குநரகம் (Mission Directorate) ஆகிய மைய அரசின் நிறுவனங்களின் கீழ் இவற்றைச் செயல் படுத்துவதன் மூலம் தகுதி, திறமை மட்டுமே முதலிடம் பெறுமாம். ஆசிரியர்கள் சாணக் கியர், பாணினி, சந்திரகுப்த மௌரியர், ஆரிய பட்டர் போல இருக்க வேண்டுமாம்.

இப்படி பொய், களவு, சூது ஆகிய வற்றைக் கற்பித்த அரசியல் சூதாடிகளை முதன்மைப்படுத்தும் இக்கல்விக் கொள்கை உயர்கல்வி நிறுவனங்களில் “லிபரல் கலைகள்” (Liberal Arts) என்ற பெயரில் ஆய கலைகள் 64-ஐயும், காமசூத்திரம் உள்ளிட்ட 512 கலைகளையும் கற்பிக்கப் போகிறார்களாம். ஒரு பக்கத்தில் 4-ஆவது தொழிற்புரட்சிக்கு மாணவர்களைத் தயாரிப்பது, மறுபுறத்தில் வேத காலத்திற்கு மாணவர்களை இழுத்துச் செல்வது என ஏமாற்றும் தந்திரத்தை தேசியக் கல்விக் கொள்கை கையாள்கிறது.

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் மக்கள் மொழியாகவே இல்லாத சமற்கிருதத்திற்குத் தனிச் சலுகைகள், தனி நிதி ஒதுக்கீடு என கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் வாரியிறைக்கப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்தியை தேசிய மொழி என்று அறிவிக்கும் இக்கல்விக் கொள்கை தமிழை வட்டார மொழி என்றும் வீட்டு மொழி என்றும் சுருக்குகிறது.

கல்வியில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்ற அறிவிப்போடு சமற்கிருதத்தின் மேன்மை பற்றிப் பேசுவதும், இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கென ரூ.50 கோடி ஒதுக்குவதும் நயவஞ்சகமேயன்றி வேறல்ல.

20 குழந்தைகள் மட்டும் கொண்டுள்ள பள்ளியை வைத்துக் கொண்டு கல்வியை எப்படி மேம்படுத்துவது எனக் கேட்கும் கஸ்தூரி ரங்கன் குழு அரசுப் பள்ளிகளை மூடவேண்டுமெனப் பரிந்துரைக்கிறது.

மொத்தத்தில், கல்வி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்க “இராஷ்ட்ரீய ஷிக்ஷா ஆயோக்” என்னும் தேசியக் கல்வி ஆணையம் அதன் தலை வராகப் பிரதமர், பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி. வெளியிடுதல், உயர் கல்விக்கெனத் தேசிய உயர்கல்வி ஒழுங் காற்று ஆணையம் என அனைத்து நிலைகளிலும் மையப்படுத்தப்பட்ட கொள்கை களை இக்கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மாநில உரிமைகளை மறுப்பதன் வாயிலாகத் தேசிய இனங்களை இக்கொள்கை நசுக்குகிறது. அவசர நிலைக் காட்டாட் சியில் பறிக்கப்பட்ட மாநிலக் கல்வி உரிமை, பார்ப்பனப் பாசிச பா.ச.க. அரசால் மேலும் ஒடுக்கப்படுகிறது என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையின் சாரமாக உள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், எல்லா நிலைகளிலும் தமிழை ஆட்சி மொழி-அலுவல் மொழியாக்குதல், அனைத்து வகை பதின்ம மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மூடுதல், தரமான இலவசக் கல்வியை அரசே வழங்குதல் ஆகியன மட்டுமே இன்றைய தேவை. அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து பேராடுவதன் மூலமாகத்தான் இவற்றை வென்றெடுக்க முடியும்.

Pin It