தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, ஒரத்த நாடு, சீர்காழி, கிருஷ்ணகிரி அடுத்த கத்தாளமேடு பெரியார் சிலைகளை ‘சங்கி’கள் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே ‘சங்கி’களின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக பெரியார் சிலை ‘அவமதிப்பை’ வைத்திருக்கிறார்கள்.

இப்படி பெரியார் சிலைகளை அவமதிப்போரை ‘மனநலம்’ பாதித்தவர்கள் என்ற போர்வைக்குள் தமிழக அரசு காவல்துறை காப்பாற்றப் பார்க்கிறது. கொள்கை ரீதியாக அது சரிதான்; ஆனால் உடல்ரீதியாக அது உண்மையா? கிருஷ்ணகிரி அருகே உள்ள ‘சமத்துவபுரத்தில்’ பெரியார் சிலை மீது டயரைக் கொளுத்தி வீசியவர் குடிபோதையில் குளிர்காய டயரைக் கொளுத்தி வீசியபோது அது பெரியார் சிலை மீது விழுந்து விட்டது என்று கூறியிருக்கிறாராம்.

பெரியார் மட்டுமே ‘சங்கி’களை தூங்க விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறார். பெரியாரின் கொள்கை வலிமை எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கத்தாளமேடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டவுடன் பொது மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் சிலர் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் காட்சி அளித்தனர்.

கடவுள் மறுப்பாளரான பெரியாருக்காக - கடவுள், மத நம்பிக்கையுள்ள மக்களும் வீதிக்கு வந்து போராடுவதிலிருந்தே மக்கள் பெரியாரை எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்பதை கொள்கை எதிரிகள் புரிந்து கொள்ள முடியும்.

பெரியார் தமிழர்களிடையே பெரும்பான்மை சமூகமான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மதிக்கப்படுகிறார். பெரியார் தான் தங்களின் மானத்துக்கும் உரிமைக்கும் போராடிய தலைவர் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பெரியார் சிலை மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் இந்த உணர்வுகளின் மீதும் புரிதலின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்பதை ‘சங்கி’கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் இத்தகைய பெரியார் சிலை அவமதிப்புகள் வழியாக சங்கிகளின் அரசியல் வாரிசுகள் தங்கள் தோல்வியை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It