சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது ஒரு ஆசாமி செருப்பு வீச, அருகே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடத்தி செருப்பு வீசிய நபரையும் அவரைத் தூண்டிவிட்ட எச்.ராஜாவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

periyar dvk posterதமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அளித்த பேட்டியில், ‘எச்.ராஜாவின் தூண்டுதலினால் செருப்பு வீசிய ஆசாமியையும் ராஜாவையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையிலும் தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்த மதவெறிக் கும்பலை வன்மையாகக் கண்டித்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி அறிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கில் விநாயகன் சிலைகளை போக்குவரத்துக்கு நெருக்கடிகளை உருவாக்கி சாலைகளில் வைத்து காவல்துறை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மதத்தை அரசியலாக்கும் சில மதவெறி அமைப்புகள் ‘விழா’ கொண்டாடின. பகுத்தறிவாளர்களால் எந்த ஒரு சேதாரமும் இந்த சிலைகளுக்கு ஏற்படவில்லை. மதத்தை அரசியலாக்கி வன்முறையைத் தூண்டுவதை எதிர்த்தும் நீதிமன்றம் காவல்துறை விதித்த ஒழுங்குமுறைகளை சுட்டிக்காட்டியும்தான் ஈரோடு, சென்னையில் பெரியார் கைத்தடிகளை ஏந்தி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அற வழியில் போராடி கைதானார்களே தவிர, விநாயகன் சிலை களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடவில்லை.

பெரியார் விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தியபோதுகூட காசு கொடுத்து கடையில் வாங்கிய விநாயகன் பொம்மைகளை உடைக்கச் சொன்னாரே தவிர, கோயிலிலிருந்து விநாயகன் சிலைகளை எடுத்து உடையுங்கள் என்று கூறவில்லை.

கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட போது ஒரு செருப்பு அவர் மீது விழுந்தது. ரிக்ஷாவில் வந்த பெரியார் ரிக்ஷாவைத் திருப்பச் சொல்லி, மற்றொரு செருப்பைத் தேடி எடுத்து, ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படுமே என்றார். அதே இடத்தில் கடலூரில் பெரியாருக்கு சிலை எழுப்பி, சிலையின் பீடத்தில் ‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் எழுதிய கவிதை செதுக்கப்பட்டது.

1971இல் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் பெரியார் தொண்டர்கள் இராமன் படத்தை செருப்பால் அடித்ததாகக் கூறி பார்ப்பனர்கள், பார்ப்பனிய சக்திகள், பெரியார் படத்தை செருப்பால் அடிப்பதாக செய்திகள் வந்தன. உடனே பெரியார், “நானே பாதி விலையில் எனது படத்தையும் செருப்பையும் அனுப்புகிறேன். தேவைப்படுவோர் எழுதுங்கள். எனது படத்தை செருப்பாலடிக்கும்போது அதன் வழியாக எனது ராமன் எதிர்ப்புப் பிரச்சாரம் மேலும் பரவும். எப்போதுமே எனது எதிரிகள் வழியாகத்தான் எனது கருத்துகள் பரவி வருகின்றன” என்று அறிக்கை விடுத்தார்.

இப்போதும் பெரியார் கருத்து மேலும் வீரியமாக மக்களிடம் பரவவும், மதவெறி எதிர்ப்பு உணர்ச்சியை முடுக்கி விடவுமே இந்த செருப்பு வீச்சுகள் பயன்படத் தொடங்கியிருக்கின்றன. மனநோயாளியாக மாறி நிற்கும் பார்ப்பன எச்.ராஜாவின் சாக்கடைப் பேச்சுகள், பெரியார் கொள்கைகளை மேலும் தீவிரமாக்கி, திராவிட இயக்க உணர்வுகளை இளைஞர்களிடம் கொதி நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

இராமன் வனவாசம் போனபோது அவனது ‘செருப்பு’ இந்த ‘தேசத்தை’யே ஆட்சி செய்ததாக இராமாயணத்தை எழுதி பரப்பி வருவது பார்ப்பனக் கூட்டம். ஆனால் மனிதன் காலில் செருப்புப் போட்டு நடப்பதையே குற்றமாக்கி தண்டனை வழங்கியது இந்து மதம் கட்டமைத்த ஜாதி வெறி. அந்த இழிவுகளைத் துடைப்பதற்கும் ஜாதியக் கொடுமைகளை ஒழிப்பதற்கும் காலம் முழுதும் போராடிய தலைவர் சிலை மீது இப்போதும் செருப்பு வீசும் ‘விபீடணர்கள்’ இருக்கிறார்கள்.

பெரியார் இயக்கத்தின் கூட்டங்கள் நடக்கும் பகுதியிலேயே மேளதாளங்களுடன் சாமி ஊர்வலம் வந்தால் மேடைப் பேச்சை நிறுத்தி சாமி ஊர்வலத்துக்கு வழிவிட்டு அது கடந்த பிறகு, பேச்சைத் தொடரும் பண்பாட்டைக் கட்டிக்காத்து வரும் இயக்கம் பெரியார் இயக்கம்.

பார்ப்பனியம் ஊட்டி வளர்த்து வரும் பண் பாடோ இதற்கு நேர் மாறானது. இது செருப்பை வீசும்; சிந்தனையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்; பசு மாட்டின் பெயரால் அப்பாவிகளை அடித்துக் கொல்லும்; கரசேவை என்று கூறி மசூதியை இடித்து நொறுக்கும். பார்ப்பனியம் கட்டமைத்த வேதப் பண்பாடே - வன்முறையை நியாயப்படுத்துவதுதானே ‘சம்பூக வதை’!

பார்ப்பன ராஜாக்களே!

பெரியார் சிலையை நோக்கி செருப்பைத் தூக்கிக் கொண்டு வரும் கோழைகளே!

இதையே தொடர்ந்து செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் நீங்கள் கேள்வி கேட்பாரற்ற அனாதையாக்கப்படும் காலத்தை விரைந்து உருவாக்குங்கள்.   உருவாக்கி வருகிறீர்கள்.

அதுதான் தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும்! தமிழகம் இந்த சவாலை சந்திக்கத் தயார்!

Pin It