lenin statue in Tripura

திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கையோடு பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பல் இடது தத்துவத்தைப் பிரதிபலிக்கும் அனைத்துச் சுவடுகளையும் திரிபுராவில் இருந்து அகற்றும் வெறியோடு களத்தில் இறங்கி இருக்கின்றது. பார்ப்பனிய பயங்கரவாதம் இந்திய மண்ணில் ஆணிவேர் பிடித்து ஆலம் விரிச்சமாக வளரத் தடையாக உள்ள அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சிய-லெனினியம் என அனைத்தையும் ஒழித்துக் கட்டும் முனைப்போடு பாராளுமன்றத்திலும், அரசு அதிகார மட்டத்திலும் தனக்கு உள்ள செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தி வீழ்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 25 ஆண்டுகாலம் திரிபுராவை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியை தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பல மோசடிகளை அரங்கேற்றி தோற்கடித்திருக்கின்றது. தோற்கடித்த கையோடு தனது பார்ப்பன பயங்கரவாத இந்துமதவெறி கொடுங்கோண்மையைப் பறைசாற்ற திரிபுராவில் பிலோனியா நகரில் இருந்த தோழர் லெனினின் சிலையை ஜேசிபி மூலம் அகற்றி இருக்கின்றார்கள். திரிபுரா முழுவதும் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு இருக்கின்றார்கள்.

திரிபுராவில் இந்துமதவெறிக் கும்பலால் நடத்தப்படும் அனைத்து காலித்தனங்களும் மத்திய அரசின் ஆசியுடன் நடந்து வருகின்றது. இடதுசாரி சித்தாந்தத்தின் மீது இத்தனை ஆண்டுகளாக கொண்டிருந்த ஆத்திரத்தையும், கோபத்தையும் லெனின் சிலையை உடைப்பதன் மூலம் வெளிக்காட்டி இருக்கின்றார்கள். இந்தியா முழுவதும் இனி தங்களது கட்டுப்பாட்டிற்குள் வருவதை யாருமே தடுக்க முடியாது என்ற மமதையில், லெனின் சிலையை உடைத்தது போலவே தமிழ்நாட்டில் பெரியார் சிலையையும் நாளை உடைப்போம் என பார்ப்பன வந்தேறி எச்ச ராஜா கொக்கரிக்கின்றான். இப்போது கூட தமிழ்நாட்டில் மோடியின் ஆசி பெற்ற அடிமை ஆட்சிதான் நடந்துகொண்டு இருக்கின்றது. பார்ப்பன கும்பலுக்கும் அவர்களை நக்கிப் பிழைக்கும் அடிமை சூத்திரக் கும்பலுக்கும் முதுகெலும்பு இருந்தால் நிச்சயம் அவர்கள் பெரியார் சிலையை உடைத்துப் பார்க்கலாம். நிச்சயம் இந்த அரசு அவர்களை ஒன்றும் செய்யாது என்பது அனைத்து பெரியார் இயக்கத் தோழர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை என்றால் என்ன, மானமுள்ள தமிழ் மக்கள் சும்மா விட்டுவிடுவார்களா!

ஆரிய - திராவிடப் போரை முச்சந்திக்கு இழுத்து சந்திக்கத் திராணி இருந்தால் சந்திக்கு இழுத்து விடட்டும். பின்னால் தேரை இழுத்து தெருவிலே விட்டுவிட்டு, அதை அநாதையாகப் போட்டுவிட்டு ஓடுபவர்கள் யார் என்பது தெரியும். எச்ச ராஜா மட்டுமல்ல, 2006 டிசம்பரில் ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையை உடைத்த அர்ஜூன் சம்பத் காலிப்பயல் வகையாறாக்கள் , பார்ப்பன ராமகோபாலனின் பாதங்களை நக்கி கதிமோட்சம் அடையக் காத்திருக்கும் இந்து முன்னணி சொம்பைகள், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் என அனைவருமே தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்ற பல வருடங்களாக முக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் சோம்பிப் போய் கிடக்கின்றார்கள். மோடி ஆட்சிக்கு வந்துவிட்டதாலேயே இங்கே கொட்டமடித்து விடலாம் என்று மேற்படி கைப்பிள்ளைகள் நினைத்தால், அந்த நினைப்பில் நெருப்பை வைத்துக் கொளுத்த தோழர்கள் எப்போதுமே தயாராகவே இருக்கின்றார்கள். முறுக்கிக் கொண்டு சண்டைக்கு வரும் மூடர்களுடன் மோதிப் பார்ப்பதும், முட்டியைப் பெயர்ப்பதும் தோழர்களுக்கு ஒன்றும் புதிதில்லை என்பதால் நாம் காத்துக் கிடக்கின்றோம், அந்த அரிய நிகழ்வை எதிர்நோக்கி.

சிலைகளை உடைத்தால் சித்தாந்தத்தை அழித்து ஒழித்துவிடலாம் என்று பிற்போக்குக் கும்பல் கனவு காண்கின்றது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், லெனின் என அனைவருமே கோடான கோடி சாமானிய உழைக்கும் மக்களின் மனங்களில் இருக்கின்றார்கள். தாங்கள் நேசிக்கும் தலைவரை, தங்களுக்கு என்ன தேவை என்பதை சிந்தாந்தங்களாக வடித்துக் கொடுத்துவிட்டுப் போன தலைவரை அவமதித்தால், அதற்கான எதிர்வினையை அந்த மக்களே நிச்சயம் ஆற்றுவர்கள். திரிபுராவை 25 ஆண்டுகள் ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சி அந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பிஜேபி சொல்வது உண்மையானால், நிச்சயம் அந்த மக்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது நடத்தப்படும் வரம்பற்ற தாக்குதலை எதிர்க்காமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். தங்கள் வாழ்க்கையை அழித்த யாரையும் மக்கள் எப்போதுமே கொண்டாடுவது கிடையாது. அப்படி இல்லாமல் மோசடியான வழிகளில் பெருவாரியான மக்களின் விருப்பத்திற்கு எதிராக பிஜேபி அங்கு ஆட்சியைக் கைப்பற்றி இருந்தால், நிச்சயம் அதற்கான எதிர்வினையை பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் அனுபவித்தே ஆகவேண்டும்.

திரிபுரா மாநில மக்களை மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு வறுமையிலேயே வைத்திருந்ததாக பிஜேபி பொய்யர்கள் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். ஆனால் 2004இல் இருந்து 2010 வரையிலான காலகட்டத்தில் திரிபுராவில் வறுமை விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 17.4 சதவீதமாக அதாவது 22.6 சதவீதம் குறைந்துள்ளதாக திட்டக் கமிஷனே கூறியிருக்கின்றது. நாட்டிலேயே அதிகபட்ச வறுமை குறைப்பு செய்த மாநிலம் திரிபுராதான். மேலும் 1960ல் இயற்றப்பட்ட திரிபுரா நிலச்சீர்திருத்தம் மற்றும் மீட்டளிப்புச் சட்டம் மற்றும் 2006 இல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி 7147 ஏக்கர் நிலத்தை பழங்குடி குடும்பங்களுக்கு மீட்டுத் தந்திருகின்றது. அதே போல மன்னர் நிலங்கள் மற்றும் உச்சவரம்பு உபரி நிலங்கள் என 35000 ஏக்கர் நிலங்கள் 37000 குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருகின்றது. மேலும் நாட்டில் பொதுவிநியோக முறை மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படும் மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. எதுவுமே செய்யவில்லை என்றால் எப்படி மக்கள் தொடர்ந்து ஒரு கட்சியை 25 ஆண்டுகள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது கூட பொய்யர்களுக்கு விளங்கவில்லை.

periyar statueஇப்போது கூட பிஜேபி அங்கு வெற்றி பெற்றதற்குக் காரணம் பிஜேபியின் வளர்ச்சி முழக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதற்காக அல்ல. திரிபுராவில் பல ஆண்டுகளாக இன மோதலைத் தூண்டிவரும் பல அமைப்புகளுடன் குறிப்பாக திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளுடன் ரகசிய கூட்டு வைத்து, அங்கு வங்காளிகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதே காரணமாகும். பிஜேபி போன்ற கடைந்தெடுத்த பார்ப்பன பாசிசக் கும்பலால் ஒரு மாநிலத்தில் வெற்றி பெற முடிகின்றது என்றால், அது நிச்சயம் சாதி, மத, இன மோதல்களை உருவாக்கித்தான். அப்படித்தான் இப்போது திரிபுராவிலும் வெற்றி பெற்று இருக்கின்றது. அதுவும் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் விலைபோன காங்கிரஸ்காரர்கள்தான்.

இப்படி ஒரு கேவலமான மோசடியான வெற்றியைப் பெற்றுவிட்டு அந்த வெற்றிக்களிப்பில் லெனினின் சிலையை உடைப்பது என்பது பாசிசம் உடல் முழுவதும் பரவியதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயலாகும். எந்த முற்போக்குவாதியும் கோயிலின் உள்ளே இருக்கும் சிலைகளை ஒருநாளும் உடைத்தது இல்லை. வருடம் முழுவதும் நம்பிக்கை என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் விதத்தில் ஆன்மீகவாதிகள் கொட்டம் அடித்தாலும், அதைச் சகித்துக் கொண்டேதான் கடந்து போகின்றார்கள். இன்னும் சொல்லபோனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரஜோதி மோசடியில் பிற்போக்குவாதிகளின் கரம்கோர்த்து செயல்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி. தாங்கள் ஆட்சி செய்கின்றோம் என்று அவர்கள் பல நூற்றாண்டு மோசடியை அம்பலப்படுத்தவில்லை. அப்படி பிற்போக்குவாதிகளை அனுசரித்துப் போகும் நல்லவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள். அவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் ஆயுத பூஜை கொண்டாடுவதையோ, இல்லை மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதையோ எப்போதுமே கண்டித்தது இல்லை. அப்படி இருந்தும் லெனினின் சிலையை உடைத்திருக்கின்றார்கள். இன்னும் CPM என்னதான் செய்ய வேண்டும் என்று பார்ப்பன பாசிஸ்ட்கள் விரும்புகின்றார்களோ தெரியவில்லை.

அதனால் லெனினின் சிலையை உடைத்ததை CPM-க்கு பார்ப்பன பாசிஸ்ட்கள் கொடுத்த பதிலடியாக நாம் பார்க்கவில்லை. அது ஒட்டுமொத்த இடதுசாரிகளின் மீதும் பார்ப்பன பாசிஸ்ட்கள் நடத்திய தாக்குதலாகவே நாம் பார்க்கின்றோம். CPM தலைவர்கள் இனியாவது பார்ப்பனப் பாசிசத்துக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை கட்சிக்குள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். தமிழகத்தைப் பொருத்தவரை பார்ப்பன பாசிஸ்ட்கள் பெரியாரின் சிலை உடைக்கும் நாளுக்காக நாம் காத்துக் கிடக்கின்றோம். உச்சநீதி மன்றம் உத்திரவிட்ட பின்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று திமிர்த்தனமாக பேசி ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபத்தையும், பிஜேபி கும்பல் சம்பாதித்து வைத்திருக்கின்றது. இன்னும் நீட்தேர்வு திணிப்பு, இந்தித் திணிப்பு, தமிழ்மொழியை அவமதித்தது, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது என தொடர்ச்சியான தமிழக மக்கள் மீதான தாக்குதலால் தங்கள் கோபத்தைக் காட்ட தமிழக மக்கள் வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றார்கள். அதற்கு ஈரோட்டுக் கிழவனின் சிலை பயன்பட்டால் நமக்கு மகிழ்ச்சியே.

- செ.கார்கி 

Pin It