periyar 636“புதுவை முரசு” என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவை (புதுச் சேரி)யில் இருந்து சில மாதங்களாக வெளிவருவது யாவருக்கும் தெரிந்ததாகும். அப்பத்திரிகை ஆரம்பித்ததின் னோக்கமே சுயமரியாதைக் கொள்கைகளைப் பறப்ப வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப்பட்டதாகும்.

அப்பத்திரிக்கைக்கு இப்போது திரு.எஸ். குருசாமி பி.ஏ., அவர்கள் ஆசிரியராய் இருக்கச் சம்மதித்து இருக்கின்றார். திரு. குருசாமியைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம், அவர் பல நாள் குடி அரசு ஆபீசிலும், ரிவோல்ட் பத்திரிகை பிரசுரத்தில் முக்கியஸ்தராகவும் இருந்து வந்தவர். சுயமரியாதை இயக்க கொள்கைகள் முழுவதும் நன்றாய் உணர்ந்தவர்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய உலக ஞானப் பாண்டித்தியம் உடையவர். இவ்வியக்கத்திற்கே தனது வாழ்நாளை பயன்படுத்த கவலை கொண்டுள்ள ஒரு உண்மைச் சுயமரியாதை வீரர். அவர் தனது சுயமரியாதை உணர்ச்சிக் கேற்ற துணைநலம் கொண்டவர். ஆகவே அப்படிப் பட்ட ஒருவரால் நடத்தப்படும் பத்திரிகை சுயமரியாதை உலகத்திற்கு சிறந்த பயனளிக்கக் கூடியது என்பதில் யாவருக்கும் சந்தேகமிருக்காது.

ஆகவே அப்பத்திரிகையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியது நாட்டின் சுயமரியாதையில் பற்றுள்ளவர்கள் கடமையாகும்.

சந்தா வருஷம் 1-க்கு
உள்நாட்டுக்கு ரூ. 3-0-0
வெளிநாட்டுக்கு ரூ. 5-0-0
ஆயுள் சந்தா ரூ. 30-0-0

விலாசம் :- “புதுவை முரசு” காரியாலயம், நெ.4 லல்லி தொலாந்தா வீதி, புதுச்சேரி, S.I. 

***

“சண்டமாருதம்” - ஆசிரியர் அ. பொன்னம்பலனார்

கோட்டையூரிலிருந்து வெளிவரும் “சண்டமாருதம்” என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப் பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கேற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதே யாகும்.

அதன் ஆசிரியரான திரு. அ. பொன்னலம்பனாரைப்பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். என்னேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராக்ஷ மாலை பூண்டு தேவார திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல்களை கண்களில் நீர் ஒழுகத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசையோடு பாடிப்பாடி சைவப் பிரசாரம் செய்தவர் - பூவாழூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர்களில் ஒருவராய் இருந்தவர்.

அப்படிப் பட்டவர் சுயமரியாதையில் திரும்பி “சண்டமாருதம்” போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே “சண்டமாருதம்” என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே தமிழ் மக்கள், சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய்ச் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமை யாகும்.

அதன் வருட சந்தா ரூ. 3-0-0

வெளிநாட்டுக்கு ரூ. 4-0-0

விலாசம் :- “சண்டமாருதம்” ஆபீஸ், கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.

(குடி அரசு - மதிப்புரை - 04.01.1931)

Pin It