இவ்வாரம் “திராவிடன்” “இந்தியா” என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்து வந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றியதாகும்.

periyar and karunadhi 350எப்படி இருந்த போதிலும் இவைகள் இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு வக்காலத்து பேசும் வகையில் நமக்கு எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக்கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர்பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டியிருக்கின்றது.

ஏனெனில் நாமோ பல மதங்களையும் பல சமயப் பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், பல சமூகக் கொள்கைகளையும் அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை, உயர்வு, தாழ்வு வித்தியாசத்தையும், தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு துலைத்தாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் “கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்மந்தமுண்டாக்குவதே மதம்” என்றும், அல்லது “கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் உள்ள சம்மந்தத்தை உணரச் செய்வதே மதம்” என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையையும் சமயக் கொள்கையையும் கண்டித்து அவைகள் முட்டாள் தனம் என்பதாக நிரூபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதானால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும், இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின்றோம்.

அதுபோலவே சில சமூகத்தாரும். சில சமயத்தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமூகமே மேலானதென்று வஞ்சித்து, ஆதீக்கம் பெற்று. அவ்வாதிக்கத்தை நிலைநிறுத்த, “அரசியல்” என்றும், “தேசீயம்” என்றும், “காந்தீயம்” என்றும், “சத்தியாக்கிரகம்” என்றும் பல சூக்ஷித் துறைகளை உண்டாக்கி, அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்து வரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும், அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடனும், சில சமூகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளை கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் “தேசீய ஒற்றுமை” கெடுவது மாத்திரமல்லாமல் “தேசீய உணர்ச்சி” கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவைகள் தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று, அதாவது “திராவிடன்” தனது முதல் இதழில் “சமயத் துவேஷம், சமூகத் துவேஷம், மதத் துவேஷம் முதலியன இல்லாமல் காக்கும்” என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இரண்டு, “இந்தியா” தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளை கிளப்பி தேசீய ஒற்றுமைக்கு இடர் செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சை கட்டி நின்று கொண்டு இருக்கின்றது.

ஆகவே “இந்தியா” “திராவிடனை” விட ஒருபடி முன்னேறி இருக்கின்றதென்றே சொல்லுவோம். எனவே குடி அரசுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும்.

மற்றபடி காங்கிரசுக்கும், சமயத்திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமூகங்களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும். எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு “உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகைகளாகும்” என்னும் கருத்தின் மீது அப்பத்திரிகைகளையும் ஆதரித்து, அதன் உள்எண்ண மனப்பான்மையை உணர்ந்து கொள்ளுவதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோதிடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்பனரல்லாதார்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாகவும் இருந்தவர்களாவார்கள். ஆதலால் அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்களாவார்களாதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டுவிடுகின்றோம்.

விலாசம்:-

“திராவிடன்”

14, மவுண்ட்ரோட், சென்னை.

“இந்தியா”

11-ஜெனரல் பாட்டர்ஸ் ரோட்,

மவுண்ட் ரோட், சென்னை.

(குடி அரசு - கட்டுரை - 10.05.1931)

Pin It