கவியரசர் தாகூர், கவிஞராகப் போற்றப்படுமளவுக்கு அவரது புதினங்களும் நாடகங்களும் படிக்கப்படாதது குறையே. ஏனெனில், அவருடைய புதினங்களிலும் நாடகங்களிலும்தான் அவருடைய தேசிய, பெண்ணியச் சிந்தனைகள் தெளிவாக வெளி யாகியுள்ளன. அவருடைய கீதாஞ்சலியும் இறைமையை மனிதத்தோடு இணைத்துக் காட்டினாலும், அது வாழ்வுக்கோர் கவிதாஞ்சலி எனப் புகழப் பட்டாலும், அவருடைய புதினங்களைப் போல, சமுதாயப் பிரச்சினைகளை சராசரி மனிதர்களோடு சம்பந்தப்படுத்தவில்லை. குறிப்பாக அவரது ‘வீடும் உலகமும்’, ‘கோரா’ ஆகிய புதினங்கள் பெண்ணி யத்துக்கும் தேசியத்துக்கும் உள்ள தொடர்பையும், தேசியத்துக்கும் உலகளாவிய மனித நேயத்துக்கும் உள்ள உறவையும் ஆழமாக ஆய்வு செய்கின்றன.

அவரது ‘வீடும் உலகமும்’ என்ற புதினம், சுதந்திரப் போரின் பின்னணியில், ஒரு பெண் வீட்டுக்கும் நாட்டுக்குமிடையே போராடுவதைச் சித்திரிக்கிறது. விமலாவை மணந்த பணக்கார, முற்போக்குச் சிந்தனையுள்ள நிகில், அவளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்கிறான். அவளுக்கு நாட்டுப்பற்று இருப்பினும் தேசத்தைத் தெய்வமாக வழிபடுவதை அவன் ஏற்கவில்லை. “நான் தர்மத்தைத் தான் வழிபடுவேன். அது தேசத்தைவிடப் பெரிது” எனக் கருதுகிறான். ஆனால் அவன் நண்பன் சந்தீப், மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவன். அவன், விமலாவையும் இந்தப் போரில் ஈடுபடுத்துகிறான். வங்கத்தின் ஆற்றல் அதன் சக்தி பெண்மையில்தான் மிளிர்கிறது, அந்த சக்திதான் தன்னை வழிகாட்ட வேண்டும் என சந்தீப் கூறுகிறான். விமலா, அந்தப் பேச்சால் கவரப்பட்டு, அவனது வன்முறை சார்ந்த சுதேசி போராட்டத்தில் கலந்து கொள்கிறாள். ஆனால் அதில் எழுந்த வன்முறையில் தன் கணவனை இழக்கிறாள். நாட்டுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பெண், தன் கணவனை இழந்தபோது, தன் உலகத்தையே இழக்கிறாள்.

இதனால் தாகூர், பெண் படிதாண்டாப் பத்தினியாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக நாம் கொள்ளக் கூடாது. முதல் இந்திய நாவல் என்று கருதப்படும் பங்கிம் சந்திரரின் ஆனந்த மடமும் மற்றைய இந்திய மொழிகளின் முதல் நாவல்களும் (பிரதாப முதலியார் சரித்திரம் உட்பட) பெண் வீட்டை விட்டு வெளியேறிப் பல அதிசய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுக் கணவனை மீட்பதாகக் காட்டுவது, பெண்ணியக் கூறு என்று கருதப்படுகிறது. பண்டைய காப்பியங்களில் ஆண் வெளியுலகம் சென்று வீரசாகசங்கள் செய்தான். உரைநடைக் காப்பியமான புதினத்தில், பெண்மையின் தேடல் தொடங்குவதாகக் கூறுவர். ஆனால், தாகூர் அதை முழுமையாக ஏற்பதாகத் தெரியவில்லை. வீட்டையும் நாட்டையும் பேணுபவளே பெண் எனக் கருதுகிறார்.

மேலும், தாகூரின் பெண்ணியத்தோடு தேசியம் இணைக்கப்பட்டாலும், பெண்ணையும் தேசத் தையும் இறை சக்தியாக வழிபடுவதை, சமயம் சார்ந்த தேசியத்தையும் பெண்ணியத்தையும் அவர் ஏற்கவில்லை. மார்க்சியத் திறனாய்வாளரான லூக்காக்ச் கருதுவது போல, இது காந்தியத்தையும் முழுமையாக ஆதரிக்கவில்லை. சுதேசி போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாறுவதை ஏற்காத அவர், தேசியம் ஒரு குறுகிய சுவராகி விடக் கூடாது என்றும் கருதினார்.

இதற்குச் சில ஆண்டுகள் முன்பே எழுதப் பட்ட ‘கோரா’வில் இந்தப் பிரச்சினைகள் மேலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. ‘கோரா’ என்ற இளைஞன், ஒரு இந்து தேசியவாதி. அவன் இந்தியாவின் பழைமையில் ஆழ்ந்த நம்பிக்கை யுடையவன். இந்தியர்கள் தங்களது ஆண்மை பலத்தால் அன்னியர்களை விரட்ட வேண்டும் என்று நினைத்தான். அவனும் அவனது நண்பன் பினாயும், பரேஷ் பாபு என்ற பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர் குடும்பத்தோடு தொடர்பு கொள்ளும் போது, அவனது தனித்த தேசியம், அவரது மேற் கத்திய தேசியத்தோடு மோதுகிறது. அவன் ஒரு அகன்ற சத்தியத்தை உணர, அவரும் அவரது சுவீகார புத்திரி சுசரிதாவும் உதவுகின்றனர்.

ஏனென்றால், கோரா பெண்ணையையும், வீட்டில் வேலை செய்யும் ஒரு கிறித்துவ வேலைக் காரியையும் முதலில் மதிக்கவில்லை. ‘எல்லையற்ற ஒன்று (டீநே) ‘எல்லையற்ற பல’ (ஆயலே)வின் தன்னைக் காட்டிக் கொள்கிறது என்ற பன்மையை ஏற்கும் போதுதான் உண்மையான தேசியம் உருவாகிறது. இதை சுசரிதா உணர்த்த அந்த உண்மையான இந்தியாவைத் தன்னை வளர்த்த தாய் ஆனந்த மோயியில் உணர்கிறான்.

இந்தப் புதினத்தில் பெண்மைதான் தலைவனின் முழுமையான, உண்மையான தன்மையை மட்டு மின்றி, முழுமையான, உண்மையான இந்தியாவையும் உணர வைக்கின்றன. ஏனென்றால் முழுமையான, உண்மையான இந்தியாவே பெண்மைதான். கோராவின் தந்தை இறந்தபோது, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை அவருக்கு மறுக்கப்பட்ட போது, கோரா தான் பிறப்பால் இந்தியன் அல்லன் என்ற உண்மை வெளிப்படுகிறது. அப்போது அவனது அடிப்படைவாதம் தகர்ந்து விடுகிறது. அந்த வெறுமையில்தான் மறுபிறவி எடுக்கிறான். ‘இந்தியனாகப் பிறக்காவிட்டாலும் இந்தியனாக இருப்பேன்; இந்தியாவின் நன்மையையும் தீமையையும் ஏற்பேன்’ என்று அவன் எழும்போது தரிசிக்கும் இந்தியாவிலே வர்க்க, மதபேதங்களில்லை. அந்த இந்தியாவின் உருவகமாக அன்னை ஆனந்தமோயி காட்சியளிக்கிறாள்.

நான் நாடு முழுவதும் காணத் தேடியலைந்த தாய், இல்லத்தில் என் அறையில் எப்போதுமே இருந்திருக்கிறாய், உனக்கு ஜாதியில்லை, நீ பேதங்கள் கற்பிப்பதில்லை; உனக்கு வெறுப்பில்லை. நம் நலவாழ்வின் ஒரே படிமம் நீயே. நீதான் இந்தியா என்று கோரா கூறும்போது, இந்தியத் தாயை, ஓர் இந்தியத் தாயாக உருவகிக்கிறான். இன்று நான் உண்மையான இந்தியன், இந்து, முஸ்லிம், கிறித்துவன் என்ற பேதம் என்னிடம் இல்லை. ‘இன்று எல்லா ஜாதியும் எனது ஜாதி, எல்லா உணவும் எனது உணவு’ என்று கூறும்போது தன்னையும் அந்த முழுமையான, பன்மைத் தன்மை வாய்ந்த இந்தியாவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான்.

பெண்மையையும் தேசியத்தையும் இறைமை யாக வழிபடுவதை விரும்பாத தாகூர், சாதாரண தாயை இந்தியாவாகக் காண்கிறார், மனிதத்தை மதிப்பதால், அவர் தேசியத்தை சமயத்தோடு தொடர்புபடுத்த விரும்பவில்லை. பெண்ணையும் மண்ணையும் இணைத்துப் பார்த்த தாகூர், இரண்டையும் மனித நிலையிலேயே வாழ்த்தி வணங்கினார்.

இந்தக் கருத்தியலில் அவர் பங்கிம் சந்திரர் மற்றும் பாரதியுடன் வேறுபடுகிறார். பங்கிம் சந்திரர் பாரதத்தையும் பெண்ணையும் தெய்வ மாகவே உருவகித்தார். அவரது வந்தே மாதரம் இந்தியாவை ஒரு பெண் கடவுளாகவே பேசுகிறது. அதனால்தான் தாகூரின் ‘ஜனகண மன’ தேசிய கீதமாகத் தெரிவு செய்யப்பட்டது. அவருடைய பெண் படைப்புக்களும் தெய்வீக சக்தியாக உருவாக்கப்பட்டன. இது பற்றி மீனாட்சி முக்கர்ஜி என்ற திறனாய்வாளர் கூறுகிறார்.

‘பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா தனக்கு முன் பெண்களை நாட்டின் ஆத்மீக சக்தியாக தெய்வீக நிலைக்கு உயர்த்தியதை, தாகூர் ஏற்க வில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வது பெண்ணின் உயிருள்ள மனிதப் பண்பை மறுப்ப தாகும். தேசத்தைத் தாயாக வழிபடுவதும், பெண் களை ஆத்மீக சக்தியாக ஒரு இயக்கமில்லாத பண்பாக ஆக்குவதும், ஒரு கொள்கையின் இரு இணை கூறுகளே. ஒன்று, பெண்ணடிமையை நிரந்தரமாக்குகிறது; மற்றது, ஒரு நாட்டையும் அதன் மக்களையும் அருவ (யளெவசயஉவ nடிவiடிn) நிலைக் கொள்கையாக உயர்த்துகிறது.

தாய்வழித் தமிழ்ச் சமுதாயம், தாய்த் தெய்வங் களைப் போற்றியது; அம்மரபில் தோன்றிய மகாகவி பாரதி, பங்கிம் சந்திரரின் வந்தே மாதரத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். மற்றும் அரவிந்தர், நிவேதிதாவின் தாக்கமும் அவர் பெண்ணை சக்தி யாகவும், இந்தியத் தாயை மகாசக்தியாகவும் போற்றிக் கவிதை புனைய உந்து சக்தியாகியிருக்க வேண்டும். ஆனால் அவர் பெண்களில் தெய்வீகத்தை உணர்ந்தாலும், அவர்களது மனிதப் பண்பை மறுக்கவில்லை. அதே போல் பாரதத்தை ஒரு புதிய தாய்த் தொன்மமாக உருவாக்கினாலும், அதன் மனித சக்தியையும் போற்றினார். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்த நாடு என்றும் சிங்கமராட்டியர் முதலான மக்களின் அணி வகுப் பையும் தான் இந்தியாவாகத் தரிசித்தார். உருசியப் புரட்சியை உருவாக்கிய மாகாளி பராசக்தியின் கடைக் கண்பார்வையும் மக்கள் சக்தியின் மறு வடிவமே. அவர் பராசக்தியை வரலாற்றுச் சக்தி யாகவும், வாழ்வை மாறிமாறிப் புதுக்கிப் படைக்கும் சக்தியாகவே காண்கிறார்.

ஆனாலும் அவர் தாகூர் மாதிரி முழுக்க பெண்ணையும், நாட்டையும் மனித நிலையிலே படைத்ததாகக் கூற முடியாது. பங்கிம் சந்திரரில் தெய்வீக உருவகம் மிகுதி, தாகூரில் மனிதப் பண்பு மிகுதி. பாரதியிலே மனிதமும், இறைமையும் இரண்டற இணைந்துள்ளன.

 

மக்களின் கவியே வா!

தாகூர் 

 

ஏர்கொண்டு நிலத்தை உழுபவர்

தறியில் துணி நெய்பவர்

வலைவீசி மீன் பிடிப்போர்

உலகம் உண்டு உயிர் வாழ

உழைக்கும் உத்தமர்கள்

உலகத்தின் கவியின்

செய்தியை எதிர்நோக்கி

இங்கு காத்து நிற்கிறேன்.

விவசாயிகளின் கவியின்

தோழனின் செய்திக்காக

சொல்லும் செயலும்

ஒன்றிணைந்து நிற்கும் ஒப்பிலாக்கவி

நான் அறியாத லட்சோபலட்சம்

மக்களின் கவியே வா!

உலகத்திற்குத் தெரியாத உழைப்பாளி

மனிதனின் ஒளியினைக் காட்டு

கறைபடா உள்ளத்தைக் காட்டு

Pin It