தில்லை (சிதம்பரம்) நடராசன் கோயிலைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் தீட்சதப் பார்ப்பனர்கள் - தமிழில் தேவாரம் பாடுவதற்கு தடை போட்டு வருகிறார்கள். இதை எதிர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இறை நம்பிக்கையுள்ள ஆறுமுகசாமி என்ற சிவனடியார், தனது, 73வது வயதில் போர்க்கொடி உயர்த்தி, போராடி வருகிறார். தமிழக சட்டமன்றத்திலும், பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன், இந்தப் பிரச்சினையை எழுப்பிட, முதல்வர் கலைஞர், இது பற்றி சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, உரிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சட்டங்களையும் மீறி, பார்ப்பன ஆதிக்கம் நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, தில்லை நடராசன் கோயில் ஒரு சான்றாகத் திகழுகிறது. இந்தக் கோயில் தங்களுக்கே சொந்தம் என்றும், தாங்கள், ‘இறைவனால்’ நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும், தீட்சதப் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டு, நீதிமன்றங்களின் படிக்கட்டுகளிலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள். ‘நந்தனை’ தீயில் குளிக்க வைத்த அதே தில்லை நடராசன் கோயிலில் தமிழும் தீக்குளிக்க வேண்டும் என்று தீட்சதப் பார்ப்பனர்கள் கூறுகிறார்களா? தில்லை நடராசன் கோயிலுக்கும், தீட்சதப் பார்ப்பனர்களுக்கும் உள்ள உறவு என்ன? இந்தக் கோயிலைக் கட்டியவர்கள் யார்? வரலாறுகள் என்ன கூறுகின்றன! இதோ சில தகவல்கள்:

1. சிதம்பரம் கோயிலின் தல புராணப்படியே - இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல. கவுட தேசத்து மன்னனாக முடிசூட்ட வேண்டிய சிம்மவர்மன் என்பவன், தனது உடல் குறை காரணமாக முடி சூட்ட மறுத்து, புலிகள் உலவிய, சிதம்பரம் காடுகளில் இருந்த சிவகங்கை குளத்தில் குளித்து எழுந்தபோது, ‘நடராசன்’ அவன் முன் தோன்றினானாம். சிம்மவர்மன் என்ற பெயரை இரண்யவர்மன் என்று மாற்றினான், அவன்தான் பிறகு சிதம்பரம் நடராசன் கோயிலைக் கட்டினான். அவன் தான் கங்கைக் கரையிலிருந்து தீட்சதர்களை அழைத்து வந்தான் என்று, தீட்சதப் பார்ப்பனர்கள் நம்பும் ‘தல புராணமே’ கூறுகிறது.

2. தில்லை நடராசன் கோயிலைத் தொடர்ந்து செப்பனிட்டு வந்தவர்கள் சோழர்கள் தான். முதலாம் பராந்தக சோழன் (9 ஆம் நுற்றாண்டு) முதன்முதலாக கோயிலுக்குள் உள்ள ‘சிற்றம்பலத்துக்கு’ தங்கத்தால் கூரை வேய்ந்தான். விக்கிரமச் சோழன், தில்லை நகரின் நான்கு வீதிகளையும் சீரமைத்து, நடராசன் கோயில் தேரை ஓட விட்டான். இரண்டாம் குலோத்துங்க சோழன் ‘சிற்றம்பலம்’ முழுவதற்கும் தங்கத்தால், கூரை போட்டான்.

3. அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் மூவரும் சேர்ந்து மூவர் தேவாரம் பாடினார்கள். இவை தமிழ்ப் பாடல்கள். அப்போது, சமணப் புத்த மதங்கள் செல்வாக்கு பெற்றிருந்த காலம். இவை பார்ப்பனிய கருத்துக்களை எதிர்த்த மதங்கள். இவைகளை ஒழிக்க பார்ப்பன வேத மதக் கும்பல் தந்திரமாக ஒரு திட்டம் தீட்டியது. சமண புத்த மதங்களின் பார்ப்பன எதிர்ப்பு செல்வாக்கிலிருந்து, தமிழர்களை மீட்க, தமிழ் பக்திப் பாடல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, சமண புத்த மதங்களை - தமிழகத்திலிருந்து ஒழித்தது. பிறகு, தமிழ்ப் பாடல்களையும் ஒழிக்க திட்டமிட்டது.

4. தேவார திருவாசகப் பாடல்களை எல்லாம் நடராசன் கோயிலுக்குள் ஒரு அறைக்குள் போட்டு, பார்ப்பனர்கள் பூட்டி விட்டார்கள். இந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்த இராஜராஜசோழன் அதைத் தொகுக்க விரும்பியபோது, நடராசன் கோயிலுக்குள் அவை முடக்கப்பட்டுக் கிடப்பதை அறிந்து தீட்சதர்களிடம் போய் கேட்டான். தீட்சதப் பார்ப்பனர்களோ, தேவாரம் பாடிய, இறந்து போன அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் ஆகிய மூவரும் நேரில் வந்து கேட்டால்தான் தருவோம் என்று ‘சண்டித்தனம்’ செய்தனர். இராஜராஜசோழன் மூவரின் சிலைகளையும் எடுத்துப் போய் மீண்டும் தீட்சதர்களிடம் கேட்க, இது சிலைகள் தானே என்று தீட்சதர்கள் கூற, இராஜராஜசோழன் கோயிலுக்குள் இருக்கும் ‘நடராசனும்’ சிலை தானே என்று பதிலடி தந்தான். கதவை உடைத்து, உள்ளே கரையான் உண்டது போக எஞ்சியிருந்த தேவாரப் பாடல்களை மீட்டு நம்பியாண்டார் நம்பி எனும் புலவரைக் கொண்டு தொகுத்தான் இராஜராஜ சோழன்.

(மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜன் எழுதி இயக்கிய ‘இராஜராஜசோழன்’ திரைப்படத்தில்கூட இக்காட்சி இடம் பெற்றுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ராஜராஜசோழனாக நடித்து, தீட்சதர்களிடம் வாதிட்டு, கதவை உடைத்து, தேவாரத்தை மீட்டு வருவார்)

5. சிதம்பரம் கோயிலில் சைவக் கடவுளான நடராசன் மட்டுமல்ல, வைணவக் கடவுளான ‘பெருமாளும்’ இருக்கிறார். ஒரு காலத்தில் பெருமாள் கோயில் ‘சித்ரக் கூடம்’ எனும் பெரும் கோயிலாக இருந்தது என்றும், நடராசன் கோயில் அதனாலேயே ‘சிற்றம்பலம்’ அதாவது சிறு கோயில் என அழைக்கப்பட்டது என்றும் வைணவர்கள் கூறுகிறார்கள். சைவர்கள் இதை மறுக்கிறார்கள். பெருமாள் சிலை சைவக் கோயிலுக்குள் திணிக்கப்பட்டது என்பது சைவர்களின் வாதம்.

சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1135-50) நடராசன் கோயிலுக்குள் இருந்த பெருமாள் சிலையைப் பெயர்த்துக் கடலில் எறிந்தான். பின்னால் 16வது நூற்றாண்டில் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கன், மீண்டும் பெருமாள் சிலையை தில்லை கோயிலுக்குள் வைக்க முயற்சி செய்தான். இதைத் தடுத்து நிறுத்த, தீட்சதப் பார்ப்பனர்கள் கோபுரத்தில் ஏறி நின்று கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டனர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கிருஷ்ணப்ப நாயக்கர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான். மீண்டும் கிருஷ்ணப்ப நாயக்கரால் பெருமாள் சிலை, சிதம்பரம் நடராசன் கோயிலுக்குள் நிறுவப்பட்டது.

5. 1987 ஆம் ஆண்டே சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் கடந்த 19 ஆண்டுகளாக, அரசினால், ஒரு நிர்வாக அதிகாரியை இந்தக் கோயிலில் நியமிக்க முடியாத நிலைக்கு தீட்சதப் பார்ப்பனர்கள் மிரட்டி வருகிறார்கள்.

6. இத்தனைக்கும் இந்த கோயிலில் நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கோயிலை தமிழக அரசின் அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றார்கள். தீட்சதர்கள் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

“இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது. உண்டியல் வைக்காமல் பக்தர்களிடமிருந்து தீட்சதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்பு மிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அரசு நிர்வாக அதிகாரியை நியமிக்கலாம்” என்று மேற்குறிப்பிட்ட வழக்கில் 1997-ல் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலய்யா தீர்ப்பளித்துள்ளார். ஆனால், தீட்சதர்கள் அடுக்கடுக்காக வழக்குகளைப் போட்டு, தீர்ப்பை அமுல்படுத்த முடியாது தடுத்து முடக்கிப் போட்டுள்ளனர்.

7. நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சியின் போது தீட்சதர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாமி அய்யரும், மற்றொரு பிரிட்டிஷ் நீதிபதியும், வழங்கிய தீர்ப்பில், இந்தக் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல; சைவர்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

8. கோயில் கர்ப்பகிரகத்தில், தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றமே 2.4.1992-ல் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே. அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் 17.6.1992-ல் அளித்த தீர்ப்பில், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று கூறியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகு கருவறையில் மட்டுமல்ல, கருவறைக்கு எதிராக உள்ள ‘திருச்சிற்றம்’பலத்தில்கூட தமிழின் ஓசை கேட்கக் கூடாது என்று தீட்சதப் பார்ப்பனர்கள் மிரட்டி வருகிறார்கள்.

9. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 8.5.2000 அன்று சிவனடியார் ஆறுமுகச்சாமி ‘திருச்சிற்றம்பல’ மேடை ஏறி, தேவாரம் பாட முயன்றபோது, தீட்சதப் பார்ப்பன ரவுடிகள், கோவிலுக் குள்ளேயே பக்தர்கள் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, ரத்தக் காயங்களுடன் கோயிலுக்கு வெளியே வீசினர். தீட்சதர்களைக் குறிப்பிட்டு, ஆறுமுகசாமி காவல் நிலையத்தில் புகார் தந்தார்.

55 நாட்கள் கழித்துத்தான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்தது. அரசு தரப்பில் வழக்கு முறையாக நடத்தப்படாததால், தீட்சதக் கும்பல், விடுதலை பெற்றது. இப்போது, தமிழக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, சிவனடியார் ஆறுமுகசாமி, சட்டரீதியான உரிமையோடு ஜூலை 15 முதல் 20 வரை திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப் போவதாக அறிவித்தார். உடனே தீட்சதக் கும்பல், சிவனடியார் தேவாரம் பாடுவதற்கு, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தடையாணை வாங்கிவிட்டனர்.

10. கோயில் சொத்துக்களை பங்கு போடுதலில் தீட்சதர்களுக்கிடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. கோயில் நகைகளை தீட்சதப் பார்ப்பனர்கள் திருடிக் கொண்டு போனதாக அவர்களே ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர். கோயிலுக்குள் தீட்சதப் பார்ப்பனர்கள் அடிதடியில் இறங்கினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டார்; தீட்சதப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் போய், முடக்கி விட்டனர்.

11. இந்தக் கோயிலின் வருமானம் சுமார் ஒரு கோடி ரூபாய் கோயில் நிலத்திலிருந்து கிடைக்கும் குத்தகை, கடை, ஏலம், அபிஷேகக் கட்டணம், கடை ஏலம் மூலம் வரும் வருமானம் எல்லாம் தீட்சதர்களிடமே போய் சேருகிறது. இவைகளுக்கு எல்லாம் ரசீதோ, முறையான கணக்கோ கிடையாது.

12. இரவு நேரமானால் சிதம்பரம் ‘திருத்தலம்’, ‘டாஸ்மார்க்’ அவதாரமெடுத்து, ‘மது அருந்தும் பார்’ ஆகி விடுகிறதாம். அய்யப்பன் ‘தந்திரி’ வழியிலேயே தீட்சதர்கள் கோயிலை, பெண்களோடு சல்லாபம் நடத்தும் விடுதியாக்கி, அந்தப் ‘புனித ஆராதனை’யை ஆண்டவன் அனுக்கிரகத்தோடு அரங்கேற்றி வருகிறார்களாம்.
ஆனால் தமிழில் தேவாரம் பாடினால் மட்டும் ‘இவாள்’களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது!

13. இந்த இரவு நேர பூசைகள் வெளி வராமல் மறைக்கவே ஆருரைச் சார்ந்த செல்வராஜ் என்பவரையும், வீட்டுத் தரகர் ராயர் என்பவரையும் தீட்சதப் பார்ப்பனக் கும்பல் கோயிலுக்குள்ளேயே ‘மோட்சத்துக்கு’ அனுப்பிவிட்டது. அதாவது கொலை செய்து விட்டார்கள்.

14. கோயில் வருமானத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை, வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மோதி, “மோட்ச”த்துக்கு அனுப்பி விட்டனர்.

15. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதன் - சிதம்பரத்தை அடுத்த புவனகிரி தொகுதியைச் சார்ந்தவர். இப்போது மனித உரிமை பாதுகாப்பு மய்யத்தோடு இணைந்து, தமிழ் வழிபாட்டு உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் இவர், தீட்சதர்களுக்கு எதிராகவும், தமிழ் வழி பாட்டுக்கு ஆதரவாகவும், நீதி மன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தேதி வாரியாக பட்டியலிட்டு, பேசி வருகிறார்.

16. சிதம்பரம் தீட்சதர்கள் - நடராசன் கோயிலில் வழிபாட்டு முறைகளை தவறாக நடத்துகிறார்கள் என்றும் - ‘சிவ தீட்சை’ இல்லாத வைதீக ‘பிராமணர்களிடமிருந்து’ விபூதி வாங்க கூடாது என்றும், யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ஆறுமுக நாவலர். தில்லை பார்ப்பனர்களுக்கு அந்த காலத்திலேயே எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

1864-ல் தில்லையில் ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ என்ற அமைப்பை நிறுவி, தில்லை தீட்சதப் பார்ப்பனர்களின் முறைகேடுகளை அவர் அம்பலப்படுத்தினார்.

17. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் லண்டன் ‘பிரிவி கவுன்சிலில்’ சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கு ஒன்று வந்தபோது, அதை விசாரித்த நீதிபதி சேஷகிரி அய்யர் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். “புகழ் பெற்ற சிதம்பரம் புண்ணிய ஸ்தலத்தில் ஏராளமான தீட்சதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பூசை செய்யும் நடராசன் கடவுளோடு சேர்ந்து, தாங்களும் ‘பூலோகத் துக்கு’ இறங்கி வந்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த தீட்சதர்கள் கோயில் அர்ச்சகர் வகுப்பைச் சார்ந்தவர்கள் அல்ல” என்று கூறினார். இந்தக் கருத்தை ‘பிரிவி கவுன்சி’லும் ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: பி.சிதம்பரம் பிள்ளை எழுதிய கோயில் நுழைவு உரிமை)

அடுக்கடுக்கான ஆதாரங்கள் தீட்சதர்களுக்கு எதிராக அணி வகுத்து நிற்கின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்ததுபோல தமிழ் மன்னர்கள் கட்டிய புதுப்பித்த கோயிலுக்குள் ஒரு பார்ப்பனக் கும்பல் புகுந்து கொண்டு அரசு தலையீட்டையே தடுத்து நிறுத்திக் கெண்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டிலும் இந்தக் கதைகள் தொடருகிறது என்றால் பார்ப்பனர்கள் ஆதிக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

Pin It