17 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி வழங்கியுள்ள 'பொது மன்னிப்பின்' கீழ், விடுதலை செய்வதில் தமிழக அரசு முறைகேடாக செயல்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யவே கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத்துக்கொண்டு கலைஞர் ஆட்சி செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதலில் - இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு, சுப்ரமணியசாமி மனுதாக்கல் செய்தபோது, தமிழக அரசு அம்மனுவை நிராகரிக்கக் கோரியது. அதற்கான காரணம் - சுப்ரமணியசாமி கோரிக்கையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்பது அல்ல; சுப்ரமணியசாமியின் கோரிக்கையை தி.மு.க. அரசே தீவிரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் தனியாக ஏன் மனு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கருத்தாக அமைந்துள்ளது.

இவர்களின் மீதான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் - இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் என்று 'பந்தை' மத்திய அரசின் மைதானத்துக்குள், தள்ளிவிட, கலைஞர் ஆட்சி முயற்சித்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

நளினியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். துரைசாமி முன் வைத்த வாதங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வாதங்களை நீதிபதி அப்படியே ஏற்று, தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். நளினியின் விடுதலைகோரும் மனுவை பரிசீலிக்கக்கூடிய சிறை ஆலோசனைக் குழுவின் கூட்டம் - சிறை விதிகளின்படி நடக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். நாகமுத்து, எட்டு குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த சட்ட நுணுக்கங்களுக்குள் நாம் நுழைய விரும்பவில்லை. தார்மீகப்படியும் நியாயப்படியும் சில கேள்விகளை தமிழக அரசின் முன் வைக்கிறோம்.

ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தப்பட்டவர்கள் என்பதற்காகவே அவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையிலே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறதா? ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா? அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா? இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே! நளினியும் - அதேபோல் ஒரு குற்றத்தில் அதுவும் நேரடியாக தொடர்பு இல்லாத 'குற்றச் சாட்டில்' அதுவும், தி.மு.க. எதிர்த்து வந்த கருப்புச் சட்டமான 'தடா' சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டவர் தானே!

சோனியாகாந்தி அம்மையாரும், அவரது மகள் பிரியங்காவும் கருணையோடு இந்தப் பிரச்சினையை அணுக விரும்பும்போது, கலைஞர் மட்டும், இதில் தயக்கம் காட்டுவதில் நியாயமிருக்கிறதா? அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா? பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே? உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு - ஒரு நல்ல வாய்ப்பாகும்; இதைப் பயன்படுத்தி நளினியை விடுதலை செய்யும் முடிவை எடுப்பதே விவேகமானது; கலைஞர் செய்வாரா?

மவுனம் சாதிக்கிறார். 'இளவல்' வீரமணி, இதை விரும்ப மாட்டார் என்பதற்காக, நியாயமான ஒரு செயலை அரசு முடக்குவது சரியாகுமா என்பதே நமது கேள்வி! பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க 'தி.க.சி.' கோரிக்கை

"எழுத்தாளர் தி.க.சி. 'தீக்கதிர்' நாளேட்டில் எழுதி வெளிவந்த கடிதம். (26.9.2008)

சமூக அநீதியை - பொருளாதார அநீதிகளை முறியடிப்போம்" எனும் பி.சம்பத் கட்டுரை ('தீக்கதிர்' 17.9.08) படித்தேன். கட்டுரை, தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் சான்று காட்டி, எழுச்சியூட்டும் வண்ணம் கச்சிதமாக எழுதப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில், "1929 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியாரின் முழக்கம் இது" என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் கருத்துக்களும், பெரியாரின் புரட்சிகர முழக்கங்களும், எழுத்துக்களும், சிந்தனைகளும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஏழை - எளிய அடித்தட்டு மக்களிடையே, பெரியாரின் 130 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அதிகம் பரவவில்லை என்பது கசப்பான உண்மை.

இந்த இழிநிலையை மாற்ற, பெரியாரின் படைப்புக்கள் (எழுத்துக்கள், தலையங்க உரைகள் முதலியன) நாட்டுடைமை ஆக்கப் பெற வேண்டும். இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தலைவர்களும், ஏடுகளும், தமுஎச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் முயற்சியெடுக்க வேண்டும்.

Pin It