இராஜிவ் காந்தி கொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்கள் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம், தமிழக அரசே இவர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது.

அதன்படி அமைச்சரவையைக் கூட்டி விடுதலை செய்வதாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றினார் ஜெயலலிதா.

அவர் செய்த தவறு, அதை மத்திய அரசுக்கு அனுப்பியதுதான்.

இந்த வழக்கு சி.பி.ஐ. மூலம் நடத்தப்பட்டது என்பதனால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்றது மத்திய அரசு.

இந்தக் கருத்தை ஏற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த எழுவரின் விடுதலையை மறுத்துவிட்டார்.

இப்பொழுது மீண்டும் உச்சநீதிமன்ற அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதாவது மாநில அரசே அந்த 7 பேர்களின் விடுதலை குறித்த முடிவை எடுக்கலாம். அந்த முடிவை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். 161ஆம் சட்ட விதிப்படி ஆளுநர் முடிவெடுப்பார் என்பது அந்த தீர்ப்பு.

சட்ட விதி 162 மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அந்த முடிவை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆளுநருடையது என்று கூறுகிறது.

எனவே, விதி 162இன் படி மாநில அரசு எடுக்கும் முடிவை, அம்மாநில ஆளுநர் அதற்குக் கட்டுப்பட்டு நடைமுறைப்படுத்துவார்.

இந்தச் சட்ட நடைமுறைதான் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் எழுவரின் விடுதலையை உறுதி செய்கிறது. இதற்கான முழு அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது.

இதை மிகச் சரியாகத் தமிழக அரசு செய்தால் 7 பேர்களின் விடுதலை நிச்சயம்.

ஆனாலும், மீண்டும் இதில் மத்திய அரசு தலையிட்டு, விடுதலையைத் தடுத்து இழுத்தடிக்கவும் முயலும்.

எடப்பாடி தலைமையிலான இந்த அரசு அதற்கு இடம் கொடுக்காமல், 7 பேர்களின் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விரைவாகச் செயல்பட வேண்டும்.

மாறாக பா.ஜ.க.வின் கைப்பாவையாக இதில் செயல்படக்கூடாது.

இளமைக் காலமெல்லாம் இருட்டறையில். 27 ஆண்டுகள் காராகிருகத்தில். கரைந்து போனது அவர்களின் வாழ்க்கை.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் பட்ட துயரம் போதும். எஞ்சிய காலங்களிலாவது அவர்கள் வெளிச்சத்தைப் பார்க்கட்டும்.

தமிழக எடப்பாடி அரசு அந்த 7 பேர்களின் விடுதலையை உறுதி செய்து, புதிதாக ஒரு தீர்மாணம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

அந்தத் தீர்மானத்தை ஆளுநரும் ஏற்று, அவரின் ஆணையின் மூலம் அது நடைமுறைக்கு வந்து, 7 பேர்களின் விடுதலையைத் தமிழகம் பார்க்க வேண்டும்.

நடுவில் மத்திய அரசு என்னும் ஆமை புகுந்துவிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

செய்யுமா தமிழக அரசு-? செய்துதான் ஆகவேண்டும்!

Pin It