`ஒரு சமுதாய இயக்கம் இப்படி அளவுக்கு மீறி கருணாநிதியை ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?' என்று `ஆனந்த விகடன்' செய்தியாளர் - கி.வீரமணியிடம் கேட்கிறார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சொற்றொடர் `அளவுக்கு மீறி' என்பதாகும். ஆனால் அதற்குரிய அழுத்தம் பற்றி கி.வீரமணி கவலைப்படவே இல்லை.

'அளவுக்கு மீறி' என்ற வார்த்தையை அப்படியே அனாயசமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, `கலைஞருக்கான ஆதரவு' என்று, தனக்காக கேள்வியை திருத்திக் கொண்டு இப்படி பதில் கூறுகிறார், `கலைஞரை ஆதரிப்பது ஒரு குற்றமாகச் சொல்லப்படுமானால் அந்தக் குற்றத்தைப் பெருமையுடன் தொடர்ந்து செய்வேன்' என்கிறார், கி.வீரமணி.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி கூட, தங்கள் கூட்டணி கட்சிகளை ஆதரிப்பதா, விலக்குவதா என்பதை செயற்குழுவைக் கூட்டி தான் முடிவு செய்கிறது. ஆனால், பெரியார் கொள்கைகளுக்காக அந்தக் கொள்கைகளை நம்பி வந்துள்ள தொண்டர்களைப் பற்றி எல்லாம் கி.வீரமணி கவலைப்படவே இல்லை.

கொள்கை அடிப்படையில் ஆதரவும், எதிர்ப்பும் இருக்கும் என்று வழமையான வசனத்தையும் காற்றில் பறக்கவிட்டு, தனது விருப்பு வெறுப்புகளை முன் வைத்து, `ஆதரவு' எனும் நிரப்பப்படாத காசோலையை கையெழுத்திட்டு கலைஞருக்கு தரத் தயாராகவே இருக்கிறார்.

`சமூகநீதி காத்த வீராங்கனை' ஜெயலலிதா கி.வீரமணிக்கு, பெரியார் விருது வழங்கும்போது, எனது ஆயுள் உள்ளவரை உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதி பிரகடனத்தை வாசித்தவரும், இதே வீரமணி தான்!, இது கலைஞருக்கு தெரியாதா என்ன? `பெரியார் வாழ்நாளில் நிறைவேற்ற நினைத்த பல்வேறு சமூகப் புரட்சிகளையும் செய்து காட்டியவர் கலைஞர்' என்கிறார் வீரமணி. ஆக, வீரமணியின் கருத்தின்படி இனி பெரியார், இயக்கத்துக்கே தேவை இல்லை.

சூத்திரர் இழிவு நீங்கிவிட்டது; பார்ப்பனர்கள், பூணூலை அறுத்தெறிந்து விட்டனர்; சாதியமைப்பு தகர்ந்துவிட்டது; மூடநம்பிக்கைகள் எல்லாம் ஒழிந்து, மக்கள் முழு பகுத்தறிவாளர்களாகிவிட்டனர்; குலத் தொழில்கள் முற்றாக மறைந்து விட்டன; பெண்கள் சம உரிமை பெற்று விட்டார்கள்; தீண்டாமை என்பது கனவாகிவிட்டது; சேரிகள் மறைந்து விட்டன; தீண்டாமைக் கொடுமைகள் முடிவுக்கு வந்தவிட்டன; இரட்டை தம்ளர்களோ, தனிச் சுடுகாடுகளோ கிடையாது; இந்திய தேசியப் பார்ப்பனப் பிடியிலிருந்து - தமிழர்கள் விடுதலை பெற்று - தாய்நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்; இனி நிறைவேற்றப்பட வேண்டிய பெரியார் கொள்கை வேறு என்ன இருக்கிறது?

வீரமணியாரின் பார்வையில் இனி எதுவுமே இல்லை; சமூகப் புரட்சியே நடந்து முடிந்துவிட்டது. இதை அவரது கட்சியிலுள்ள `கட்டுப்பாடு மிக்க' பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவரும் `கட்டுப்பாட்டுடன்' நம்ப வேண்டும்; இல்லாவிடில் `துரோகிகள்' பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

Pin It